Published : 04 Jun 2020 08:59 AM
Last Updated : 04 Jun 2020 08:59 AM

ஜென் துளிகள்: ஜென் மனிதர் எப்படி நடந்துகொள்வார்?

ஒரு நாள், திடீரென்று ஏற்பட்ட பூகம்பத்தில், ஜென் மடாலயம் ஒன்று முழுமையாகக் குலுங்கியது. அதன் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. பல துறவிகள் பயந்து போயிருந்தனர். பூகம்பம் நின்றவுடன், அந்த மடாலய குரு, “நெருக்கடியான சூழலில், ஜென் மனிதர் ஒருவர் எப்படி நடந்துகொள்வார் என்பதைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு இப்போது உங்களுக்குக் கிடைத்தது.

நான் சிறிதும் பீதியடையவில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது, என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றிய முழு விழிப்புடன் நான் இருந்தேன். மடாலயத்தின் வலிமையான இடமான சமையல் கூடத்துக்கு உங்கள் அனைவரையும் நான் அழைத்துவந்தேன். அது ஒரு நல்ல முடிவு. ஏனென்றால், நாம் அனைவரும் அதனால் எந்தக் காயமும் இல்லாமல் தப்பித்துவிட்டோம்.

ஆனால், என் சுயக்கட்டுப்பாடு, அமைதியையும் மீறி, நானும் சற்றுப் பதற்றப்படவே செய்தேன். நான் ஒரு பெரிய குவளைத் தண்ணீரை முழுமையாக அருந்தியதைப் பார்த்த நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள். ஏனென்றால், சாதாரணச் சூழல்களில் இதுவரை நான் அப்படி நடந்தகொண்டதில்லை” என்றார் குரு. துறவி ஒருவர் மட்டும் புன்னகைத்தார். ஆனால், எதுவும் சொல்லவில்லை. “எதற்காகச் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார் ஆசிரியர். “அது தண்ணீர் அல்ல. நீங்கள் அருந்தியது சோயா சாறு” என்று பதிலளித்தார் அந்தத் துறவி.

மரண பயத்திலிருந்து விடுபடுதல்

ஜப்பானில் ஷோகுன் என்ற ராணுவ சர்வாதிகாரிக்கு வாள்கலைப் பயிற்சியளிக்கும் ஆசிரியராக டஜிமா நோ கமி என்பவர் இருந்தார். ஒரு நாள், ஷோகுனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவர், தனக்கும் வாள்கலைப் பயிற்சி அளிக்க வேண்டுமென்று டஜிமா நோ கமியிடம் கேட்டார். “நான் உங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறேன். நீங்கள் ஏற்கெனவே இந்தக் கலையில் சிறந்து விளங்குபவராகவே தெரிகிறீர்கள்.

உங்கள் மாணவராக ஏற்றுக்கொள்ளும் முன், நீங்கள் எந்த ஆசிரியரிடம் கலையைக் கற்றுக்கொண்டீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார் டஜிமா. அதற்கு, “நான் எந்த ஆசிரியரிடமும் இந்தக் கலையைக் கற்கவில்லை” என்று பதிலளித்தார் அந்த மெய்க்காவலர். “உங்களால் என்னை ஏமாற்ற முடியாது. எனக்கு நுட்பமான பார்வை உண்டு. அது எப்போதும் என்னை ஏமாற்றாது.” என்றார் ஆசிரியர். “நான் உங்கள் மேன்மைக்கு முரணான விஷயத்தைக் கூறவேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனால், எனக்கு வாள் கலையைப் பற்றி முறையாக எதுவும் தெரியாது” என்றார் அந்த மெய்க்காவலர்.

சிறிது நேரம், மெய்க்காவலருடன் வாள்கலைப் பயிற்சியில் ஈடுபட்டார் ஆசிரியர். சில நிமிடங்களில் பயிற்சியை நிறுத்திய ஆசிரியர், “நீங்கள் இந்தக் கலையைக் கற்கவில்லை என்று சொல்வதை நான் இப்போது நம்புகிறேன். ஆனால், நீங்கள் இந்தக் கலையில் ஆசிரியராகவே திகழ்கிறீர்கள். உங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார் ஆசிரியர்.

“என்னால் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். நான் சிறுவனாக இருந்தபோது, சாமுராய் ஒருவர், ‘ஒரு மனிதன் எப்போதும் மரணத்தைப் பற்றிப் பயப்படக் கூடாது’ என்று சொன்னார். அதிலிருந்து, மரணத்தைப் பற்றிய கேள்வி, என்னுள் சிறிதளவு கவலையை ஏற்படுத்தினால்கூட, அந்தக் கவலை முழுமையாக முடிவுறும்வரை அந்தக் கேள்வியை எதிர்கொண்டேன்” என்றார் அந்த மெய்க்காவலர். “ அதுதான் விஷயம். வாள்கலைப் பயிற்சியின் இறுதி ரகசியம் என்பது மரண பயத்திலிருந்து விடுபடுவதாகும். உங்களுக்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை.” என்றார் டஜிமா நோ கமி.

- கனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x