Published : 04 Jun 2020 08:43 AM
Last Updated : 04 Jun 2020 08:43 AM
ஓவியர் வேதா
பத்தாம் நூற்றாண்டில் பராந்தகச் சோழனால் பொற்கூரை வேயப்பட்ட பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவன் ஆடும் தில்லை அம்பலவாணனின் சன்னிதி உள்ளது. அதற்கு நேர் எதிரில் உள்ள நிருத்த சபையின் கீழ் வரிசையில் நடுநாயகமாக இறைவனை நோக்கியபடி பாணாசுரனின் சிற்பம் உள்ளது. எட்டுக் கரங்களில் இரண்டு கரங்களை உயர்த்தி இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தை ஆஹாவென்று வியந்து ரசித்தபடி உள்ளது.
மற்ற ஆறு கரங்களினிடையே பஞ்சமுக வாத்தியத்தையும், இருபுறங்களிலும் வேறு இரண்டு வாத்தியங்கள் என்று மூன்று வாத்தியங்களையும் இறைவனின் நடனத்துக்கு ஏற்ப இசைத்தபடி உள்ளான். மேலே இரண்டு கரங்களில் வலக் கரம் உள்ளங்கை தெரியும்படியும் இடக் கரம் புறங்கை தெரியும்படியும் உள்ளது. ரசிக்கும் பாவத்தில் கைகளை உயர்த்தும்போது விரல்களின் அசைவுகளையும் முகத்திலே மகிழ்ச்சியையும் மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் சிற்பி.
இசைக் கருவிகளை இசைக்கும் போது விரல்களில் ஏற்படும் அசைவுகளையும் மிகத் துல்லியமாகக் காட்டியுள்ளார் சிற்பி. சோழர்களுக்கே உரித்தான சிம்மத்தை மறக்காமல் பாணாசுரனின் கொண்டையிலும், கை ஆபரணங்களிலும் காட்டியுள்ள விதம் அற்புதமானது... இந்தச் சிற்பக் களஞ்சியம் ஒரு அடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட புடைப்புச் சிற்பமாகும். இந்த அளவில் அனைத்தையும் மிகத் துல்லியமாகக் காட்டியுள்ள சிற்பியின் கலைத்திறனுக்கு இச்சிலையின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மானசீகமாக என் நன்றிகளைச் சிற்பிக்குத் தெரிவித்தேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT