Published : 28 May 2020 09:38 AM
Last Updated : 28 May 2020 09:38 AM
- கனி
அனைத்தையும் அறிய முடியுமா?
துறவுப் பயிற்சியைத் தொடங்குவதற்காக புத்தரிடம் ஒருவர் வந்தார். பயிற்சிக்கு முன்னர் தனது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டுமென்று அவர் நிபந்தனையுடன் இருந்தார். அதற்கு புத்தர், “ஒரு மனிதர் விஷ அம்பால் காயப்படுத்தப்பட்டு மருத்துவரின் முன் இருக்கும்போது, மருத்துவரின் குலம், வயது, பணி, பிறப்பிடம் ஆகியவற்றை அறியாமல் சிகிச்சை செய்ய மாட்டேன் என்று நிபந்தனை போட முடியாது. அந்த மனிதர் அவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன்னால் இறந்தே போய்விடுவார். புத்தரிடம் கற்ற எல்லா போதனைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மைகளை புத்தர் விளக்கிய பிறகுதான் அவற்றைப் பின்பற்றுவேன் என்றும் சொல்லமுடியாது.” என்றார்.
இலக்கை அடைவதே இலக்கில்லை
வில்வித்தைப் பள்ளியின் குருவாக ஒரு துறவி இருந்தார். ஒரு நாள், அவருடைய சிறந்த மாணவர் ஒருவர், உள்ளூரில் நடைபெற்ற ஒரு போட்டியில், இலக்குகளைக் குறிபார்த்து அடிப்பதில் மாபெரும் வெற்றிபெற்றார். அனைவரும் அந்த மாணவரை வெகுவாகப் பாராட்டினார்கள். குருவுக்கும் மாணவருக்கும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்தன. ஆனால், மாணவரின் வெற்றி, குருவைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், குரு அந்த வெற்றியை விமர்சித்தார். மாணவர்கள் அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, “இலக்கை அடைவதே ஒரு இலக்கு இல்லை என்பதை நீங்கள் இன்னும் கற்கவேயில்லை” என்று பதிலளித்தார் குரு.
உங்களுக்குள்ளே இருக்கும் புதையல்
ஜென் குரு பாஷுவை சீனாவில் சந்தித்தார் டைஜு. “நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார் பாஷு.
“ஞானம்” என்று பதிலளித்தார் டைஜு.
“உங்களிடமே அந்தப் புதையல் வீடு இருக்கிறது. நீங்கள் ஏன் அதை வெளியே தேடுகிறீர்கள்?” என்று கேட்டார் பாஷு.
“என்னுடைய புதையல் வீடு எங்கே இருக்கிறது” என்று கேட்டார் டைஜு.
“நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதுதான் உங்கள் புதையல் வீடு” என்று பதிலளித்தார் பாஷு.
டைஜு மகிழ்ச்சியடைந்தார்.
அவர் தன் நண்பரிகளிடமும் இதைப் பகிர்ந்துகொண்டார்: “உங்கள் புதையல் வீடுகளின் கதவுகளைத் திறவுங்கள். அவற்றிலுள்ள புதையல்களைப் பயன்படுத்துங்கள்.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT