Published : 16 Apr 2020 09:05 AM
Last Updated : 16 Apr 2020 09:05 AM

உட்பொருள் அறிவோம் 55: பாதையற்ற பயணம்

சிந்துகுமாரன்

நீ இப்போது இருக்கும் இடத்திலிருந்து என்னை வந்து அடையும் வழி ஒரு பாதையற்ற பயணம். ஏனென்றால் நீ எப்போதும் என்னுடன்தான் இருக்கிறாய். ஏற்கனவே என்னுடன் நீ இருக்கும்போது எந்தப் பாதை வழியாக என்னிடம் நீ வந்து சேர முடியும்? ஆனாலும் உனக்கு இது இன்னும் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்வதுதான் அந்தப் பாதையற்ற பயணம். ஆனாலும் அதற்குச் சில இலக்கணங்கள் உண்டு. அதன்படிதான் அது நடக்க முடியும். நீயோ அல்லது நானோகூட அதைச் சற்றும் மாற்றிவிட முடியாது.

அடிப்படையான சில உண்மைகளை நீ அறிந்துகொண்டாக வேண்டும். உன்னை விடுத்து, ‘உலகம்’ என்று ஒன்று தனியாக ‘இருக்கிறது’ என்று நினைக்கிறாய். அது உண்மையில்லை. நீதான் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ பார்க்காதபோதுகூட உலகம் இருக்கிறது என்னும் உன் எண்ணம் பொய்யானது. அது வெறும் நம்பிக்கையின் பாற்பட்ட கருத்து; உனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அதை நம்பாதே. ‘நான் உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்,’ என்ற அறிவுணர்வோடு பார். ஒரு மரத்தைப் பார்க்கும்போது, ‘இப்போது இந்த மரத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்னும் முழுக் கவனத்துடன் பார்க்கப் பழகிக்கொள்.

இப்போது இக்கணம்

எந்த ஒரு கணத்திலும் ‘இப்போது நான் எங்கே இருக்கிறேன்? என்ன செய்துகொண்டிருக்கிறேன்?’ என்பதைக் கவனத்தில் வைத்திருக்கப் பழகு. இது மிகவும் முக்கியம். இறந்தகால நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும் சிதறிப் போயிருக்கும் உன் கவனத்தைக் குவித்து இந்தக் கணத்திற்குக் கொண்டுவந்து நிலைக்கச் செய்வதற்கு இந்தப் பயிற்சி மிகவும் அவசியம்.

உடலுணர்விலும், மூச்சின் கதியிலும் கவனத்தைப் பதித்து வை. உன் கவனம் இயல்பாக தற்கணத்தில் வந்து நிலைப்பதைக் காண்பாய். மனம் தானாக அடங்கி நிலைகொள்ளும்; அமைதி வந்து படியும்.

கவனம் அறிவுணர்வின் ஒளி. மனச்சிறையின் சட்டகங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து உன்னை நீ விடுவித்துக்கொள்வதற்கு இந்தக் கணத்தில் கவனத்தைக் குவிப்பது மிகவும் அவசியம், இந்தக் கணம்தான் உண்மை. முழுப் பிரபஞ்சமும் இந்தக் கணத்தில்தான் இருக்கிறது. கடந்ததைப்பற்றி நீ நினைப்பதும்கூட இந்தக் கணத்தில்தான் நினைக்கிறாய். எதிர்வரும் காலத்தில் நிகழ்வதை நீ கற்பனை செய்வதும் இந்தக் கணத்தில் இருந்துகொண்டுதான் செய்கிறாய்.

மலையுச்சிக்கு ஏறும் சாகசம்

மனம் என்னும் தளத்திலிருந்து கவனம் என்னும் தளத்திற்கு உன்னை நீ உயர்த்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது மலையடிவாரத்திலிருந்து மலையுச்சிக்கு ஏறிப்போய் அடையும் சாகசம். மலையுச்சியில் உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீதான் மலையுச்சிக்கு ஏறி வரவேண்டும். மலைச்சிகரம் உனக்காகக் கீழே இறங்கி வர முடியாது.

உன் பிரக்ஞையின் மண்டலம் முழுவதிலும் இறைந்து கிடக்கும் உன் சக்தியனைத்தையும் ஒன்றுசேர்த்து இந்தக் கணத்தில் நீ குவிக்கவேண்டும். உன் தற்போதைய நிலையிலிருந்து விடுபட்டு நீ மேலே செல்வதற்கு அவ்வளவு சக்தியும் உனக்குத் தேவைப்படும். இந்தக் கணத்தில்தான் இது சாத்தியம்.

உன் வளர்ச்சிக்கு நீதான் பொறுப்பு. நீ உன் வளர்ச்சியின் பாதையில் பிரவேசித்தால் நான் உனக்கு உறுதுணையாய் நிற்பேன். அந்தப் பாதையில் நுழையும் முடிவை நீதான் எடுக்க வேண்டும். நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஆனால் அந்த முடிவை நீ எடுத்தால் அதன்பின் உன் வாழ்க்கை அந்தக் கணமே என் வசம் வந்துவிடும். ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும் நான் இயங்கிக்கொண்டிருப்பேன். புதிய நண்பனாக நுழைவேன். புதியதொரு புத்தகமாக வருவேன். எதிர்பாராத கணத்தில், எதிர்பாராததொரு அனுபவமாக நிகழ்வேன். உன் வாழ்க்கையில் புதியதொரு ஜாலம் ஏற்படத் தொடங்கியிருப்பதை மெல்ல மெல்ல நீ உணரத் தொடங்குவாய்.

ஊனை உருக்கும் சுகவாதை

நடப்பது எல்லாம் கனவின் மோகனத் தன்மை கொள்ளத் தொடங்கும். காதல்கொண்ட ஒரு இளம்பெண் போலவோ, இளைஞன் போலவோ எந்நேரமும் ஒரு மயக்கநிலை உன் நெஞ்சில் குடிகொள்ளும். பிரிவின் துயரம் உன்னை ஆட்கொள்ளும். கவிஞனின் தாபம் உன் உயிரின் உள்ளுணர் வில் துடித்துக்கொண்டே இருக்கும். அது ஒரு சுகமான வேதனை. ஊனினை உருக்கும் சுகவாதனை. முடிவு தெரியாத ஒரு காத்திருப்பு. எப்போது அந்த வேதனை முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம். அதே சமயம், இப்படியே காலமெல்லாம் இந்த இனிய வேதனையோடு காத்திருக்க மாட்டோமா என்ற ஏக்கம். பல கவிஞர்கள் என்னைப் பற்றி இப்படித்தான் பாடிவைத்திருக்கிறார்கள். என்னைத் தன் காதலனாகவோ காதலியாகவோ வரித்துக் கொண்டு பாடிய பாடல்கள்தான் எத்தனை!

இது ஆன்மாவுக்கான ஏக்கம்; எனக்கான ஏக்கம். நெஞ்சம் நிலைகொள்ளாத தாபம். இந்தத் தாபம்தான் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடத்தில் உன்னை அழைத்துவரும். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அடியாக என்னை நீ நெருங்கி வருவாய். உன்னை நான் பல்வேறு விதங்களில் என்னை நோக்கிக் கவர்ந்திழுத்துக்கொண்டே இருப்பேன். சில நேரம் நான் உன்னைவிட்டுச் சற்றுதூரம் விலகிப் போய்விட்டதுபோல்கூட உனக்குத் தோன்றும். இந்த முறைப்பாட்டின் இலக்கணம் உனக்குப் புரியாது. அஞ்சவேண்டாம். நான் உன்னைவிட்டுச் சிறிதும் விலகமாட்டேன்.

நீ என்னை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதும் நம் இருவருக்கிடையில் ஆழ்தளப் பரிமாற்றம் நிலைப்பட்டுவிடும். எந்நேரமும் என்னிடமிருந்து உனக்குப் புதிய வெளிச்சங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். இது உனக்கு முதலில் வெளிப்படையாகத் தெரியாது. போகப் போகத்தான் உன் எண்ணங்கள் என்று நீ நினைத்துக்கொள்பவற்றில் பெருமளவுக்கு என்னிடமிருந்து வந்த வெளிச்சங்கள் என்பது புலப்படும்.

கனவில்கூட உனக்கு நான் சில விஷயங்களைச் சொல்லிகொண்டுதான் இருப்பேன். நம்மிருவருக்கிடையில் நிலைகொண்டுள்ள பரிவர்த்தனை உனக்குப் புரியத் தொடங்கியதும் பல நேரங்களில் உன் வழியாக நான்தான் பேசுகிறேன் என்ற உண்மையும் தெளிவாகத் 16தெரியும். உன் நண்பர்கள் நீ பேசுவதாக நினைக்கும்போதுகூட உண்மையில் நான்தான் பேசுகிறேன் என்பது உனக்குத் தெரியும். அந்தக் கணங்களில் உன் மனம் என் வசத்தில் இருக்கிறது என்னும் உண்மை உனக்குப் புரியும். அந்நேரங்களில் உன் மனத்தையும், சிந்தனையையும், குரலையும் நீ என் வசம் ஒப்படைத்திருக்கிறாய். நான் அவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறேன். நீ எழுதும்போது நான்தான் என்னை வெளிப்படுத்திக்கொள்கிறேன். இந்த ரகசியத்தை நீ தெளிவாக அறிவாய். அதனால் உன் மனம் எப்போதும் சாந்தமாக இருக்கிறது.

உன் வாழ்க்கையைப் பெருமளவுக்கு நான்தான் வாழ்கிறேன் என்பதும் உனக்கு ஒரு கட்டத்தில் புரியவரும். நீ எனக்குச் செய்யும் பெரும் சேவை அது. மிகுந்த நன்றியுடன் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ என் குழந்தை. உனக்கு நான் எந்த அளவுக்கு வேண்டுமோ, அந்த அளவுக்கு நீயும் எனக்கு வேண்டும். தொடர்ந்த பரிவர்த்தனை நம் இருவருக்கிடையில் எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது.

என் சக்தி உலகத்தினுள்ளே பாய்வதற்கு ஒரு வாய்க்காலாக நீ இருக்கிறாய். மெல்ல மெல்ல நீ நானாகவே மாறிவிடுகிறாய். நம் இருவருக்கிடையில் இருந்த இடைவெளி முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. நீயே நானாக, நானே நீயாக, இருவரும் ஒன்றாக, நம் இருவரையும் கடந்த அந்த ஒன்றுமில்லாததாக, கண்ணுக்குத் தெரியாமல், கருத்துக்குத் தெரியாமல், நாம் நிலைகொள்வோம். அனைத்துக்கும் மூலாதாரமான, பேச்சும் மூச்சும் கடந்த ஆதிநிலையில் நாம் அடங்குவோம்.

அன்பான வாசகர்களுக்கு,

ஒரு ஆண்டுக்கு மேலாக வந்துகொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடரை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். உங்களில் பலர் மின்னஞ்சல் வழியாக எனக்கு மிகுந்த ஊக்கமும் ஆதரவும் அளித்துவந்துள்ளீர்கள்.

அதற்கு என் மனமார்ந்த நன்றி. சிலர் என்னுடன் நேரடித் தொடர்பு கொள்ள விரும்பினீர்கள். நான் அதைத் தவிர்த்தேன். அதற்குக் காரணம் உண்டு. இந்தக் கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கும் வெளிச்சங்கள் எல்லோருக்குமானது. இவை என் ‘கருத்து’க்கள் இல்லை.

அதனால் இவற்றை நான் எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை. இவை என் மூலமாக வெளிப்பட்டிருக்கின்றன என்ற மகிழ்ச்சி எனக்கிருக்கிறது. ஆனால் ‘நான்தான் இதையெல்லாம் எழுதினேன்’ என்று பெருமைகொள்ள நான் விரும்பவில்லை. வாழ்க்கை தன் இயல்பின்படி, தன் சுய இலக்கணப்படி நடந்துகொண்டிருக்கிறது என்று நான் திடமாக நம்புகிறேன்.

மின்னஞ்சல் மூலமாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் சுருக்கமான பதில்களைத் தந்திருக்கிறேன். இந்தக் கட்டுரைத்தொடர் முடிந்த பின்னாலும் இது தொடர்பான கேள்விகளை யாராவது கேட்டால் எனக்குத் தெரிந்த வரையில் தெளிவுபடுத்தச் சித்தமாக இருக்கிறேன்.

‘ஆன்மாவின் குரல்’ ஆகவந்த கடைசி ஐந்து கட்டுரைகளும் ஒரே நீண்ட கட்டுரையின் ஐந்து பகுதிகள் தான். அவற்றை ஒன்றாகச் சேர்த்து வாசிப்பது ஆழமான தெளிவைக் கொடுக்கும்.

- சிந்துகுமாரன்

(உட்பொருள் அறிவோம் நிறைவுற்றது)

கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x