Published : 02 Apr 2020 08:20 AM
Last Updated : 02 Apr 2020 08:20 AM
வா.ரவிக்குமார்
தன்னுடைய காத்திரமான குரலால் வேலவா.. வேலவா, குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற பல பாடல்களைப் பாடிய பக்தி இசையை வளர்த்தவர் பெங்களூர் ரமணியம்மாள். அவர் பாடிப் பிரபலப்படுத்திய சில பாடல்களை எம்சிவீடியோஸுக்காக வைக்கம் விஜயலட்சுமி தற்போது பாடி, அதன் காணொலிகள் யூடியூபில் காணக் கிடைக்கின்றன.
வைக்கம் விஜயலட்சுமிக்கு ‘செல்லுலாய்ட்' மலையாளப் படத்தில் ‘காற்றே காற்றே நீ பூக்கா மரத்தினு' என்னும் பின்னணிப் பாடலைப் பாடும் வாய்ப்பை எம்.ஜெயச்சந்திரன் வழங்கினார்.
அந்தப் பாடலைப் பாடியதன் மூலம் கேரள அரசின் சிறப்பு விருதும் ‘நாடன்' படத்தில் ‘ஒற்றைக்கு பாடுந்நு பூங்குயிலே…' பாடலைப் பாடியதன் மூலம் 2013-ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான கேரள அரசின் விருதையும் 2014-ல் ஃபிலிம்பேர் விருதையும் பெற்றவர் வைக்கம் விஜயலட்சுமி.
தெம்மாங்கு இசையின் பின்னணியில் தன்னானனானே.. தன தந்தானானே… எனும் விஜயலட்சுமியின் தனித்துவமான `ஹம்மிங்’கோடு எலக்ட்ரானிக் ரிதம்பாக்ஸின் ஒலி மிகமிக மெதுவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இசைத் தோரணத்தைத் தாண்டியதும் நம்மை வரவேற்கிறது விஜயலட்சுமியின் கம்பீரமான குரலில் பாடல்.
“ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்
அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன்
கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே
ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே…”
பெங்களூர் ஏ.ஆர்.ரமணி அம்மாள் எந்தெந்த இடத்தில் என்னென்ன சங்கதிகளை பாடியுள்ளாரோ அதை எல்லாம் மிகவும் நுட்பமாக விஜயலட்சுமியும் தன்னுடைய பாடலில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். பாடலுக்கான இசை, நவீன வாத்தியங்களின்வழி கசிந்தாலும் அதிலும் ஒரு நேர்த்தியை கொண்டுவந்திருக்கின்றனர்.
இந்தப் பாடலில் இடம்பெறும் கதிர்காமம் முருகன் கோயில், இலங்கை நாட்டின் கண்டி நகரில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில். முருகனின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திரைச்சீலைக்குத்தான் இங்கு வழிபாடு செய்கின்றனர். அதுதான் இந்தக் கோயிலில் விசேஷம்.
ஆடு மயிலே பாடலைக் காண இணையச் சுட்டி: https://bit.ly/2QUBkKq
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT