Published : 12 Mar 2020 11:54 AM
Last Updated : 12 Mar 2020 11:54 AM

தெய்வத்தின் குரல்: மஹா அமிர்தம் - கோபம், மாறாத அன்பு

நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துகொண்டே போகும். ஒருத்தன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாக செய்வதில் நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.

ஒருத்தன் பாவம் செய்ய அவனுடைய மனம், சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாவங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாவியைப் பார்க்கும்போது, ‘அம்பிகே! இந்தப் பாவத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மா’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத்தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவறுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்பு கண்டுபிடித்துக் கோபிப்பதற்கு நியாயம் ஏது?

‘நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?’ என்றால் இப்படி தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்புமயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

மனுஷ்யனைப் பாவத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார்  கிருஷ்ண பரமாத்மா.

அன்பில் ஆனந்தம்

மனிதப் பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில், தற்காலிகமாக இன்பம் கிட்டலாம். ஆனாலும் இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு செலுத்தும் போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும் பணச் செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வீணே.

அன்பு செலுத்தும்போது துன்பமே தெரிவதில்லை என்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்து விடுகிறது. நாம் ஒருவரிடம் அன்பு வைக்கிறோம். கடைசியில் ஒருநாள் அவர் நம்மைவிட்டுப் போயே போய் விடுகிறார். அல்லது நாமாவது அவரை விட்டு ஒருநாள் போகத்தான் போகிறோம். அப்போது, ‘ஐயோ, நம்மிடமிருந்து போய்விட்டாரே’ என்றோ, அல்லது ‘ஐயோ, நாம் இவரை விட்டுப் போகிறோமே’ என்றோ பெரிய துக்கம் உண்டாகிறது. இத்தனை காலமாக அன்பு தந்த ஆனந்தமும் நிறைவும் கடைசியில் பொய்யாகி, இந்தத் துன்பத்திலேயே முடிந்தது என்று மனம் கலங்குகிறோம். அன்பின் முடிவான பலன் துன்பம்தானா என்று பெரிய சலிப்பு உண்டாகிவிடுகிறது.

மாறாத ஒன்றிடம் அன்பு

அன்பு செய்தாலும் முடிவில் துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. இப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நம்முடைய அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்து விட்டால் நாமும் அதுவும் ஒருநாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.

அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்துவிடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.

அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருந்தோமோ அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்மா சொரூபமாகவே தெரிவார்கள். இப்படி உலகம் முழுவதையும் பரமத்மாவாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு ஆகாமலே இருக்கும்.

நம் அன்பு கொஞ்சம்கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈஸ்வரனிடம், சாதுக்களிடம் இந்த அன்பை பயிற்சிசெய்வதில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்ததன் பயன்.

(தெய்வத்தின் குரல் முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x