Published : 12 Mar 2020 10:36 AM
Last Updated : 12 Mar 2020 10:36 AM

சூஃபி கதை: தேடலின் வழிகாட்டி

ஷாராஜ்

ஒரு மனிதன் உண்மையைத் தேடிக் கண்டறியும் ஆவலோடு இருந்தான். ஆனால், அதைத் தேடுவதற்கான பாதை எது, அதற்கு வழிகாட்டக் கூடிய தக்க நபர் யார் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு சந்நியாசியைக் கண்டபோது, அவரிடம் சென்று, "நான் உண்மையை அறிய விரும்புகிறேன். எனக்கு அதற்கான பாதையையும், வழிகாட்டியையும் உங்களால் கூற இயலுமா?" என்று கேட்டான்.

"உனக்கு உண்மையை போதிக்கக்கூடிய குரு எங்கே இருப்பார், எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியும்!" என்று கூறிய அவர், "உனது குரு ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பார்" என்று கூறி, அந்த மரத்தையும், அவரது முழு உருவத்தையும் துல்லியமாக வர்ணித்தார்.

அவனும் தனக்கு வழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவரிடமிருந்து விடைபெற்று, அந்த மரத்தையும் குருவையும் தேடி ஊர் ஊராகச் சென்றுகொண்டு இருந்தான். அந்த மரமோ குருவோ அவனுக்குத் தட்டுப்படவே இல்லை.

முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. யாரோ ஒரு சந்நியாசி சொன்னதை நம்பி, முப்பது வருடங்களை தேடலில் வீணாக்கி விட்டோமே என்று வருந்திய அவன், தனது ஊருக்குத் திரும்பினான்.

அவனுக்கு வழி சொன்ன சந்நியாசி, அதே மரத்தடியில், வயோதிகமாகி அமர்ந்திருந்தார். அப்போதுதான் அவர் வர்ணித்தபடியே அந்த மரமும் அவரும் இருப்பதை கவனித்தான்.

அவரிடம் சென்று, "இதுதான் அந்த மரம்; நீங்கள்தான் அந்த குரு என்று ஏன் எனக்கு நீங்கள் அப்போதே சொல்லவில்லை? எனது 30 ஆண்டுகளை வீணாக்கிவிட்டீர்களே!"என்று கேட்டான்.

அதற்கு அவர், "நீதான் எனது 30 வருடங்களை வீணாக்கிவிட்டாய்! மிகத் துல்லியமாக இந்த மரத்தைப் பற்றியும், எனது உருவத்தைப் பற்றியும் நான் வர்ணித்தேன். ஆனால், நீயோ, என்னையும் கவனிக்கவில்லை; அந்த மரத்தையும் கவனிக்கவில்லை. உனது தேடலின் ஆவேசம் உனது கண்களை மறைத்திருந்தது. கண் எதிரே உள்ள ஒன்றை அவ்வளவு துல்லியமாக வர்ணித்தும்கூட உன்னால் கண்டுகொள்ள இயலவில்லை என்றால், புறக் கண்ணுக்குப் புலப்படாத, அகக் கண்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய உண்மையை அப்போது நீ எப்படி கண்டுகொண்டிருக்க முடியும்?

"உண்மையை அறிவதற்கு வெறும் தேடல் ஆர்வம் மட்டும் போதாது. பக்குவமும் வேண்டும். உனக்கு அப்போது அந்தப் பக்குவம் இருக்கவில்லை. உனக்கு இன்னும் வயதும், அனுபவங்களும் வரவேண்டி இருந்தது. அப்படி 30 வருடங்களாக நீ பெற்ற அனுபவங்களின் விளைவாகவே, இப்போது அந்தப் பக்குவத்தை அடைந்திருக்கிறாய். இதற்காகவே நானும் இவ்வளவு காலம் காத்திருந்தேன்!" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x