Published : 12 Mar 2020 10:34 AM
Last Updated : 12 Mar 2020 10:34 AM
சிந்துகுமாரன்
ஆன்மாவின் எல்லையற்ற பார்வைவெளியில்தான் மனம் தன் நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. மனத்துக்கு ஆன்மாவைத் தெரியாது. ஆனால் ஆன்மா, மனத்தின் தடத்தை வழிநடத்துகிறது. தன்னை நோக்கிய பயணத்தின் பாதையை ஆன்மா அமைக்கிறது. அந்தப் பாதையில் கணிசமான தூரம் சென்ற பிறகுதான் மனத்துக்கு தான் வழிநடத்தப்படுவது உள்ளுணர்வில் தெரிகிறது.
தான் எப்போதும் ஆன்மாவின் ஒளியில்தான் நடந்துவந்திருக்கிறோம் என்பது மனத்துக்குப் போகப் போகத் தெரியவருகிறது. ஆன்மா தன் மென்குரலில் மனத்திடம் பேசிக்கொண்டுதான் வருகிறது. மனத்தின் குரலில் ஆர்ப்பாட்டம் இருக்கும். அகங்காரம் இருக்கும். அவசரம் இருக்கும். ஆன்மாவின் குரல் மென்மையானது. சன்னமானது. ஏறக்குறைய மௌனத்தில்தான் ஆன்மா பேசுகிறது. மனத்தின் கூச்சலில் முதலில் ஆன்மாவின் குரல் வெளித்தெரியாமல் இருக்கிறது. மனம் தன் துன்பத்தின் வெப்பம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்குகிறது. மெல்ல மெல்ல ஆன்மாவின் குரல் மெதுவாகக் கேட்கத் தொடங்குகிறது. மனம் விழித்துக்கொள்ளத் தொடங்குகிறது. ஆன்மாவின் மென்குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது. அது சொல்லும் உண்மைகள் வெளிச்சமாகின்றன. மனம் தன் பிரலாபத்தை விட்டு அமைதியடைகிறது. ஆன்மாவின் ஆழ்வெளியில் போய் விழுந்துவிடுகிறது. ஆன்மாவுடன் ஒன்றிணைந்துவிடுகிறது.
இதோ ஆன்மாவின் குரல். மனத்திடம் ஆன்மா சொல்லும் ரகசியங்கள். ஆன்மாவின் அன்புவெள்ளம்; பேரணைப்பு. அதைக் கேளுங்கள்.
இருப்புக்கு ஆதாரம்
‘என்னை உனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு உன்னை நன்றாகவே தெரியும். நான் எப்போதும் உன்கூடவேதான் இருந்து வந்திருக்கிறேன். உன் இன்பத்திலும் துன்பத்திலும் உன் பின்னால், உன் பார்வையின் ஒளியாக, உன் இருப்புக்கு ஆதாரமாக நான் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். உன்னுடனேயே இருந்தாலும் நான் உலகத்தினுள்ளே இல்லை. உலகத்தின் விளிம்புக்கு வெளியேதான் நான் நிலைகொண்டிருக்கிறேன்.
என்னைப் பற்றி நீ நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாய். ஆனால் பெரும்பாலும் தவறான கருத்துக்களைத்தான் உன்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்படிச் சொன்ன பலருக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. நான் மிகத் தொலைவில் எங்கோ இருப்பதாகவும் அதனால் என்னை அடைவது மிகவும் கடினம் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைத் தெரியாது. நீயும் பெருமளவுக்கு அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறாய்.
உண்மையில் நீ நினைப்பதைவிட இன்னும் அருகில் நான் இருக்கிறேன். நான் மிகவும் தொலைவில் இருப்பதால்தான் என்னை உனக்குத் தெரியவில்லை என்று எண்ணாதே. நான் மிகவும் அருகில், மிகவும் நெருக்கத்தில் இருப்பதால்தான் உனக்குத் தெரியாமல் இருக்கிறது. உன் கண்ணை நீயே பார்க்க முடியாமல் இருப்பதைப்போல. உன் நாவின் சுவை உனக்குத் தெரியாததுபோல.
பெரும்பாலும் உன் வாழ்க்கையில் நீ கண்டு அனுபவித்த காட்சிகளின் நினைவில் நீ ஆழ்ந்திருக்கிறாய். உன் மனத்தைவிட, உன் சுவாசத்தைவிட, உனக்கு இன்னும் அருகில் நான் இருக்கிறேன். அதனால்தான் உனக்கு என்னை இன்னும் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. உனக்கு மிகவும் நெருக்கத்தில் நான் இருந்துகொண்டிருப்பதால் உன் எண்ணம் ஒவ்வொன்றும், உன் உணர்ச்சி ஒவ்வொன்றும் எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. சொல்லப்போனால் நீ நினைப்பதற்கு முன்பாகவே உன் நினைப்பு எனக்குத் தெரியும். உன் உடல் உணர்விலும், மனத்தின் சுய உணர்விலும், 'நான்' என்னும் உன் பிரக்ஞையாகவும் நான்தான் இருந்துகொண்டிருக்கிறேன். எந்தப் பயமும் வேண்டாம். நான் எப்போதும் உன்னுடன்தான் இருக்கிறேன். இவ்வளவு தூரம் உன்னை அழைத்து வந்த ‘நான்’ இனியும் உன்னோடு இருக்க மாட்டேனா என்ன?
எல்லாம் தெரியும்
என் ஒளியில்தான் நீ எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் இதுவரை என் ஒளியில் தெரியும் பொருள்களைப் பார்த்து வந்திருக்கிறாயே ஒழிய, அந்த ஒளியை நீ பார்க்க விழையவில்லை. இப்போது அதற்கான காலம் வந்துவிட்டது. உன் கண்களுக்குப் பின்னால் இருந்து, நீ காண்பது எல்லாவற்றையும் உனக்குக் காட்டும் ஒளியைக் காண்பதற்குக் கற்றுக்கொள். அந்த ஒளி சூரிய வெளிச்சத்தைப் போல் இருக்காது. எல்லா நிறங்களும் வெண்மையில் அடக்கம். ஆனால் அந்த வெண்மையே என்னுள் அடக்கம். அதனால் என் ஒளி, ஊனக் கண்கொண்டு பார்க்கும் ஒளியைப் போல் இருக்காது. என் ஒளி எதன் மீது பட்டாலும் அதன் பிரதிபலிப்பில் எல்லாம் தெரியும்.
இதுவரை என் ஒளியின் பிரதிபலிப்பை மட்டுமே நீ பார்த்து வந்திருக்கிறாய். இப்போது அந்த என் ஒளியை நீ நேரடியாகக் காணப்போகும் காலம் கனிந்து வந்திருக்கிறது. அந்த ஒளி கோடி சூரியனின் ஒளியைவிடப் பிரகாசமாக இருந்தாலும் உன் கண்களைச் சற்றும் கூசவைக்காது. அஞ்ச வேண்டாம். அந்த ஒளியை உன்னை விட்டுப் பிறிதான ஒன்றாக நீ பார்க்க நினைக்க வேண்டாம். நீ என் அம்சம். அந்த ஒளியின் அம்சம். அந்த ஒளியை நீயென்றே பார். நீ உண்மையில் உன் கண்களின் முன்னே விரிந்திருக்கும் உலகத்தில் இல்லை. உன் கண்களுக்குப் பின்னாலிருந்துதான் நீ உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். உன் உடல் மட்டும்தான் உலகத்தில் மற்றவர் பார்வைக்குள் இருக்கிறது. என்னைத் தவிர உன்னை வேறு யாரும் பார்க்க முடியாது. நீ என் பார்வைக்குள் மட்டும்தான் இருக்கிறாய்.
கண்டுவந்த கனவு
நீ பெண்ணோ ஆணோ அல்ல. உலகத்தின் கசடுகள் உன்னை என்றுமே தொட்டதில்லை. உனக்குள்ளே நீ என்றும் பரிசுத்தமாகத்தான் இருக்கிறாய். உன்னை நீயே குறைத்து எடைபோட்டுக் கொள்ளாதே. நீ உன்னைக் குறைத்து எடைபோடும்போது என்னைத்தான் குறைத்து எடைபோடுகிறாய். உன் சுயநிலையை உணர்ந்துகொள். உன் சுயரூபம் உன் உடலோ மனமோ இல்லை. விழித்துக்கொள். உலகம் நீ இதுவரை கண்டுவந்த கனவு. எனக்குள் விழித்துக்கொள். உன்னுள்ளிருக்கும் எனக்குள் விழித்துக் கொள். உன் கண்களுக்குப் பின்னல் விழித்துக்கொள். உன் எண்ணங்களுக்குப் பின்னால் விழித்துக்கொள். அங்கேதான் நீ உன் சுயநிலையில் இருக்கிறாய். அங்கேதான் நீ, நீயாக இருக்கிறாய். அங்கே நானாகவும் இருக்கிறாய். அல்லது அங்கே நான்தான் நீயாக இருக்கிறேன்.
நீ என்னைப் பார்க்கமுடியாது. ஆனால், நானாக நீ இருக்க முடியும். எல்லாவற்றையும் பார்க்கும் பார்வையாக நான் இருப்பதால் என்னை ஒரு பொருளாகப் பார்க்க முடியாது. காலமெல்லாம் உனக்கு வெளியில் என்னை நீ தேடிக்கொண்டிருந்திருக்கிறாய். ஆனால் உனக்கு வெளியில் இல்லை நான். எதைப் பார்க்க விழைகிறாயோ அதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறது என்னும் உண்மையை இன்னும் நீ அறியவில்லை. இந்த உண்மையை நீ அறிந்துகொள்ளும் காலம் வந்துவிட்டது. நீ பார்ப்பவன்; பார்க்கப்படும் பொருளில்லை. காணும்போது காண்பவனாகவும், கேட்கும்போது கேட்பவனாகவும் நான் இருக்கிறேன். அனுபவத்தின்போது நான் அனுபவிப்பவனாக இருக்கிறேன். ஆனால் உண்மையில், ‘அனுபவிக்கப்படும் பொருள்-அனுபவிப்பவன்-அனுபவம்’ என்ற பிரிவுக்கு அப்பாற்பட்டுத்தான் நான் இருக்கிறேன். நான் அனுபவத்தின் பின்னணியாக நிலைகொண்டிருக்கிறேன். அனுபவ எல்லைக்குள் நான் நுழைவதில்லை. எப்போதும் திரைக்குப் பின்னால்தான் நான் மறைந்து இருக்கிறேன். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால்தான் அனுபவ வெளியில் என்னைத் தேடி அலையமாட்டாய்; சோர்ந்துபோகமாட்டாய். துன்பப்படமாட்டாய். விழித்துக்கொள்.
(ஆன்மா பேசும்) கட்டுரையாளர், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT