Published : 12 Mar 2020 10:30 AM
Last Updated : 12 Mar 2020 10:30 AM
உஷாதேவி
மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை சோழ நாட்டுத் திருப்பதியான புள்ளம் பூதக்குடிக்கு அருகிலுள்ள மண்டங்குடி என்னும் ஊரில் அவதரித்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவரின் இயற்பெயர் விப்ரநாராயணர் திருவரங்கத்தில் திருநந்தவனம் அமைத்து அரங்கனுக்கு துளவத் தொண்டாக பூமாலை தொடுத்துச் சாற்றினார்.
இவர் இறைவனுக்கு பூமாலை கட்டிக் கைங்கரியம் செய்துவரும் வேளையில் தேவதேவி எனும் ஆடற்கலையில் சிறந்த பெண், உறையூர் சென்று அரசவையில் நாட்டியமாடி வரும் வழியில் இறை சிந்தனையே வடிவமாக நந்தவனத்தில் மலர் பறித்துக் கொண்டிருந்த விப்ரநாராயணரைப் பார்த்தாள். அவர், அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன்னைப் பார்க்காமல் இருப்பதைக் கண்டு, தன் தமக்கையிடம் இவரை மயக்கிக் காட்டுகிறேன் எனச் சவால் விட்டாள். விப்ரநாராயணனிடம் எளிமையான பெண்ணாக வேடமிட்டு பூப்பறிப்பதற்கு உதவியாளாக வேலை கேட்டாள். விப்ரநாராயணர், அவளது கோரிக்கைக்குச் சரியென்று வாக்களித்து பூப்பறிக்கவும் மாலை தொடுக்கவும் அனுமதித்தார்.
ஆனால், தேவதேவியோ அவரைத் தக்கசமயம் பார்த்து மயக்கி அடைந்துவிட்டாள். சிறிது காலம் இவள் போக்கிலேயே விப்ரநாராயணரும் மயக்கமுற்றிருந்தார். பிறகு தேவதேவி சொந்த ஊர் திரும்பினாள். அவளை பிரிந்திருக்கமாட்டாமல் அவள் வீடு தேடிச் சென்றார். பணம் இல்லாத அவரை வீட்டின் வெளியில் நிறுத்தினாள். இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள், ஆலய பொன்வட்டிலைக் கொண்டு சென்று விப்ரநாராயணரின் தோழன் என்று கூறி அவளிடம் தந்தான். விப்ரநாராயணருக்கு அவள் வீட்டில் அனுமதி கிடைத்தது. ஆலயத்தின் பொன்வட்டில் காணாமல் கோயில் அர்ச்சகர், அரசரிடம் தெரிவிக்க அவன் விசாரணை செய்ய விப்ரநாராயணர்தான் களவாடினார் என்று அறிந்து அவரைக் கைதுசெய்து சிறைபடுத்தினான்.
தொண்டரடிப் பொடியாழ்வார் ஆனார்
பெருமாள் அன்றிரவு அரசனின் கனவில் நிகழ்ந்தது கூற, மறுநாள் அரசன் இவரைச் சிறையிலிருந்து விடுவித்துச் சிறப்புசெய்தான். தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக அரங்கனடியார்களுடைய பாத தீர்த்தத்தைப் பருகி தூயவரானார். பின்னர் ‘தொண்டர் அடிப்பொடி’ என்று திருநாமம் கொண்டார்.
ரங்கத்து பெரிய பெருமாளைத் தவிர வேறு பெருமாளை அறியாதவராய் பரகாலநாயகியாய் விளங்கினார். பெருமாளும் மதிநலம் அருளி, தம்முடைய சொரூப, ரூப குணங்களை கையில் கனி எனக் காட்டி அருளினார். ஆழ்வாரும் அரங்கனின் அருளில் மூழ்கி அடங்கமாட்டாமையால் உலக உயிர்களும் மேம்பட திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பிரபந்தங்களை அருளிச் செய்து உலகை வாழ்வித்தார்.
காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே
எனத் தொடங்கி திருமாலை 40 பாசுரமும் கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் எனத் தொடங்கும் திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரமும் அருளிச்செய்தார்.
‘திருமாலை அறியாதார் திருமாளை அறியார்’ என்பது வழக்கு.
இன்றளவும் மார்கழி மாதத்தில் அனைத்து வைணவத் திருக்கோயிகளிலும் இறைவனைப் பள்ளியெழுப்பும் பாசுரமாக அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகிறது.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் போலே இறைவனுக்கு பூமாலையும் பாமாலையும் நான் சமர்ப்பிக்கவில்லையே சுவாமி என்று கூறுகிறாள் திருக்கோளுர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT