Published : 13 Feb 2020 12:53 PM
Last Updated : 13 Feb 2020 12:53 PM

தெய்வத்தின் குரல்: யோகியின் அடையாளம்

துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம், அதாவது மனசின் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் தான் மனசில் அசுத்தங்களை அகற்ற முடியும்.

இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும், அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து வெற்றிபெற்றால், கடைசியில் தேகவியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.

யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக்கொள்ள நினைக்காது.

மனசு அதற்கப்புறம் ஓடவே முடியக் கூடாது. அப்படி ஓடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போதும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்ந்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.

ஓடாத ஓட்டமில்லை

நதி இருக்கிறது. அதன் மூலம்—உண்டான இடம்—என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாகப் போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது.

அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, நம் மனங்களை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக்கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது.

சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான்.

உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அனுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும், இதை அடைய வேண்டும் என்கிற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவன் யோகி இல்லை, அவன் கடவுளைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.

ஆடாது அசையாது

யோகியின் அடையாளத்தை வேறு விதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆடக் கூடாது, அசையக் கூடாது, அழக் கூடாது. இப்படியில்லாமல், சித்தம் துளியாகச் சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.

யோகிக்கு அநேகத் துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் சதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டால், அதுதான் யோகம்.

அவனுக்குக் கருணை மாத்திரம் சுரந்துகொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்குத் தன்னால் இம்மியும் இம்சை வரக் கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதிலெல்லாம் அவனுக்குத் ‘தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும்.

சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மகா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால், ஒவ்வொரு ஜீவனும்—எத்தனை பாவம் செய்த ஜீவனாக இருந்தாலும்—சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார்.

தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக்கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இந்தச் சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக்கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும்.

கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப் பழக்கினால்தான், கோடானு கோடி ஜனங்களை இந்த மாதிரிப் படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மனுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.

(தெய்வத்தின் குரல் முதல் பகுதி) பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் சதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்துகொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x