Published : 23 Jan 2020 01:24 PM
Last Updated : 23 Jan 2020 01:24 PM

உட்பொருள் அறிவோம் 45: காரைக்காலம்மையாரின் பேயுரு

சிந்துகுமாரன்

உள்ளுருமாற்றம் (Inner Transformation) என்பது உடல், மனம், உயிராற்றல், அறிவுணர்வு அனைத்தையும் உள்ளடக்கிய செயல்முறை. இந்த மாதிரியான விஷயங்களை நேரடியாக மொழியில் விளக்குவதில் உள்ள சிக்கல்களினால், குறியீடுகளின் வழியாகவும், உருவகங்களின் மூலமாகவும் விளக்குவதற்கு நமது முன்னோர்கள் முற்பட்டிருக்கிறார்கள் . உதாரணமாகக் காரைக்கால் அம்மையார் கதையை எடுத்துக்கொள்வோம்.

தன் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், அவருடைய கணவர் அவரைத் தெய்வாம்சம் பொருந்தியவர் என்று வணங்கத் தொடங்கியபோது, இறைவனிடம் அவர் பேயுரு வேண்டிப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பேயுரு என்பதை அம்மையார் வெறும் எலும்புக்கூடாக இருப்பதாகச் சித்தரித்திருக்கிறார்கள். பேயுரு என்றால் என்ன என்னும் முக்கியமான கேள்வியை நாம் நம்மிடம் கேட்டுக் கொள்வதில்லை.

மன உருவங்கள் கரைந்த நிலை

பேயுரு என்பது மனவுருவம் கரைந்து இல்லாமல் போவது. நமக்குள் பொதுவாக நாம் என்று நினைத்துக்கொள்ளும் சுயம், சமூக-கலாச்சாரச் சக்திகளினால் கட்டமைக்கப்பட்டது. மகனாக, மகளாக, சகோதரனாக அல்லது சகோதரியாக, கணவனாக, மனைவியாக, தந்தையாக அல்லது தாயாக நாம் வாழ்கிறோம்; வாழ்ந்திருந்து மறைகிறோம். தன்னை ஒரு இனத்துடன், ஒரு மதத்துடன், ஒரு நாட்டுடன், ஒரு மொழியுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, தான் இன்னார் என்று கருதிக்கொண்டு, அந்த நபராகவே வாழ்கிறோம். இதுதான் மனவுருவம்.

இந்த மனவுருவம் நினைவுகளாலானது; காலத்தின் சேகரம். இது நாம் இல்லை. மன அடையாளமான மனச்சுயத்தில் (Ego) கவனம் லயித்து, ஆன்ம உணர்வுடன் நமக்கு இணைப்பு விட்டுப்போகும்போது நாம் வெறும் மனவுருவமாகவே வாழ்கிறோம். கவனத்தை உடலுணர்விலும் சுவாசத்தின் கதியிலும் பதித்திருந்தால் இந்த மனவுருவம் அடங்கிப்போகும். ‘நான்’ என்னும் தன்னுணர்வு மட்டுமே மிஞ்சும். இந்தத் தன்னுணர்வுதான் உண்மையில் நம் சுய அடையாளம். இதுதான் நம் ஆன்மா.

நாம் இந்த ஆன்ம உணர்வாகக் கவனத்தில் லயிக்கும்போது, மனவுருவம் இல்லாமல் போய்விடுகிறது. உருவமற்ற ‘நான்’ என்னும் ஆன்ம உணர்வு மட்டிலுமே இருந்து நிலைக்கிறது. இதைத்தான் குறியீடாகப் பேயுரு என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். காரைக்கால் அம்மையார் பெற்றோருக்கு அடங்கி வாழ்ந்த மகள், கணவனுக்குப் பணிந்து பணிவிடை செய்யும் மனைவி என்னும் சமூக-கலாச்சார அடையாளங்களைத் துறந்து, மன உருவமிழந்து, வெறும் உணர்வு வெளியாக இருந்தது இந்தச் சுத்த அறிவு நிலையில்தான்.

ஈசனின் பிரிக்க முடியாத அங்கம்

சிவனிடம் இந்தப் பேயுருவை வேண்டியதாகவும், ஈசன் அவருக்கு இதை அருளினார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்குள் ஆழத்த்தில் உறைந்திருக்கும் இந்த ‘நான்’ என்னும் ஆன்ம ஒளி, பிரபஞ்சத்தின் ஆன்மாவான ஈசனுடன் இணைந்திருக்கிறது. நம் உடல் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். நம் மனம் பிரபஞ்சப் பெருமனத்தின் அங்கம். அதேபோல், நம் ஆன்மா பிரபஞ்சத்தின் பேரான்மாவான ஈசனின் பிரிக்க முடியாத அங்கம். மன உருவம் ‘தான்’ இல்லை, அது நம் சுய அடையாளம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டு, ஆன்மவெளியில் மனம் அடங்கிப்போகும்போது, நம் பிரக்ஞையில் ஒளிவீசும் ஆன்ம ஒளி ஈசனின் எல்லையற்ற ஒளிப்படலத்தின் ஒரு கதிர் என்பது புரியவரும்.

அப்போது மனம் கைபேசி அல்லது கணினி போன்று வெறும் சாதனமாக மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும். உடல் இருக்கும் வரையில் இந்த மன அடையாளம் வெறும் நடைமுறை வசதிக்காக இயக்கம் கொண்டிருக்கும். ரமண மகரிஷி இத்தகைய மனத்தைச் ‘சாம்பல் கயிறு’ என்று சொல்கிறார். பார்ப்பதற்குக் கயிறுபோன்ற தோற்றம் கொண்டிருந்தாலும் அதை வைத்து எதையும் கட்ட முடியாது என்கிறார் அவர்.

அதன் பிறகு உடல்-மனம் என்பது உயிருணர்வான ஆன்மாவுக்கு ஒரு வாகனமாக இருந்துகொண்டிருக்கும். ஈசனுக்கு நந்தி, திருமாலுக்குக் கருடன், முருகனுக்கு மயில் போன்று, விடுதலை அடைந்த உயிருக்கு உடல் வெறும் வாகனம் மட்டுமே. உள்ளே நான் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் நபர் யாரும் இருக்க மாட்டார்கள். அக உருவம் ஏதுமற்றுக் கட்டற்ற உணர்வு வெளியாக உலகில் உலவிக்கொண்டிருக்கும் நிலைதான் பேயுரு என்பது.

இதுவே காரைக்கால் அம்மையார் போன்றவர்களின் அகநிலை. அவர் ஓர் ஆள் இல்லை. சூரியனின் ஒளி ஒரு படிகத்தின்மீது பட்டுத் தெறித்து, ஒளிக்கீற்றுகளாகப் பிரதிபலிப்பதுபோல் இவர்கள் ஈசனின் ஒளிக்கீற்றுகளாக இருந்து மறைகிறார்கள். அந்த ஒளிக்கீற்றுகளின் தோற்றமான பேரொளி மட்டும் முடிவற்று, காலமற்று எப்போதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

(பிரகாசிக்கட்டும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x