Published : 23 Jan 2020 12:57 PM
Last Updated : 23 Jan 2020 12:57 PM

81 ரத்தினங்கள் 30: கருமத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே!

உஷாதேவி

ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் என்று எந்த யோகமானாலும் பலனை எதிர்பார்க்காமல் நம் கர்மங்களை தவறாமல் மன மகிழ்ச்சியோடும் நேரம் தவறாமலும் செய்தல் வேண்டும். நமது கர்மங்களாலேயே நாம் மனிதப் பிறவி எடுத்துள்ளோம். யாக்யவல்கியரின் சீடரான ஜனக மகாராஜா, குரு பக்தியில் எந்தக் குறையும் இல்லாமல் தன் கர்மத்தை ஈடுபாட்டோடும் நம்பிக்கையோடும் சிரத்தையோடும் நிறைவேற்றக் கூடியவர். கர்ம யோகத்தால் மோட்சத்தை அடைந்தவர்.

சரீரத்தின் மீது பற்றில்லாதவர்களை விதேகியர்கள் (வி- தேகர்கள்) என்பார்கள். அப்படியாக எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் தனது தேசத்தை ஆண்டவர். இப்படி அவர் செய்த கர்மயோகத்தின் பலனால் பூதேவியின் மகளான சீதையை மகளாகப் பெற்றார். ராமனை மருமகனாக அடைந்தார்.

சுக பிரம்மரிஷி தனது பிரம்மஞானத்தைச் சோதிப்பதற்காக ஒருமுறை மிதிலையை வந்தடைந்தார். வாயில்காப்போன் அந்தத் தகவலை மன்னர் ஜனகருக்குச் சொன்னார். சுக பிரம்மரிஷியின் பொறுமையைச் சோதிப்பதற்காக ஜனகர் அவரைக் காத்திருக்கச் செய்தார். இரண்டு மூன்று நாட்களான பிறகும் சுக பிரம்மரிஷி, ஜனகரிடம் கோபமோ, ஆத்திரமோ, அவமானமோ கொள்ளவில்லை.

இதை அறிந்த பின்னர், ரிஷிக்குச் சந்தன அபிஷேகம் செய்து அரண்மனைக்குள் வரவேற்றார். பிரம்மத்தைச் சோதிக்கும் அளவு கர்மயோகியாக இருந்தவர் ஜனகர்.

கர்மபலத்தினால் மட்டுமே ஞானத்தை அடைந்த ஜனக மகாராஜாவைப் போலத் தான், எந்தக் கர்மத்தையும் செய்யவில்லையே சுவாமி என்று வருத்தம் அடைகிறாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x