Published : 09 Jan 2020 10:25 AM
Last Updated : 09 Jan 2020 10:25 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 107: எத்தனையெத்தனை மறைப்புகள்

கரு.ஆறுமுகத்தமிழன்

சமய, மெய்யியல் கருதுகோள்களை விளக்க நேர்கையில் எடுத்துக்காட்டுகளும் ஒப்புமைகளும் வழங்கி விளக்குவது வழக்கம். ‘கயிறும் பாம்பும், ‘பூச்சியும் (சிலந்தி/பட்டுப்புழு) வலைப்பின்னலும்’, ‘பொன்னும் நகையும்’—என்று இந்தியச் சமய, மெய்யியல் உலகில் வழங்கப்படும் ஒப்புமைகள் ஒரு மாதிரியாகவே இருந்தாலும், கையாள்வோரின் கருத்து மாறுபாட்டுக்குத்தக எடுத்தாளப்படும் ஒப்புமைகளின் சுட்டுப்பொருளும் மாறுபடும். ஒரே ஒப்புமையைப் பயன்படுத்துகிற அனைவரும் ஒரே கருத்துடையவர்கள் என்று சொல்ல இடமே இல்லை.

‘சிவத்தைப் பேசுதல்’ (Speaking of Siva, p.41) என்ற நூலில் ஏ.கே. ராமானுஜன் இதைச் சிறப்பாகக் குறிக்கிறார். ‘பூச்சியும் வலைப்பின்னலும்’ என்ற ஒப்புமையை வைதிக மரபின் பிருகதாரணியக உபநிடதமும் பயன்படுத்துகிறது; எதிர்மரபான வீரசைவத்தின் மாதேவி அக்காவும் பயன்படுத்துகிறார். இரண்டுக்கும் நடுவே இருக்கும் பார்வை வேறுபாடும் சுட்டுப்பொருள் வேறுபாடும் மிகக் கூர்மையானது.

‘பூச்சியும் வலைப்பின்னலும்’ ஒப்புமையைப் பிருகதாரணியக உபநிடதம் இவ்வாறு பயன்படுத்துகிறது: “சிலந்தி தன்னிலிருந்தே நூலை உருவாக்குவதுபோல, இந்த ஆன்மாவிலிருந்தே (பரம்பொருளிலிருந்தே) எல்லா உயிர்களும் உலகங்களும் தெய்வங்களும் பிறவும் உருவாகின்றன.” மாதேவி அக்கா இவ்வாறு பயன்படுத்துகிறார்:

உடம்பு மச்சை நூலெடுத்துத்
தன் கூட்டைக் காதலோடு
கட்டுகின்ற பட்டுப்புழு
தன்னையே சுற்றிக் கட்டித்
தன் இறுக்கம் தாளாமல்
தன் நூலால் தான் சாகும்;
இதய ஆசையினால்
எரிகின்றேன் நான்
ஆசை வெட்டி வழிகாட்டு
என் இதய ஆசையே,
சென்ன மல்லிகார்ச்சுனா.

ஒரே ஒப்புமைதான்; சுட்டப்படுவன வேறுவேறு. உபநிடதச் சுட்டு பரம்பொருளின் பெருக்கம் குறித்தது. மாதேவி அக்காவின் சுட்டோ தன்னிலை இறுக்கம் குறித்தது. தன் இழை உலகத்தையே உருவாக்கும் பெருமையைப் பேசுகிறது உபநிடதம். தன் இழை தன்னையே கட்டிச் சாகடிக்கும் கொடுமையைப் பேசுகிறார் மாதேவி அக்கா. ஒன்று தெய்வநிலை பேசி வியக்கிறது; மற்றொன்று மனிதநிலை பேசி இரக்கிறது. ஒப்புமை ஒன்று என்பதால் சொல்ல வந்த கருத்துகளும் ஒன்றே என்று பேசுவது சரியில்லை.

இதை முன்னிட்டுக்கொண்டு திருமந்திரப் பாட்டொன்றுக்கு விளைவிக்கப்படும் வில்லங்கத்தைப் பார்ப்போம். ‘பொன்னும் அணியும்’ என்னும் ஒப்புமை பற்றியது இந்த வில்லங்கம். இதை அத்துவைத மரபினரும் பயன்படுத்துகிறார்கள்; எதிர்மரபினராகிய சைவ மரபினரும் பயன்படுத்துகிறார்கள். இரண்டிலும் சுட்டுப்பொருள் வெவ்வேறு.

பிரம்மம் ஒன்றுதான்
பொன்னைக் கொண்டு பல்வேறு அணிகள் செய்யப்படுகின்றன. ஒரே பொன்தான் வளையல், சங்கிலி, கங்கணம், தோடு என்று வெவ்வேறு அணிகளாக ஆகியிருக்கிறது. அணிகளை உருக்கினால் பொன்னே எஞ்சியிருக்கும். அவ்வாறே பிரம்மம் எனப்படும் பொருள் ஒன்றுதான். அதுவே உயிர்களாக, உலகமாகத் தோன்றுகிறது; அவை அழிகையில் பிரம்மம் மட்டுமே எஞ்சியிருக்கும். இது, பொன்னும் அணியும் என்னும் ஒப்புமையை அத்துவைத மரபு பயன்படுத்தும் வகை. இந்த ஒப்புமையைச் சைவ மரபு பயன்படுத்தும் வகையைத் திருமந்திரத்தில் காணலாம்:

பொன்னை மறைத்தது
பொன்அணி பூடணம்;
பொன்னில் மறைந்தது
பொன்அணி பூடணம்;
தன்னை மறைத்தது
தன்கர ணங்களாம்;
தன்னில் மறைந்தது தன்கர ணங்களே.
(திருமந்திரம் 2289)

பூட்டி அணிவது பூடணம். பொன்னால் ஆனது பொன்அணி பூடணம். அதை நகையாகப் பார்க்கையில், நகை பொன்னை மறைக்கிறது; பொன்னாகப் பார்க்கையில், நகை பொன்னில் மறைந்துபோகிறது. அவ்வாறே உடலாகப் பார்க்கையில், உடல் உயிரை மறைக்கிறது; உயிராகப் பார்க்கையில், உடல் உயிருக்குள் மறைந்து போகிறது.

உலகம் அழிந்து பிரம்மமே மிஞ்சும் என்னும் அத்துவைதத்தின் பிரம்மச் சுட்டுக்கும், உடலைக் கருவியாக்கி உயிரை முன்னிலைப்படுத்தும் சைவத்தின் உயிர்ச் சுட்டுக்கும் வேறுபாடு காண்க. ஏதேனும் ஒன்றைக் காரணமாக்கி எல்லாவற்றையும் ஒற்றைப்படுத்துகிற அத்துவைத முயற்சி எப்போதும் வெல்லாது என்பது ஒரு புறம் இருக்க, மேற்படித் திருமந்திரப் பாட்டைப் படிக்கையில், ‘பொன் ஒன்று கண்டேன்; பெண் அங்கு இல்லை; என்னென்று நான் சொல்லலாகுமா? ஏனென்று நான் சொல்லவேண்டுமா?’ என்று பாதி சொல்லி மீதி சொல்லாத கண்ணதாசன் பாட்டு நினைவுக்கு வரவில்லையா?

பெண்ணை மறைக்கும் பொன், பொன்னை மறைக்கும் பூடணம், உலகை மறைக்கும் பிரம்மம், மனிதரை மறைக்கும் மதம் என்று எத்தனையெத்தனை மறைப்புகள்!

(திரைகள் உயரட்டும்)

கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x