Published : 19 Dec 2019 10:54 AM
Last Updated : 19 Dec 2019 10:54 AM
உஷாதேவி
குசேலர் என்றால் பரம ஏழை என்று பொருள். குசேலரின் இயற்பெயர் சுதாமா. குருகுல காலத்திலிருந்து சுதாமாவும் கிருஷ்ணரும் நெருங்கிய நண்பர்கள். கிருஷ்ணன் மதுராவுக்கு மன்னனாக இருந்தான். சுதாமா சுசீலையை மணந்து, 27 குழந்தைகளை பெற்று வறுமையில் வாடினார்.
அவர் மனைவி சுசீலை சீல குணம் உடையவள். குழந்தைகள் பசியால் அழும்போதெல்லாம், தெய்விக கதை களை சொல்லித் தூங்கவைப்பாள். நாளுக்கு நாள் வறுமைப் பிணியின் தீவிரம் அதிகமாக இருந்தது.
ஒருநாள் குசேலரிடம் சுசீலை, வீட்டில் நிலவும் வறுமையைக் குறிப்பிட்டு, மதுராவின் அரசர் கிருஷ்ணனை சென்று பார்த்து ஏதாவது உதவி கேட்டுவருமாறு கூறினாள்.
குசேலரும் சரி என்றார். கிருஷ்ணனைப் பார்க்கச் செல்லும் போது, என்ன கொண்டு செல்வேன் என்று சுசீலையிடம் வருந்தினார்.
சுசீலை உடனே பக்கத்து வீட்டுக்கு சென்று கொஞ்சம் அரிசியை இடித்து அதில் கிடைத்த அவல் பொரியை வாங்கி வந்து குசேலரின் மேல்துண்டில் முடிந்து அனுப்பினாள்.
குசேலர், கிருஷ்ணனின் அரண்மனையை அடைந்தார். குசேலரைப் பார்த்த கிருஷ்ணன் மிகவும் பரவசமடைந்து அரியணையில் அமரவைத்து, தங்கத் தாம்பாளத்தில் குசேலரின் கால் கழுவி, அந்த நீரைத் தன் தலையில் தெளித்து, நல்ல விருந்து உபசாரங்கள் செய்து, பஞ்சணையில் படுக்க வைத்து, குசேலருக்கு கால் பிடித்துத் தூங்க வைத்தார்.
தூங்கி எழுந்து விடைபெறும் முன்னர், சுசீலை கொடுத்தனுப்பிய அவல் மூட்டையை தயக்கத்துடன் கிருஷ்ணனிடம் குசேலர் நீட்டினார்.
ஒரு பிடி அவலை எடுத்து வாயில் இட்டார் கிருஷ்ணர். இன்னொரு பிடி அவலை எடுத்து வாயில் போடுவதற்குள் அருகிலிருந்த ருக்மணி தடுத்துவிட்டாள். ஒரு பிடி அவல் வாயில் இட்டமைக்கே குசேலரின் வீடும் கிராமமும் தாங்காத நிலைக்கு செல்வம் கோடி கோடியாய் குவிந்துவிட்டது. பக்தன் தாங்கும் செல்வம் அளிக்கப்பட்டு விட்டது. அதிகப்படியான செல்வமும் ஆபத்து என்று தாயாரான ருக்மணிக்கு தெரியும்.
குசேலர் அவல் பொரியைக் கொடுத்துவிட்டு ஏதும் கேட்க வாய் வராமல் வீடு திரும்பினார். வறுமை தாண்டவம் ஆடிய வீட்டில் செல்வம் குவிந்து மாடமாளிகை பட்டு, பீதாம்பரத்துடன் மனைவி், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதைப் பார்த்த குசேலர். கிருஷ்ணின் தயாளக் குணத்தை எண்ணி ஆனந்த கண்ணீர் சொரிந்தார்.
அந்த குசேலரைப் போல் நான் இறைவனிடம் எதையும் எதிர்பாராமல் ஒரு சிறு அவல் பொரியும் தரவில்லையே சுவாமி என வருத்தப்பட்டாள் திருக்கோளுர் பெண்பிள்ளை.
( ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT