Published : 12 Dec 2019 11:18 AM
Last Updated : 12 Dec 2019 11:18 AM
ரஞ்சனி பாசு
அறிவு அறியாமை இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன் அறியாமையால் மரணம்கடந்து அறிவால் அமுதநிலை அடைகின்றான். “ஈசாவாஸ்யம் இதம் சர்வம்” என்ற மந்திரத்துடன் தொடங்குவதால் ஈசாவாஸ்ய உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. இதில் 18 பாடல்கள் உள்ளன. யஜூர்வேதத்தில் ஒரு பிரிவான சுக்ல யஜூர் வேதத்தில் வாஜஸனேய சம்ஹிதையில் இந்த உபநிடதம் அமைந்துள்ளது. தத்யங் அதர்வணர் எனும் முனிவர், தமது மகனுக்கு இந்த உபநிடதத்தை உபதேசித்தார் எனக் கூறப்படுகிறது.
முழுமையே எஞ்சியுள்ளது
இறைவன் முழுமையானவர். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது என்கிறது சாந்தி மந்திரம். ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்றினால், முதல் தீபத்தின் முழுமை கெடுவதுமில்லை.
அதனால் ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும். நாம் பெற்றோராக, உடன்பிறந்தவர்களாக, வாழ்க்கைத் துணையாக, நண்பர்களாகப் பலரை நேசிக்கிறோம். நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அன்பு முழுமையாகவே தான் இருக்கும். ஒரு செடியில் எத்தனையோ மலர்கள் இருக்கும். ஒவ்வொரு மலரும் தன்னளவில் முழுமையாகவே உள்ளது. செடியின் முழுமை மலர்களினால் பாதிக்கப்படுவதில்லை. இம்மூன்று உதாரணங்களைப் போலவே, இறைவனின் முழுமை உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று. இதுவே சாந்தி மந்திரத்தின் சாரம்.
அறுதி உண்மையை நோக்கி
அறுதி உண்மையான பரம்பொருளை அடைய வேண்டுமானால் முதலில் ஒளியை அடைந்தாக வேண்டும். அதற்கு வாழ்க்கையில் இருந்து விலகி ஓடாமல், வாழ வேண்டிய முறையை அறிந்து வாழ்ந்தால் அதுவே ஆன்மிகப் பயிற்சியாகி விடுகிறது. அதுவே ஒளியை அடைவதற்கான வழி. மாறுகின்ற இயல்புடைய இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும்.
உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்.எல்லாம் இறைவனுடையது என்ற தியாக சிந்தையுடன் வாழ்வதால் பற்றின்மை உண்டாகிறது. உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அவரது சொத்துக்கும் சுகத்துக்கும் ஒரு பொறுப்பாளனைப் போல் வாழ்ந்தால், அந்த வேலையின் பலன் நம்மைப் பிணைக்காது. பலன் நம்மைப் பிணைக்காததால் அத்தகைய வேலை அகவளர்ச்சிக்கான ஒரு ஆன்மிக சாதனையாக ஆகிவிடுகிறது.
உலகில் இறைவனைக் காண்பதன் முதல்படி, நம்மில் இறைவனைக் காண்பது. நாம் யார்? உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆன்மா ஆகிய ஐந்தின் தொகுதியே நாம். மனம், பிராணன் புத்தியின் தொகுதி ஜீவன் அல்லது உயிர் எனப்படுகிறது. எங்கும் நிறைந்தவரான இறைவன் நம்மில் ஆன்மாவாக உள்ளார். நம்மில் உள்ள அந்த இறையம்சமாகிய ஆன்மாவே நாம் என உணர வேண்டும். ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு அகவளர்ச்சியில் நாட்டமுறும் போது, இறைநிலையை அடைந்து, பிறவியற்றவர்கள் ஆகிறோம்.
ஆன்மா அசைவற்றது. புலன்களால் ஆன்மாவை அறிய இயலாது. ஏனெனில் அவை புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை. இந்த உலகின் இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமாக உள்ளது பிராணன். அசைகின்ற பிராணன் இயங்கு வதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா.
ஆன்ம மெய்யறிவு என்பது ஒரு அக அனுபவம். அதை அடைந்தவர்களின் உணர்வு விரிந்து, பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது. சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமைகளை அவர்கள் கடந்து விடுகிறார்கள். எங்கும் தன்னையே, தன்னிகரற்ற மெய்யுணர்வை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்.
ஒளியின் காட்சி
இந்த நிலையைப் பெற்றவன், ஒவ்வொரு தோற்றத்துக்கும் பின்னால் ததும்புகிற இறையுணர்வைக் காண்கிறான். ஆன்ம மெய்யறிவு என்பது மற்ற எல்லா அறிவுகளின் நிறைவாக, அனைத்தையும் உள்ளடக்கியதாக, மற்ற அறிவுகளைவிட உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இறைவன் ஒளிமயமானவர். இறைவன் அடையாளம் காணும் வரையறை இல்லாதவர்; தூயவர். அவ்வாறான ஒளிமயமான இறைவனை அவன் அடைகிறான். உயர் நோக்கங்கள் இல்லாமல் அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவதால் மட்டுமே இறைவனை அடைய முடியாது.
அதேவேளை, இறையுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக அன்றாடக் கடமைகளை விடுத்து, போலித்தனமாக தியானத்தில் ஈடுபட முயற்சிப்பதும் தவறு. தியானம், செயல்கள் இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக் கடந்தவனாகிறான்.
அதேபோல், அருவ வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால் மரணத்தைக் கடந்து அருவ வழிபாட்டால் இறவாநிலையை அடைகிறான். “உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்.”
ஒளியின் மென்மையிலும், வசீகரத்திலும் ஒருவன் தன்னை இழந்து நிற்பானேயானால், உண்மையை, உண்மைப்பொருளை உள்ளது உள்ளபடி அறிய அவன் ஒளியையும் கடந்து செல்ல வேண்டும். அதற்காகவும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். “அனைத்து உயிர்களையும் பேணிக் காப்பவனே, தனியாகப் பயணிப்பவனே, அனைத்தையும் ஆள்பவனே, சூரிய தேவா, பிரஜாபதியின் மகனே! உனது கிரணங்களை விலக்கிக்கொள். உனது பேரொளியைச் சுருக்கிக்கொள்.
மகிமை வாய்ந்த உனது வடிவத்தை உனதருளால் நான் காண வேண்டும். அந்தச் சூரியனில் இருப்பது நானே. என்று 16-வது மந்திரம் கூறுகிறது. ஒளிக்கு அப்பால் தம்மையே கண்டதாக முனிவர் கூறுகிறார். இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பில் இருந்து வெளியேறுகின்ற பிராணன் எங்கும் நிறைந்த அழிவற்ற பிராணனுடன் கலந்துவிடும்.
ஓம். மனமே! செய்தவற்றை நினைத்துப் பார். மனமே செய்தவற்றை நினைத்துப்பார். இதுவரை செய்துள்ள செயல்களை அறிகின்ற இறைவனே! இனி புதிய செயல்கள் செய்து பலன்கள் வராமல், செய்தவற்றுக்கான பலனை அனுபவிப்பதாக மட்டும் எங்கள் வாழ்க்கை அமையட்டும் என்று பிரார்த்தனை செய்து ஈசாவாஸ்ய உபநிடதம் நிறைவு பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT