Published : 05 Dec 2019 01:43 PM
Last Updated : 05 Dec 2019 01:43 PM

ஜென் துளிகள்: எந்த மனத்துடன் சாப்பிடுவீர்கள்?

வஜ்ர சூத்திரத்தைப் பற்றிய தன் உரைகளால் புகழ்பெற்ற அறிஞர் டோக்குஸான் (782-865). அவர் பல இடங்களுக்கு உரைகள் நிகழ்த்துவதற்காக அழைக்கப்பட்டார். அவர் பயணம்செய்யும்போது எப்போதும் தன்னுடன் உரைகள், குறிப்புகளை உடன் எடுத்துசென்றார்.

ஒரு நாள், வஜ்ர சூத்திரத்துக்கு ஒரு ஜென் பள்ளி சில தவறான போதனைகள் வழங்கிவருவதைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அதனால், அந்தக் குறிப்பிட்ட மடாலயத்துக்குச் சென்று, அங்குள்ள ஜென் குருவிடம் பேச நினைத்தார் அவர். செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் பலகாரங்கள் விற்பதை அவர் பார்த்தார். அவருக்குப் பசியாக இருந்ததால், அந்தக் கடைக்குச் சென்று ஒரு தட்டைப் பயிறு கேக் சாப்பிடலாம் என்று நினைத்தார்.

அந்தக் கடையை ஒரு மூதாட்டி நடத்திவந்தார். “அந்தக் கூடையில் என்ன வைத்திருக்கிறீர்கள், மரியாதைக்குரியவரே?” என்று கேட்டார் அவர். “அவை வஜ்ர சூத்திரத்தைப் பற்றிய குறிப்புகள், உரைகள்,” என்று பெருமையுடன் மூதாட்டியிடம் சொன்னார் டோக்குஸான்.

“அப்படியா? அப்படியென்றால், உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லிவிட்டால், உங்களைச் சிறப்பானதொரு தட்டைப்பயிறு கேக் தந்து உபசரிக்கிறேன். ஆனால், பதில் சொல்லவில்லையென்றால், உங்களை அதை வாங்கக்கூட விடமாட்டேன்!” என்றார் மூதாட்டி.

“எதை வேண்டுமானாலும் என்னிடம் நீங்கள் கேட்கலாம்,” என்றார் டோக்குஸான்.
“வஜ்ர சூத்திரத்தில், ‘கடந்தகால மனத்தைப் பிடிக்கமுடியாது; தற்கால மனத்தைப் பிடிக்கமுடியாது; வருங்கால மனத்தைப் பிடிக்க முடியாது,’ என்று சொல்லப்பட்டிருப்பதாக கேள்விபட்டேன். எந்த மனத்துடன் நீங்கள் தட்டைப் பயிறு கேக்கை சாப்பிடப் போகிறீர்கள்?” என்று கேட்டார் மூதாட்டி. தட்டைப் பயிறு கேக்கை கையில் வைத்து சாப்பிட்டது போல சைகை செய்த டோக்குஸான், ஆஹா, என்ன சுவை! என்றார்.

- கனி

எது ஜென்?

எதைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பது ஜென்.இதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, நடப்பது, அமர்வது, சாய்ந்து உறங்குவது என நீங்கள் செய்யும் அனைத்துமே ஜென்தான்.

- போதிதர்மர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x