Published : 28 Nov 2019 11:16 AM
Last Updated : 28 Nov 2019 11:16 AM
விந்து விட்டவர் நொந்து கெட்டார்; சரி. விடாதவர்? கெட மாட்டார். எனில் விந்து விடாதிருக்க ஏதேனும் வழியுண்டா? அதுதான் விந்துவிடாப் புணர்ச்சி அல்லது விந்து மறித்தல்.
மாத ரிடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்;
மாதர் உயிர்ஆசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்றுஅங்ஙன் காதலாம் சாற்றிலே.
(திருமந்திரம் 1961)
யோகநெறியில் நிற்பவர்கள் மாதரைக் கலந்து முயங்கினாலும் காதலால் கருத்தழிந்து விந்தை விட்டுவிடமாட்டார்கள்; மாதர்மேல் உயிராசை கொண்டவர் நிலை இதற்கு நேர்மாறு; காதலால் கருத்தழிந்து விந்து விட்டு வாடுவார்கள்.
இதென்ன கதை? ஏன் விந்து மறிக்கச் சொல்கிறார்கள் என்று கேட்பார் இதன் பின்புலம் அறிக: சமணம், பௌத்தம் போன்ற துறவுச் சமயங்கள் மேலோங்கிய காலத்தில், ‘உயிர் வளர்ப்பின் மேல்நிலைகளுக்குப் போக விரும்புகிறவர்கள் காமத்தைக் கடிந்துகொள்வதும் கட்டுப்படுத்திக் கொள்வதும் முதன்மை; ஏனெனில் காமம் அறிவழிக்கும்’ என்று முன்வைக்கப்பட்டது.
இந்தப் புலிகளைப் பார்த்துப் பிற சமயங்களும் சூடு போட்டுக்கொண்டன. தாந்திரிகம் எனப்படும் தந்திரச் சமயம் இதற்கு எதிர்நிலை எடுத்தது; ஆண்-பெண் கலப்பு இயல்பானது என்ற நிலையில் அதை ஏன் கடிந்துகொள்ள வேண்டும்? கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முண்டியது.
‘காமம் சான்ற கடைக்கோட் காலை’ என்னும் தொல்காப்பியத்திலும் ‘காமம் நிறைவடைந்த பிறகு’ என்று சொல்லப்படுகிறதே ஒழியக் ‘காமத்தைக் கடிந்து கட்டுப்படுத்திக்கொண்ட பிறகு’ என்று சொல்லப்படவில்லை (தொல். பொருள். கற்பு. 51).
சிக்கல் இதுதான்: காமம் என்பது உயிர் வளர்ப்பில் ஓர் இடைகழி முற்றம். அதில் கால்பாவிக் கடக்க வேண்டுமா? கால்பாவினால் கறைபடும் என்று தாவிக் கடக்க வேண்டுமா?
தோயாமல் அறிதல் இல்லை
உயிர்களின் இயல்பு அழுந்தி அறிதல் என்னும் சைவசித்தாந்தம். அதாவது தோய்ந்து அல்லது பட்டு அறிதல். தோயாமல் எதையும் அறியமுடியாது—காமம் உட்பட.
பிறவற்றில் தோய்ந்தால் அவற்றைக் குறித்த அறிவு உருவாகிறது; காமத்தில் தோய்ந்தாலோ காமத்தைக் குறித்த அறிவு உருவாகும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை என்பதோடு அல்லாமல் தொகுத்து வைத்திருக்கும் மொத்த அறிவும் நிலைகுலைந்து போகிறது. இது ஒரு முரண்: காமத்தில் தோயாமல் காமத்தை அறியமுடியாது; காமத்தில் தோய்ந்தாலோ அறிவே அழிந்துவிடும். பௌத்த, சமண சமயங்கள் இதற்குத் தீர்வாகக் காமம் என்கிற இடைகழி முற்றத்தில் கால்பாவித் தோயாமல் தாவிக் கடக்கும் உத்தியை வலியுறுத்தின.
தாந்திரிகமோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற அடிப்படையில் காமத்தில் கால்பாவித் தோய்ந்து கடக்கும் உத்தியை வலியுறுத்தியது. திருமூலர் இவை இரண்டுக்கும் இடைநிலை காண முயல்கிறார்: அதாவது, காமத்தில் கால்பாவித் தோயலாம்; ஆனால் அறிவு அழிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் விளைவே திருமூலர் பயிற்றுவிக்கும் விந்து மறித்தல் என்னும் உத்தி.
துய்த்தல் குற்றமில்லை; துய்க்கும் காலத்தில் பொறி கலங்கி அறிவைத் தேய்த்தலே குற்றம். காமத்தில் பொறி கலங்கி அறிவற்றுப் போவது எப்போது? விந்து விடும்போது. விந்தை மறித்துவிட்டால் பொறி கலங்காது; அறிவற்றும் போகாது அல்லவா? திருமூலர் பாடுகிறார்:
யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குஉறாப்
போகம் சிவபோகம்; போகிநல் போகமாம்;
மோகம் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.
(திருமந்திரம் 1960)
ஓகம் ஓகம் என்கிறார்கள். ஓகம் என்பதென்ன? இரண்டாக இருக்கும் ஆணும் பெண்ணும் கூடி ஈருடல் ஓருடல் ஆகும்வண்ணம் இறுகப் புணர்ந்தாலும் விந்து விடாமல் இருத்தல்; அங்கே இன்பம் இருக்காதே என்று எண்ண வேண்டாம். அங்கிருக்கும் இன்பம் உடல் இன்பம் அன்று; இறை இன்பம். உடலைக் கெடுக்காத நல்லெண்ணெய்போல் இது அறிவைக் கெடுக்காத நல்லின்பம்.
ஈருடல் கலப்பில் ஈருயிர் இன்புறும் இறை இன்பப் புணர்ச்சியை உயிர் வளர்க்கும் உபாயமாக்குகிறார் திருமூலர்.
கரு.ஆறுமுகத்தமிழன்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT