Published : 21 Nov 2019 12:48 PM
Last Updated : 21 Nov 2019 12:48 PM
கேரள சமூகத்தில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியவர்களுள் ஒருவர் சாது கொச்சுகுஞ்சு உபதேசி. முப்பது ஆண்டுகளாக கிறிஸ்துவின் போதனைகளை குடிசைகள் முதல் அரண்மனைகளில் வசிக்கும் மக்கள்வரை எடுத்துச் சென்றவர்.
1884-ல் பிறந்த சாது கொச்சுகுஞ்சு உபதேசியார், உலக வாழ்க்கையின் நிரந்தரமின்மையைப் பார்த்து ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியவர். அவரது இரண்டாவது மகன் சாமுவேல் குட்டியின் அகால மரணம் அவரை இறைவனை நோக்கி உந்தித் தள்ளியது. இறைவனின் திருவிருப்பம் என்று அந்த இழப்பைக் கண்டு ஆறுதலடைந்தார். தனது இறந்துபோன மகனின் வயதிலுள்ள சிறுவனை கொச்சுகுஞ்சுவின் மனைவி அலியம்மா, வாஞ்சையுடன் அரவணைத்த காட்சி அவரை ஞானியாக்கியது. ‘துக்கத்தின்டே பானபத்ரம் கர்த்தாவின்டே கையில் தந்நால்’ என்று பாடத் தொடங்கினார். ‘எனது துயரத்தின் ரசத்தைக் கர்த்தரின் கையில் தந்தேன்’ என்பதுதான் அதன் அர்த்தம். ‘யாராலும் சகாயமில்லை. எல்லாரும் உலகில் கண்டும் காணாதேயும் போவார்’ என்ற பாடல் அங்கே பிறந்தது.
அவர் எழுதிய ‘பரம கிறிஸ்தியானித்வம்’ நூலில் இப்படி எழுதுகிறார். “எல்லாரும் என்னை விட்டுச் சென்றனர். ஆனால், நான் தனியாக இல்லை என்றார் எனது பிரபு. நான் தெய்விக விசுவாசத்தின் ஒரு பகுதியாக மாறினேன்.’
சாது கொச்சுகுஞ்சுவின் சோதனையும் துயரமுமான நாட்களை நினைவுகூரும் வாசகம் இது.
கம்பளிப் புழுவிலிருந்து வண்ணத்துப் பூச்சி எப்படி வெளியே வந்ததோ, அப்படியாக உலக பந்தங்களின் பிடிப்பிலிருந்தும் அது தந்த துயரங்களிலிருந்தும் சாது கொச்சுகுஞ்சு வெளியே வந்தார். ஏசுவின் ராஜ்ஜியத்தை அமைக்க கேரளம் முழுவதும் பயணித்த சாது கொச்சுகுஞ்சு, கேரளத்தில் அப்போதிருந்த சமூகக் கொடுமைகளான வரதட்சிணை, சாதிய ஒடுக்குமுறை, அநீதி ஆகியவற்றையும் எதிர்த்தார்.
வாழ்க்கை என்பது எப்போதும் மகிழ்ச்சிகரமானதாகவே இருக்காது. சந்தோஷத்தையே நாடுபவர்களால் ஒருபோதும் துயரங்களைத் தாங்க முடியாது. துயரங்களில் கடவுளைச் சரண்டைந்தால் எப்படியான விடுதலை கிடைக்கும் என்பதற்கு சாது கொச்சுகுஞ்சுவின் வாழ்க்கை ஒரு உதாரணமாகும்.
“எது நேர்ந்தாலும், நான் கடவுளின் நேசமிக்க கரங்களில் என்னை ஒப்படைத்துக் கொள்வேன். துன்பங்களின் சமுத்திரங்களிலிருந்து அந்தக் கைகள் என்னை அள்ளித் தூக்கின. அவர்தான் எனக்கு பணிவைக் கற்றுத்தந்தார். நான் அவரது தெய்விக மதுரத்தில் ஆழ்ந்தேன். கடவுள் எனக்குக் கூடுதலாக ஒரு நாளைத் தந்தால், நான் மீண்டும் அவரது கரங்களிலேயே அடைக்கலம் கொள்வேன்.” என்று கூறிய சாது கொச்சுகுஞ்சு, ஒரு வெள்ளிக்கிழமை காலை நண்பர்களும் சீடர்களும் குழந்தைகளும் சூழ கண்ணை மூடி நித்தியத்துவத்தை அடைந்தார்.சாது கொச்சுகுஞ்சு உபதேசியார்
- டேவிட் பொன்னுசாமி
சாது கொச்சுகுஞ்சு உபதேசியார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT