Published : 21 Nov 2019 12:48 PM
Last Updated : 21 Nov 2019 12:48 PM
வடக்குப் பக்கம், தெற்குப் பக்கம் என்றிப்படி திசை சம்பந்தப்படாமல் ஒரு இடமும் இருக்க முடியாது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்காகவே வழி என்பது இருக்கிறது. அதனால் அதுவும் திசையோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.
வாழ்க்கை நடத்துவதிலும் வழியைச் சொல்கிறோம். நல்ல வழியில் வாழ்க்கை நடத்த வேண்டும், கெட்ட வழியில் கூடாது என்கிறோம். பிரச்சினைகள் அநேகம் ஏற்படும்போது, ‘அது தீர என்ன வழி?’ என்று யோசிக்கிறோம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிறோம். இப்படி வாழ்க்கையையும் ஒரு பயணமாக உருவகப்படுத்திக் கொண்டு அதில் வழி என்பதைப் பற்றிப் பேசுகிறோம். வாழ்க்கை நடத்துவது என்று சொல்லும் போதே நடை சம்பந்தம் வந்துவிடுகிறது! ‘நடப்பது’ என்றால் அதைச் செய்ய ஒரு வழி இருக்கத்தானே வேண்டும்? இங்கிலீஷிலும் ‘way of life’ என்று வழியை வைத்தே சொல்கிறார்கள். இடத்தில் ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்குப் போகிற மாதிரி, காலத்தில் ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்று, அப்புறம் இன்னொன்று என்று போய்க் கொண்டேயிருப்பதுதான் வாழ்க்கை.
போய்க் கொண்டே
‘போய்க்கொண்டே’ என்று சொல்கிற போதும் மறுபடி வழி என்ற ரூபகம் (உருவகம்) வந்து விடுகிறது. அதேபோல, எண்ணங்கள் ஒன்றிலிருந்து ஒன்றுக்குப் போய்க் கொண்டேயிருப்பதையும் வாழ்க்கையில் பார்க்கிறோம். இப்படி, இருந்தது இருந்தபடி இல்லாமல் மாறிக்கொண்டே போவது. சலனம் என்ற எண்ணம் வாழ்க்கையின் அமைப்பிலும் தெரிவதால் அதை ஒரு பயணமாகச் சொல்லி அதில் வழி என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது.
திசை தெரிந்துதான் ஒரு வழியில் போக வேண்டும். தெரியாவிட்டால், போகவேண்டிய இடத்திற்கு போகாமல் எங்கேயாவது தப்பாகப் போய்ச் சேருவோம்.
வாழ்க்கையிலும் திசையிருக்கிறது! வாழும் வழி இல்லாதவர்களை ‘திக்கற்றவர்கள்’ என்கிறோம். திக்கும் திசையும் ஒன்றேதானே? சம்ஸ்கிருதத்தில் ‘திச்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் ‘திக்’ வருகிறது. ‘திச்’ நீண்டு ‘திசா’. அதாவது திசை என்றாகிறது. ‘திக்’ என்பதையே தமிழில் ‘திக்கு’ என்கிறோம்.
இடமாகவுள்ள ‘திச்’சை வைத்தே ‘தேசம்’ என்ற வார்த்தை உண்டாயிருக்கிறது. தேசம் என்பது நாலு திசைகளும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்புதானே? ‘பிரதேசம்’ என்பதும் இதேபோல் உண்டான வார்த்தை.
ஆதேசம் சந்தேசம் உபதேசம்
செய்யவேண்டியதைச் சொல்லிக் கொடுக்கும் ‘திச்’சிலிருந்து ஆதேசம், சந்தேசம், உபதேசம் என்ற வார்த்தைகள் வந்திருக்கின்றன. பொதுவாக எல்லா ஜனங்களுக்குமுள்ள திசைகளில் குறிப்பிட்ட ஜனங்களுக்கு மாத்திரம் உடைமையாக எல்லை கட்டித் தரும் பகுதி ‘தேசம்’.
ஆதேசம் என்றால் அதிகாரபூர்வமான உத்தரவு. தெய்வக் கட்டளையாக வெளிப்படவோ மனசுக்குள்ளேயோ ஒன்று தோன்றுவதைக்கூட ஆதேசம் என்றே சொல்வது.
சந்தேசம் என்றால் தகவல், செய்தி. ‘உத்தரவு’ என்பதன் அதிகாரம் ஒட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக அனுப்பும் எல்லா செய்தியும் சந்தேசந்தான்.
ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது என்பதன் சம்பந்தமில்லாமல், ‘உத்தேசம்’, ‘ஏகதேசம்’ என்றும் ‘தேசம்’ போட்டுக் கொண்டு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன.
‘உத்தேசம்’ வெளியிலே உத்தரவாகவோ, சாதாரண செய்தியாகவோ சொல்லாமல் மனசுக்குள்ளேயே ஒன்றை நினைப்பது. நிச்சயமாகத் தெரியாததை ஒரு குறிப்பாக அனுமானித்துச் சொல்லும்போதும், ‘உத்தேசமாகச் சொன்னேன்’ என்கிறோம்.
முழுசான ஒன்றில் ஒரு பங்காக இருப்பதை ‘ஏகதேசம்’ என்பது. பேச்சு வழக்கில் மற்றவர்களுக்குப் பங்கு தராமல் ஒருத்தரே முழுசையும் செய்தால் ‘ஏகதேசமாக அவரே பண்ணிட்டார்’ என்கிறோம்.
‘உபதேசம்’ என்றவுடன் குரு-சிஷ்யர்கள் நினைவு வந்து விடுகிறது. உபதேசம் கொடுக்க குருவும், பெற சிஷ்யனும் இல்லாமல் உபதேசம் என்பதே கிடையாது.
எவரும் எவருக்கும் எதையும் சொல்வது சந்தேசம். கேட்பவனுக்கு நல்லதோ இல்லையோ அவன் கேட்டுத்தானாக வேண்டும் என்று ராஜா மாதிரி உயர்ந்த ஸ்தானத்திலிருப்பவன் பிரஜை மாதிரி கீழ் ஸ்தானத்திலிருப்பவனுக்குச் சொல்வது ஆதேசம். கேட்பவனின் நல்லதற்காகவே குரு என்பவர் சிஷ்யனுக்குச் சொல்வது உபதேசம்.
ஸ்தானத்தில் ராஜாவுக்கும் பிரஜைக்கும் இருப்பதை விடவும் குரு சிஷ்யர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு ஜாஸ்தி. குரு என்பவர் ஈஸ்வரனின் ஸ்தானத்திலேயே வைக்கப்பட்டிருப்பவர். ஒரு பிரஜை ராஜாவுக்குக் கட்டுப்பட்டிருப்பதை விடவும் சிஷ்யன் குருவிடம் அடங்கிக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவன்.
ஆனாலும் ‘ஆதேசம்’ என்பதன் கண்டிப்பு இல்லாமல், குரு செய்வதற்கு ‘உபதேசம்’ என்று பிரேமையைத் தெரிவிப்பதாகப் பெயர் கொடுத்திருக்கிறது.
(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT