முல்லா கதைகள்: வேகம் தேவை முல்லா
‘ஏன் ஒரு காரியத்தை வேகமாகச் செய்யவே முடியவில்லை?’ என்று ஒரு நாள் முல்லாவின் எஜமானர் அவரிடம் கேட்டார்.
‘ஒவ்வொரு முறை உன்னிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லும்போது, அதை நீ துண்டுத்துண்டாகச் செய்கிறாய். மூன்று முட்டைகளை வாங்குவதற்கு மூன்று முறை சந்தைகக்குச் செல்ல வேண்டிய அவசியமேயில்லை,’ என்றும் சொன்னார்.
முல்லா தன்னை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்தார். ஒருநாள், எஜமானர் நோய்வாய்ப்பட்டார். ‘மருத்துவரை அழைத்துவா, முல்லா,’ என்றார் அவர். வெளியே சென்ற முல்லா, ஒரு கும்பலுடன் வீட்டுக்கு வந்தார். ‘எஜமானரே, இவர்தான் மருத்துவர். சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் உடன் அழைத்துவந்திருக்கிறேன்,’ என்றார் முல்லா.
‘அவர்கள் எல்லாம் யார்?’ என்றார் எஜமானர்.‘பற்றுப்போடுவதற்கு மருத்துவருக்கு ஒரு ஆள் வேண்டும் இல்லையா? அதனால், பற்றுத் தயாரிப்பவரை அழைத்துவந்திருக்கிறேன். அவரது உதவியாளரும், அவருக்குப் பற்றுத் தயாரிக்க மருத்துவ பொருட்களை எடுத்துத்தருபவர்களும் உடன்வந்திருக்கிறார்கள். நமக்கு நிறையப் பற்றுத் தயாரிக்கத் தேவை ஏற்படலாம் அல்லவா? அதற்கு வெந்நீர் தேவை.
தண்ணீரைச் சூடாக்க நமக்கு எவ்வளவு கரித் தேவைப்படும் என்பதைப் பார்ப்பதற்காக கரிக்காரரை அழைத்துவந்துள்ளேன். நீங்கள் ஒருவேளை இறந்துவிட்டால் என்ன செய்வது? அதனால், இறுதிச் சடங்குகளை மேற்கொள்வபரையும் அழைத்துவந்துள்ளேன்,’ என்றார் முல்லா.
- யாழினி
