Published : 04 Oct 2019 12:19 PM
Last Updated : 04 Oct 2019 12:19 PM

இறைத்தூதர் சரிதம் 15: இறைத்தூதரின் கொடும்நாள்

சனியாஸ்னைன் கான்

அபூ லஹப், பனு ஹாஷிம் குழுவின் தலைவரான பிறகு, இறைத்தூதரை அவர்கள் குழுவிலிருந்து வெளியேற்றினார். அபூ தாலிப், கதீஜா இருவரும் இறந்துவிட, அவர் தனித்துவிடப்பட்டார். யாருடைய ஆதரவும், ஆறுதலும் இல்லா நிலையிலும் அவர் தனது பணிகளைத் தொடர்ந்துவந்தார். ஹஜ் காலத்தில் மக்காவுக்கு வந்திருந்த பல இனக் குழுக்களை அவர்களின் கூடாரங்களுக்குச் சென்று சந்தித்தார். குர் ஆனின் செய்தியை மக்களிடம் கொண்டுசெல்லும் தன் பணியைத் தடையின்றி செய்வதற்காக, அவர்களிடம் தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரினார் இறைத்தூதர்.

அவர் உதவி கேட்ட இனக்குழுக்கள் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்த நேரத்தில், குரைஷ் இனத்தவர் இறைத்தூதரைக் கொல்வதற்காக ஒரு குழுவை ஏற்பாடு செய்தனர். இதை அறிந்துகொண்ட இறைத்தூதர், அன்றைய இரவே மக்காவிலிருந்து தன் வளர்ப்பு மகனான ஹாரித்தாவுடன் தாயிஃப் நகரத்துக்குப் பயணமானார். மக்காவிலிருந்து தென்கிழக்கில் நூறு கிலோமீட்டர் தொலைவில் அந்நகரம் உள்ளது. அங்கிருந்த மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்துவந்தனர்.

அவர்கள் பெரும் பழத்தோட்டங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். அதிக வட்டிக்குக் கடன்கொடுக்கும் வட்டிக்காரர்களாகவும் இருந்தனர். அரேபியாவின் தென்பகுதியில் வசித்துவந்த ஒரேயொரு மருத்துவர் ஹரித் இபின் கல்தாவின் இல்லமும் தாயிஃப் நகரத்தில்தான் அமைந்திருந்தது. அரேபிய மொழியில், தாயிஃப் என்பதற்கு ‘சுவர்’ என்று அர்த்தம். தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக தாயிஃப் நகர் முழுவதும் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன. ‘சுவர்களின் நகரம்’ என்பதால் அதை அனைவரும் தாயிஃப் என்று அழைக்கத்தொடங்கினர். அந்நகரில் மூன்று சகோதர்களான அப்து யலயல், மசூத், ஹபிப் ஆகியோர் வசித்துவந்தனர்.

அவர்கள் அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள நபர்களாக இருந்தனர். அவர்களைச் சம்மதிக்கவைத்துவிட்டால், மற்றவர்களும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க சம்மதித்துவிடுவார்கள் என்று இறைத்தூதர் நினைத்தார்.
அதனால், மக்காவிலிருந்து தாயிஃப் நகரத்துக்கான நெடிய பயணத்தை தன் வளர்ப்பு மகன் ஹாரித்தாவுடன் தொடர்ந்தார். பல நாட்கள் நடைப்பயணத்துக்குப்பிறகு, தாயிஃப் நகரத்தை வந்தடைந்தனர். நகரத்தை அடைந்தவுடன், நேராக மூன்று சகோதரர்களைச் சந்திக்க இறைதூதர் சென்றார். ஆனால், எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, அவர்கள் நடந்துகொண்டனர்.

இறைத்தூதருக்குப் பாதுகாப்பு வழங்கமுடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார் அவர். தாயிஃப் நகரில் வசித்துவந்த மேலும் சிலரைச் சந்திக்கச் சென்றார் இறைத்தூதர். ஆனால், யாருமே அவருக்குப் பாதுகாப்பு வழங்க முன்வரவில்லை. யாரும் அவரை விருந்தினராகக் கூட நடத்தவில்லை. உணவு, தண்ணீர்கூட வழங்காமல் அவரை உடனடியாக அங்கிருந்து சென்றுவிடும்படி அவர்கள் வற்புறுத்தினர்.

அந்நகரத்தைவிட்டு இறைத்தூதர் செல்லும்போது, அங்கு தெருக்களில் கூடியிருந்தவர்கள், அவர் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். ஹாரித் அவரைப் பாதுகாக்க முயற்சிசெய்தார். ஆனால், இந்தத்தாக்குதலால் இறைத்தூதர் கடுமையான காயங்களுக்குள்ளானார். இந்த நிகழ்ச்சி நடந்து பல ஆண்டுகளுக்குப்பிறகு, “தன் வாழ்நாளின் மிகவும் கடினமான நாள் அதுதான்” என்று நினைவுகூர்ந்திருக்கிறார் இறைத்தூதர்.
காயங்களுடன் ஹாரித்தாவின் உதவியோடு நடக்கமுடியாமல் நடந்து அந்த நகரத்தைவிட்டு வெளியேறினார் இறைத்தூதர்.

- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x