Published : 19 Sep 2019 12:20 PM
Last Updated : 19 Sep 2019 12:20 PM
பாரதியார் எழுதிய ‘காற்று’ வசனகவிதையில் இரண்டு கதாபாத்திரங்கள் வரும். இரண்டுமே துண்டுக்கயிறுகள். ஒன்று ஒரு சாண் நீளமுடையது. மற்றொன்று முக்கால் சாண். இரண்டும் கணவன் மனைவியாம். ஒன்றின் பெயர் கந்தன். மற்றொன்று வள்ளி. வாசலில் போடப்பட்டிருக்கும் சிறுபந்தலில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிறுகள் அவை. அவற்றிடம் பேச்சுக் கொடுப்பார் பாரதி. கயிறு பேசுமா என்றால் பேசிப் பார் என்பார்.
இருவரும் பாரதியின் கண்முன்னால் குதூகலமாக ஆடிப்பாடிக் கொண்டிருப்பார்கள். வள்ளி, களைப்பெய்தித் தூங்கிப் போய்விடும். அது தூங்குகிறதா என்று பாரதி கேட்பார். அப்போது கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு காற்றுத் தேவன் தோன்றுவான். ‘நான் ப்ராண சக்தி. துயிலும் சாவுதான். சாவும் துயிலே’ என்று தத்துவம் சொல்லி மறைவான்.
இந்த வசனகவிதையை பல நூறுமுறை படித்தாயிற்று. சொல்லப்போனால் பால்யத்திலிருந்தே படித்துக்கொண்டு வருகிறேன். கொஞ்சம்கூட அலுப்புத் தட்டவில்லை.
கந்தா சவுக்கியமா?
நேற்று எங்கள் வீட்டுக்கு முன்னால் வெயிலுக்காக வேய்ந்திருந்த ஓலைப்பந்தலில் சிறிதும் பெரிதுமாக இரண்டு கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன. இந்தக் கயிறுகளைப் பார்த்ததும் பாரதி எழுதிய மேற்படி வசனகவிதை நினைவுக்கு வந்துவிட்டது.
பாரதி சொன்னதுபோல் அவற்றிடம் பேசிப் பார்ப்போமே என்று தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் என் செய்கையைக் கவனிக்கவில்லை.
மெல்ல, “கந்தா, சவுக்கியமா?” என்றேன் கயிற்றிடம். துளிக்கூட அசைவில்லை. பாரதி வசனகவிதையில் சுவை கூட்டுவதற்காகச் சொன்ன விஷயத்தை இப்படிச் சோதித்துப் பார்ப்பதாவது என்று என்னையே நொந்து கொண்டேன். வீட்டுக்குள் போகத் திரும்பினேன்.
“என்ன கவிராயா புறப்பட்டுவிட்டாய்?” என்று மெல்லிய குரல் கேட்டது.
சந்தேகமில்லை. கயிறுதான் பேசுகிறது.
“கந்தா, நீதான் பேசுகிறாயா?”
“நானேதான்!”
“பாரதிக்குக் காட்சிதந்து மறைந்த கந்தன்தானே?”
“அதே கந்தன்தான்! நான் காற்றுத் தேவன். நான் மறைவதில்லை. எனக்கு மரணமில்லை!”
“பாரதிக்கு அருளியதுபோல் எனக்கும் காற்றுத்தேவன் தரிசனம் கிட்டும்படிச் செய்யலாகாதா?”
“செய்யலாம்தான். அதைத் தாங்குகிற திராணி உனக்குண்டோ?”
வள்ளி சோம்பல் முறித்து எழுவதுபோல் வந்து, “ஏன் இப்படி அவரைப் பயமுறுத்துகிறீர்கள். பாரதிக்குப் பிறகு நம்மை மதித்து வார்த்தை சொல்ல வந்தவரிடம் இப்படியா நடந்துகொள்வீர்கள்?” என்று கேட்டது.
“கந்தா, கண்கொண்டு பார்ப்பதற்கும் என்ன திராணி வேண்டியிருக்கிறது?”
கந்தன் கடகடவென்று சிரித்து, “சரிதான்! உன்னை மாதிரி பகவான் ராமகிருஷ்ணரிடம் ஒரு சீடன் கேட்டான்!’
“என்னவென்று?”
“கடவுளைக் காட்டாவிட்டால் போகிறது. கடவுள் எப்படி இருப்பார் என்றாவது சொல்லக்கூடாதா?”
“ராமகிருஷ்ணனர் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். நாட்டு வைத்தியத்தால் பலன் கிட்டவில்லை. டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் என்ற ஆங்கில வைத்தியரால் கொஞ்சம் முன்னேற்றம் உண்டாயிற்று. டாக்டர் தமது தொழிலை விட்டுவிட்டு ராமகிருஷ்ணருடன் வந்து தங்கிவிட்டார். பகவானுடன் கூடவே இருந்து அவருக்கு வைத்தியம் பார்த்துவந்தார். அவர் ஒரு பரம நாத்திகர்”.
“அடடே”
“பகவான், தன் பிரார்த்தனையையும் பிரசங்கத்தையும் முடித்துச் சென்ற பின்னர், டாக்டர் சர்க்கார், ராமகிருஷ்ணரின் சீடர்களிடம் அறிவியல் பூர்வமாக மறுப்பு சொல்லிவருவது வழக்கம். இது சீடர்களுக்கு ஆத்திரமூட்டியது. அவர்கள் அதை ராமகிருஷ்ணரிடம் முறையிட்டனர். அவர் ஒருநாள் மறைந்திருந்து டாக்டர் பேசுவதைக் கேட்டார். பிறகு தனது சீடர்களிடம் ‘ஆஹா!, டாக்டர் எவ்வளவு கோவையாக விவாதம் செய்கிறார். அவர் அறிவுக்கூர்மையை என்னவென்பேன். காளிதேவியின் கருணையே கருணை’ என்று உருகினாராம்.”
ராமகிருஷ்ணர் இறந்த பிறகு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட டாக்டர் மகேந்திர லால் சர்க்காரிடம் ஒரு ஆங்கில ஏட்டின் நிருபர் கேட்டாராம்:
‘இப்போது சொல்லுங்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’
டாக்டர் சொன்னார்.
ராமகிருஷ்ணரின் இறுதி ஊர்வலத்தைக் காட்டி “இல்லை! என் கடவுள் செத்துப்போய்விட்டார்!” என்றார்.
வானத்தில் கருமேகங்கள் திரண்டன.
(தேடல் தொடரும்)
- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com
கடவுள், கடவுள்தன்மை, சமயம், மெய்ஞானத் தேடல் குறித்து ஞானிகள், மகான்கள் வாழ்க்கையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை மீள் விசாரணை செய்யும் தொடர் இது. மகாகவி சுப்ரமணிய பாரதியின் மிகச் சிறந்த வசனகவிதைகளில் ஒன்றான ‘காற்று’ கவிதையிலிருந்து தொடங்கி ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையிலிருந்து ஒரு கவளத்தை நம்மிடம் பகிர்கிறது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment