Published : 12 Sep 2019 11:51 AM
Last Updated : 12 Sep 2019 11:51 AM

தூணில் தோன்றிய காலசம்ஹார மூர்த்தி

சிலைகள் சுதையால் மூடப்பட்டிருந்த நிலையில், எனது குருநாதர் ஓவியர் சில்பி வரைந்த ஓவியம் இது. அப்பகுதி சிவப்பில் வட்டமிடப்பட்டுள்ளது.

ஓவியர் பத்மவாசன்

நான் ஆறாவது படித்த நேரம், பள்ளியில் வகுப்பறையில் இருக்கும்போதே திடீரென ஜுரம் ஆரம்பித்தது. கண்களில் இருந்து அனல் அடிக்கும் அளவுக்குக் கொதித்தது. தம்பிகளிடம் மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பி வீடு வந்தேன்.
மாலை ஒரு இசைக்கச்சேரி இருந்ததால் பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டுச் சாதகம் பண்ணவென அப்பா வீட்டில் இருந்தார். அது எனக்கு முதல் நாளே தெரியும். நான் வந்த வேளையில் எமது வீட்டின் குட்டைச்சுவரில் கைகளை வைத்து, பேசுவதற்கென்றே வரும் கீரைக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார். சில நேரம் பாடும்படிக் கேட்டால் பாடியும் காட்டுவார். அவர் அப்பாவின் ரசிகர்.

என்னை ஒரு நூறு அடி தூரத்தில் பார்த்த உடனேயே ஏ…! என்று சுவரைத் தாண்டிக் குதித்து, ஓடிவந்து ஜுரமா? என்று கேட்டபடியே தூக்கிக்கொண்டார். கீரைக்காரர் விநோதமாகப் பார்த்தார். கீரைக்காரரோ, எப்படி ஐயா! அவ்வளவு தூரத்திலேயே ஜுரம்னு கண்டுபிடிச்சீங்க என ஆச்சரியமாகக் கேட்க, அதுதான் ‘அப்பா’ என்றார். அந்த ஜுர மயக்கத்திலும், அது என் காதுகளில் விழுந்தது.

உள்ளே போய் என்னைச் சுமந்தபடியே பாயை விரித்துத் தலைக்கு பக்கவாட்டில் காலுக்கு என தலையணைகளைப் போட்டுப் படுக்கவைத்து காலணி, உடைகளைக் களைந்து போர்த்திவிட்டு மிளகு-சீரகம்- கொத்தமல்லி போட்டு கஷாயம் பண்ணி ஆத்திக் குடிக்கச் சொல்லி, சாயங்காலம் டாக்டரிடம் போகலாம் என்றார். முடியாமல் குடித்தேன். குடித்தவுடன் வாந்தி எடுத்தேன். அத்தனையையும் அள்ளிப் போட்டுத் துடைத்துவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து தடவிக்கொண்டு இருந்தார்.

வாந்தி எடுத்து அம்மா என்னை வயிற்றில் சுமந்தார். அப்பாவோ நான் எடுத்த வாந்தியை எடுத்துப் போட்டு என்னை நெஞ்சில் சுமந்தார். கடைசிவரை அவர் அப்படித் தான். அதனால்தான் ‘தெய்விக அப்பா’ என்று சொல்லத் தோன்றுகிறது. டாக்டரிடம் போனோம். மருந்து எடுத்தோம். அவை ஒருபக்கம் இருக்க, நான் சொல்ல வந்த முக்கியமான விஷயம் இப்போதுதான் வருகிறது.

வரையாத நாள் இருக்கக் கூடாது

அன்று இரவு, குட்டி போட்ட பூனைபோல் இங்குமங்கும் நடந்தார். நான் படுத்தே இருப்பதையும், கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தபடியிருந்தவர் மணி ஒன்பதானதும் ஒரு அட்டையை எடுத்தார். அதில் இரண்டு வெள்ளைத்தாள்களைச் சொருகினார். பேனா எடுத்துக்கொண்டு என்னருகில் வந்து உட்கார்ந்தார். என் கன்னத்தை மெல்லத் தொட்டு, “இந்தா இந்தப் பேப்பரில் ரெண்டு கோடு போடு, ஏதாவது கிறுக்கு” என்று கூறி அட்டையைத் தான் பிடித்துக்கொண்டு என்னிடம் பேனாவைத் தந்தார். ஒன்றில் சும்மா கிறுக்கி முடித்ததும் அதை எடுத்துவிட்டு மற்றதைக் காட்டினார்.

அதிலும் கிறுக்கி விட்டுப் பேனாவைக் கொடுத்தேன். இரண்டிலும் திகதி, நேரம் போட்டுவிட்டு, என்னைப் பார்த்து, “நீ வரையலைன்னு ஒருநாள் கூட இருக்கக்கூடாது, அதுக்குத்தான்” என்றார்.
இது அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. அதுதான் என் அப்பா. இதை எழுதும்போது கூட கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கத்தான் செய்கிறது. அது பெருமை பொங்கப் பாய்வதாகவும் இருக்கலாம். அவர் பிரிவை எண்ணிப் பெருகுவதாகவும் இருக்கலாம். இப்படி ஒரு அப்பா, யாருக்குக் கிடைப்பார்கள். என்ன புண்ணியம் செய்தேனோ!

அவர் புண்ணியவான் என்பதற்கு ஒரேயொரு செய்தி. அவர் 1950-களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்களில் ஒருவரான நடராஜ தீட்சிதரின் நட்பு கிடைத்தது. அவரோடு கோயிலில் இரவுக்காவல் இருக்குமளவுக்கு நட்பு பலப்பட்டது. பாடிக் கொள்வது; பாடல்கள் இயற்றுவது; பொருத்தமான மெட்டுக்களைப் போடுவது என்று விடிய, விடிய விழித்து, விடிந்ததும், பில்டர் காப்பி குடித்துவிட்டுக் குட்டித் தூக்கம் போட்டு எழுந்து விடுதிக்குப் போவது என்பது வழக்கமாயிற்று.

நர்த்தன சபையில் மூடப்பட்டிருந்த சிற்பம்

நடராஜர் சன்னிதி எதிரே இருந்த கொடிமரத்தின் பின் இருப்பது நர்த்தன சபை. அதன் அருகில் இருந்த பெரிய தூண். நாம் நடராஜரைப் பார்த்தால் நமக்கு வலப்பக்கம் இருக்கும். பாதிக்கு மேல் அது சுதையால் மூடப்பட்டிருந்தது. இதை எப்போதும் கவனித்துவந்த என் தந்தையார் மெல்ல நடராஜ தீட்சிதரிடம், இது ஏன் இப்படி மூடி இருக்கு? என்னதான் இருக்கு, பார்க்கலாமா? என்று கேட்க, “ஓ! அதுக்கென்ன நாளை பார்க்கலாம்” என்றிருக்கிறார் அவர். அதைத் தட்டி எடுப்பதற்கு மரச்சுத்தியல் தான் வேண்டும்.

மெல்ல மெல்லத் தட்டித்தான் அகற்ற வேண்டும். உள்ளே ஏதோ முக்கியமான விஷயம் இருக்கும்போலத் தெரிகிறது. அபூர்வமான சிற்பம் ஏதாவது இருந்தால், அதை மெதுவாகத் தான் வெளிக்கொணர வேண்டும் என்று தீட்சிதரிடம் சொன்னார். தீட்சிதர் அவர்களும் ஒத்துக்கொண்டார்.
பேசிவைத்தபடியே அடுத்தநாள் இரவு அவர்கள் வந்திருக்கிறார்கள். அன்று தைப்பூசம். தைப்பூசமென்பது சிதம்பரத்தில் அதிவிசேஷம். அல்லோலகல்லோலப்பட்ட சிதம்பரம் அடங்கிய பின்னர் மெல்ல மெல்லத் தட்டினார்கள். அதியற்புதமான ரிஷபாரூடர் ஒருபக்கம், நர்த்தன சபையை நோக்கிய பக்கத்தில் காலசம்ஹாரமூர்த்தி எனச் சிற்பங்கள் வெளிவந்தன. அதுவும் இந்த காலசம்ஹார மூர்த்தி மிக நுணுக்கமான வேலைப்பாடு கொண்டதாகும்.

தனித்து நிற்கும் பாசக் கயிறு

எமனிடமிருந்து மார்க்கண்டேயருக்குப் போகும் பாசக்கயிறு குடைந்து எடுக்கப்பட்டுத் தனித்து நிற்கும்- கயிறும் இரு இழையாக இருக்கும். மரச்சுத்தியலால் தட்டினோமோ! பிழைத்தோமோ என்றாராம் தீட்சிதர். “ரொம்ப நல்லதாப் போச்சு முத்துக்குமாரசாமி. இது உங்க மூலம் வெளிய வரணும்னு இருந்திருக்கு. வாங்க, தீபாராதனை பண்ணலாம்” என்று எண்ணெய் சாத்தி, அபிஷேகம் பண்ணிக் கற்பூரம் காட்டப்பட்டது. இதை இப்படியே விடமுடியாது என்று முடிவுபண்ணி, பின்னர் நாள் குறித்து கும்பாபிஷேகம் நடத்தி 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடந்தது. மாலையில் கச்சேரிகள் களைகட்டியிருக்கின்றன. ஏதோ கோபத்தில் கோயில் பக்கமே வராமல் இருந்த தந்தையாரின் குருநாதர் தண்டபாணி தேசிகரை வரவைத்து அவரும் அப்பாவுக்காக வருகிறேன் என்று வந்து இசைமழை பொழிந்து போனதெல்லாம் வரலாறு.

இதனால்தானோ என்னவோ அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் இரண்டுமே சிதம்பரம் நடராஜர் சன்னிதி அருகில் உள்ள மாப்பந்தலில் நடந்தது. திருக்கடவூரில் உள்ள காலசம்ஹார மூர்த்தியும் நான்தான்; உன்மூலம் இங்கு மீண்டும் வெளியே வந்தவனும் நான்தான் என நடராஜர் வாழ்த்தி, உனக்கு எல்லாமே சிதம்பரம்தான் என்று கூறிவிட்டார் போலும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கோயில் என்றால் சிதம்பரம் என்ற பெருமையை உடைய இத்திருக்கோயிலில் உறையும் காலசம்ஹார மூர்த்தியை அக்கறையோடு வெளிக்கொணர்ந்த என் தந்தையை அதே அக்கறையோடு அதே கவனத்தோடு தன்னிடம் நடராஜப் பெருமான் சேர்த்துக்கொண்டார்.

நான் முன்னமே சொன்னதுபோல் தனித்துத் தெரியும் அந்தப் பாசக் கயிற்றை எப்படி உடையாமல் பார்த்துப் பார்த்து எடுத்தாரோ! இன்று வரும் அனைவரும் எப்படி வியந்து வியந்து பார்க்கிறார்களோ? அதேபோல நாம் வியக்கும் வண்ணம் மெல்லப் பாசக் கயிற்றைப் போட்டுக் கொடியில் இருந்து விடுபடும் வெள்ளரிப்பழம் போல் -கொடிக்கும் சேதமின்றி தனக்கும் சேதமின்றி விடுபட்டுக் கொள்ளச் செய்து – வெகு அமைதியாக ஒரு மகனின் தோளில் சாய்ந்த வண்ணம் கண்களை மூட தன் குஞ்சிதபாத நீழலோடு சேர்த்துக் கொண்டுவிட்டார் நடராஜர்.
இப்போதெல்லாம் நடராஜர் நடனத்தைப் பார்க்கும்போது, அவர் அப்பாவின் பாடலுக்கு ஆடுவது போலவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x