Published : 12 Sep 2019 10:35 AM
Last Updated : 12 Sep 2019 10:35 AM
- கரு.ஆறுமுகத்தமிழன்
‘நள்ளிருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே!’ என்று இறைவனைப் பாடுவார் மணிவாசகர். நட்டம் என்பது நாட்டியம்; ‘இதைப் பண்ணித்தான் தீருவேன்னு இப்ப என்னத்துக்கு நட்டமே நிக்கிற?’ என்று இன்னும் பேச்சு வழக்கில் இருக்கும் சொல். நாம் நட்டமே நிற்பது இருக்கட்டும்; சிவனார் என்னத்துக்கு நட்டமே நின்றார்? அதுவும் நள்ளிருளில்?
இந்தக் கேள்வி சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் தோன்றியிருக்கும் போலத் தெரிகிறது. கேள்வியைத் தில்லைக்களத்தில் ஆடும் கூத்தனைப் பார்த்துக் கேட்காது, திருஅஞ்சைக்களத்தில் ஆடும் கூத்தனைப் பார்த்துக் கேட்கிறார் அவர்.
தேவாரப் பாடல் பெற்ற ஒரே தலம்
திருஅஞ்சைக்களம் என்பது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில், முசிறி, கொடுங்கோளூர் என்று ஒரு காலத்தில் வழங்கப்பட்டு இப்போது கொடுங்கல்லூர் என்று வழங்கப் படுகிற ஊர். திருஅஞ்சைக்களத்தில் உள்ள களத்தைக் கடல்புறத் திட்டு என்றாலும் பொருந்தும்; இறைவனின் ஆட்டக்களம் என்றாலும் பொருந்தும். திருஅஞ்சைக்களம், மலைநாடாகிய கேரளத்தில் தேவாரப் பாடல் பெற்ற ஒரே தலம். திருஅஞ்சைக்களத்துக் கோயிலின் தற்போதைய பெயர் திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில். இனிச் சிவ நடனம் பற்றிய சுந்தரரின் கேள்வி:
இரவத்துஇடு காட்டுஎரி ஆடிற்றுஎன்னே?
இறந்தார்தலை யில்பலி கோடல்என்னே?
பரவித்தொழு வார்பெறு பாண்டம்என்னே?
பரமாபர மேட்டி பணித்துஅருளாய்!
உரவத்தொடு சங்கமொடு இப்பிமுத்தம்
கொணர்ந்துஎற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அரவக்கடல் அங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்துஅப்பனே.
(தேவாரம், 7:4:6)
கடற்கரை ஓரம் அமைந்திருக்கிறது மகோதை (மகோதயபுரம்) எனும் திருஅஞ்சைக்களம்; அங்கே ஆடும் சிவனாருக்குத் தனது சீராகச் சங்கையும் சிப்பியையும் முத்தையும் கொண்டுவந்து போட்டுக் கரைக்களத்தைத் தன் அலைக் கால்களால் உதைத்து இறைவனைப் போலவே ஆடுகிறது கடல். ஆடுகிற பரத்தத்துக்குப் பாட்டு வேண்டாமா? பாட்டில்லாமல் என்ன பரத்தம்? என்று நினைத்ததோ என்னவோ, ஓ என்று முழங்குகிறது. பாடுகிற பாட்டுக்குப் பண்ணிசை வேண்டாமா? என்று நினைத்ததோ என்னவோ, வலம்புரிச் சங்கெடுத்து ஊதிப் பின்னிசை சேர்க்கிறது. சங்கநிதி கொடுத்தும், பதுமநிதி கொடுத்தும் தொண்டர்கள் தலைவர்களைத் கண்டுகொள்வது வழக்கந்தானே? கடலாலும் சீர்பெறும் திருஅஞ்சைக்களத்து அப்பா! சில கேள்விகள் இருக்கின்றன: (1) நள்ளிருளில், சுடுகாட்டில் ஆடியது ஏன்? (2) மண்டை ஓட்டில் பிச்சை எடுத்துத் தின்பது ஏன்? (3) உன்னை விழுந்து விழுந்து கும்பிடுகிறவர்கள் உன்னால் பெறும் பயன் என்ன? பாண்டம் என்ன? பெரியார்க்குப் பெரியானே! விடை சொல்லி அருள்.
வந்தார் திருமூலர்
மற்ற கேள்விகளை விடுவோம்; ஒரு கேள்வியை மட்டும் தொடுவோம்: நள்ளிருளில், சுடுகாட்டில் ஆடியது ஏன்? இதற்கு யார் விடை சொல் வார்கள்? அதைச் சொல்லத்தானே நான் வந்தேன் என்று வந்தவர் திருமூலர்.
மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலஅங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலஅங்கமாக மொழிந்த திருக்கூத்தின்
சீலஅங்க வேதத்தைச் செப்பவந் தேனே. (திருமந்திரம் 77)
தன் சீடனாகிய மாலாங்கனிடம் பேசுவதுபோலப் பேசுகிறார் திருமூலர்: மாலாங்கனே! நான் எதைச் சொல்ல வந்தேன் தெரியுமா? இருட்டையே உடம்பாகக் கொண்டுவிட்டாளோ என்று நினைக்கத்தக்கவளாகிய ஆத்தாள் கருப்பாயிக்குத் தன்னுடைய மூல உடம்பைக் (ஒளியாக இருக்குமோ?) கொண்டு ஆடிக் காட்டினானே ஒரு திருக்கூத்து, அது என்ன வெறும் கூத்தா? தலைநூல் என்று போற்றத்தக்க தனி அறிவுக் கோட்பாட்டின் அடையாளம் அல்லவா? அதைப் பிரித்து விளக்கிச் சொல்லவே நான் வந்தேன்.
இவ்வளவு பேசுகிற அளவுக்குத் திருக்கூத்தில் என்ன இருக்கிறது? திருமூலர் கொஞ்சம் கூடுதலாக விதந்து ஓதுகிறாரோ? திருமூலர் மட்டுந்தான் அப்படிப் பேசுகிறார் என்று கருத வேண்டாம்; திருமூலர் மரபில் வந்த மௌனகுருவின் சீடரான தாயுமானவரும் அப்படித்தான் பேசுகிறார்:
சைவ சமய மேசமயம்;
சமய அதீதப் பழம்பொருளைக்
கைவந் திடவே மன்றுள்
வெளிகாட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந்து உழலும் சமயநெறி
புகுத வேண்டாம்; முத்திதரும்
தெய்வ சபையைக் காண்பதற்குச்
சேர வாரும் செகத்தீரே.
(தாயுமானவர் பாடல்கள், காடும் கரையும், 2)
சமயம் என்பது சைவ சமயந்தான். ஏன்? ஏனென்றால் அதுவே சமயங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பழம்பொருளை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டுகிறது. எங்கே? கூத்தாடும் மன்றமாகிய ஆகாய வெளியில். எனவே, சமயம் கடந்த மெய்காட்டும் சைவத்தை விட்டுச் சமயம் சார்ந்து பொய்காட்டும் பிற கொள்கைகளைப் பற்றிக்கொண்டு தடுமாற வேண்டாம். என்ன செய்ய வேண்டும்? மெய்காட்டி நம்மை விடுவிக்கும் ஆடல் அரங்குக்கு வாருங்கள் உலகத்தவர்களே; காண வேண்டியதை அங்கே காண்பீர்கள் என்று பாடும் தாயுமானவர் இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்னொன்றும் பாடுகிறார்:
சன்மார்க்க ஞானம்அதின் பொருளும் வீறு
சமயசங்கே தப்பொருளும் தான்ஒன்று ஆகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்டது இல்லை;
பகர்வுஅரிய தில்லைமன்றுஉள் பார்த்த போதுஅங்கு
என்மார்க்கம் இருக்குதுஎல்லாம் வெளியே என்ன,
எச்சமயத் தவர்களும்வந்து இறைஞ்சா நிற்பர்;
கல்மார்க்க நெஞ்சம்உள எனக்கும் தானே
கண்டஉடன் ஆனந்தம் காண்டல் ஆகும். (தாயுமானவர் பாடல்கள், ஆகார புவனம் – சிதம்பர ரகசியம், 12)
பல மார்க்கங்களைக் கவனித்தி ருக்கிறேன்: இதுதான் உண்மை என்று மார்க்கங்கள் சொல்கிற பொருளும், உண்மையாகவே இருக்கிற உண்மைப் பொருளும் ஒன்றாக இருந்து பார்த்ததே இல்லை. ஆனால் இந்தத் தில்லை மன்றம் இருக்கிறதே, ஆகா! அதைப் பற்றி நான் என்ன சொல்ல? அதன் உள்ளே பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே இருக்கிறது என் மார்க்கம்; ‘வெட்டவெளி அதுஅன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே’ என்னும் நுண் மார்க்கம். இப்படிச் சொல்லும்போது இது என் மார்க்கமில்லை என்று சொல்லி மறுதலிக்கும் துன்மார்க்கர்கள் யாரும் உண்டா? எல்லாச் சமயத்தவரும் உடன்பட்டு வணங்கி நிற்கும் நன்மார்க்கம் இல்லையா அது? கல்லாய் இறுகிக் கிடக்கிற என் நெஞ்சிலும் அதை எண்ணுகையில் ஆனந்தம் வருகிறதே!
நல்லது; மூலக் கேள்விக்கு வருவோம். சிவனார் என்னத்துக்கு நட்டமே நிற்கிறார்? அதைச் சொல்லத்தானே வந்தேன் என்ற திருமூலர் என்ன சொல்கிறார்?
ஆன நடம்ஐந்து; அகள சகளத்தர்
ஆன நடம்ஆடி, ஐங்கருமத் தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆடுமே. (திருமந்திரம் 2727)
உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் சிவன் செய்கிற தொழில்கள் ஐந்து. ஆதாயம் விரும்புகிறவர்கள்தாமே தொழில் செய்வார்கள்? கடவுள் ஆதாயம் விரும்புகிறவன் இல்லையே? பின் ஏது தொழில்? கடவுள் தொழில்கள் ஆதாயத்துக்காகச் செய்யப்படுவன அல்ல; அருளால் செய்யப்படுவன. அவ்வாறு செய்யப்படும் ஐந்தொழில் கள் எவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியன. இவற்றைச் செய்யவே நடம் ஆடுகிறான் தேன்மொழி பாகன்.
ஆடிவிட்டுப் போகட்டும். ஆனால் சுடுகாட்டில், அதுவும் நள்ளிருளில் ஏன் ஆடுகிறான்? சுடுகாடும் நள்ளிருளும் நட்டமும் குறியீடுகள். சுடுகாடு என்பது அழிவு; உலகம் ஒடுங்கிய நிலை. எஞ்சியிருப்பவன் இறைவன் மட்டுமே. நள்ளிருள் என்பதென்ன? உலகம் ஒடுங்கிவிட்ட நிலையில், இறைவனைத் தவிர ஏது வெளிச்சம்? ஆகவே துணைவி இருள் வண்ணக் கருப்பாயிக்கு முன் தன் மூலஉடம்பாகிய ஒளிப்பிழம்பால் கூத்தாடுகிறான் இறைவன். கூத்து என்பது இயக்கம்.
உயிர்களுக்கு ஓய்வு கொடுக்க வென்று உலகத்தை ஒடுக்கிய இறைவன், உயிர்கள் மீண்டும் இயங்குவதற்கென்று உலகத்தைப் படைக்கிறான். ஒடுக்கியதும் படைத்த தும் அருள். அருளால் விளைந்தது ஆட்டம். ஆடுகின்றான் அடி தில்லையிலே.
(அருள் நடனம் தொடரும்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT