Published : 29 Aug 2019 10:56 AM
Last Updated : 29 Aug 2019 10:56 AM

விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கட்டுரை: எங்கும் எதிலும் இருப்பவன்

பிரபு சைதன்யா

உருவ வழிபாடு பெரும்பாலான மதங்களின் அடிப் படைக் கட்டமைப்பிலேயே இருக்கிறது. கடவுளரின் உருவங்கள் கலாசாரத்தின் பின்னணியைக் காட்டுகின்றன. அதற்கேற்பவே மனமும் செயல்படுகிறது. கடவுளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு உருவங்களை வைத்துக்கொண்டு அந்தக் கலாச்சாரத்தைப் பற்றி புரிந்துகொள்ளலாம்.

கடவுள் என்னும் சக்தியைத் தத்தம் அகவளர்ச்சிக்குத் தக்கபடி மனிதர்கள் அர்த்தப்படுத்திக்கொள் கிறார்கள். உருவ வழிபாடு இதற்கு வழிவகை செய்கிறது. அவரவர்க்குத் தக்கவாறு மதம், அகவளர்ச்சி தொடர்பாக இருந்தாலும், கலை வெளிப்பாடுகளின் கோணத்தில் பார்க்கும்போது, உருவங்கள் படைப் பூக்கத்தின் வெளிப்பாட்டுக்குப் பெரும் சாதனமாக அமைகின்றன.

அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

இதில் குறிப்பாக விநாயகரின் உருவம் கலைஞனின் திறனுக்கேற்ப நூற்றுக்கணக்கான வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. பொதுவாக, மற்ற கடவுளரின் உருவங்கள் வரையறுக்கப்பட்ட வடிவங்களில் மட்டுமே ஆக்கப்படு கின்றன. அதிக அளவு மாறுதல்களை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு விதிவிலக்கு விநாயகன் மட்டுமே.

இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடு விநாயகனின் உருவத்தில் கிடையாது. பெரிய தொந்தி, யானைத்தலை இருக்கவேண்டும்; அவ்வளவுதான். இதை வைத்துக் கொண்டு விதம்விதமான வடிவங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அனைத்தும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. யாருக்கும் இது தவறாகத் தோன்றவில்லை. அத்துமீறலாக யாருக்கும் இது படவில்லை. எந்தவிதமான வடிவத்துக்கும் விநாயகன் வளைந்துகொடுக்கிறான். எந்த வடிவத்திலும் முழுமையாக உள்ளே வந்து நிலைகொள்கிறான்.

எந்த வடிவத்தையும் ஏற்றுக்கொள்ள அவன் சித்தமாக இருக்கும் காரணத்தாலேயே, வடிவங் களுக்கெல்லாம் அப்பால் அவன் நிலைகொண்டிருக்கிறான். வடிவங்களுக்கெல்லாம் அப்பால், ஓங்கார ஸ்வரூபனாக அவன் விரிந்திருக்கிறான். அதனால் கல்லில், மண்ணில், கண்ணாடியில், உலோகத்தில், மரத்தில், பீங்கானில், பிளாஸ்டிக்கில்கூட அவன் வடிவம் கொள்கிறான். நவீன கலைஞர்கள்கூட அவனை பல விதமான வடிவங்களில் உருவாக்கியும், வித்தியாசமான உருவங்களில் வரைந்தும் பார்க்கிறார்கள்.

எந்தப் பொருளிலும் அவன் தன் முழுமையுடன் பிரசன்னமாகிறான். புராணங்களின்படி அவனுக்கு 32 வடிவங்கள் உள்ளன: ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி, சித்தி-புத்தி கணபதி, நர்த்தன கணபதி, மஹாகணபதி என்று பல வடிவங் களில் அவனை ஆண்டாண்டு காலமாக நாம் வழிபட்டு வந்திருக் கிறோம். நான்கு தலைகள் கொண்ட விநாயகன், ஐங்கரன் போன்ற பாரம்பரிய வடிவங்களோடு நில்லாமல், இப்போது நவீனமயமான உலகத்தில் மேலும் பல வடிவங்களை அவன் எடுத்திருக்கிறான்.

கிரிக்கெட் ஆடும் கணபதி, திண்டின் மேல் சாய்ந்தவாறு ஸ்டைலாக ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பிள்ளையார், மிருதங்கம் வாசிக்கும் விநாயகன் என்று கற்பனை வளத்திற்கேற்றவாறு விநாயகன் வளைந்துகொடுக்கிறான். மாறாக, விதவிதமான விநாயக உருவங்களைச் சேகரிப்பது பலரின் பேரார்வமாக ஆகிவிட்டிருக்கிறது. இதனால் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் விநாயகன் நிறைந்து நிற்கிறான். மத்ஸ்ய புராணத்தில் விநாயகி என்று பெண் வடிவத்தில் தோன்றுகிறான். கணேச்வரி என்ற பெயரும் கொண்டு விளங்குகிறான். வன துர்கா உபநிஷதத்தில் இவளைப் போற்றுகிறர்கள்.

பக்தியில் சகஜபாவம்

பக்தியில் சகஜபாவத்தைக் கொண்டுவருவதில் விநாயக வழிபாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. அவனது பெரிய வயிறு அழகில்லாததாகப் பார்க்கப்பட்டதேயில்லை. நெருக்க மானவனாக, சிநேக பாவத்துடன் அவனை அணுக முடிகிறது; விளையாட்டுத் தோழனாக அவனைப் பார்க்க முடிகிறது. விநாயக சதுர்த்தியின் போது, சுடாத களிமண்ணால் அவன் உருவத்தைச் செய்து வழிபட்டுப் பிறகு ஆற்றிலோ, கடலிலோ, அல்லது கிணற்றிலோ அதைப் போட்டுக் கரைத்துவிடும் வழக்கம் இருக்கிறது.

தனக்கென எந்தவிதமான வடிவமும் இல்லாத களிமண்ணில் விநாயகனின் உருவத்தை வடித்து, அதில் எழுந்தருளும் அவனைக் கண்டு, மனமுருகி வழிபடுகிறோம். வரங்கள் வேண்டிக் கேட்டு, அவன் நிச்சயம் கொடுப்பான் என்ற முழுநம்பிக்கையுடன் அவனை வணங்குகிறோம். பிறகு ஏதாவது ஒரு நீர்நிலையில் அவன் உருவத்தைக் கரைத்து மீண்டும் களிமண்ணாக்கி விடுகிறோம். உருவமற்றதிலிருந்து எல்லோரும் காணும்படியாக உருவம்கொண்டு.

பின் மீண்டும் உருவமற்ற நிலையை அடைந்துவிடுவது என்பதுதான் இந்த வழக்கத்தின் அடிப்படையாகும். வடிவம் கொள்வதற்கு முன்னால் அருவமாக இருந்து, வடிவம் மேற்கொண்டு வெளிப்பட்டுப் பின் மீண்டும் அருவவெளியில் கலந்து ஓங்கார ஸ்வரூபனாக நிற்கும் அவனது தன்மையை இந்த வழக்கம் காட்டுகிறது. விநாயகனின் உருவத்துக்கு வர்ணம் தீட்டும் வழக்கம் முன்பு இருந்ததில்லை. அது இப்போது சமீபத்தில் ஏற்பட்ட அவசியமற்ற பழக்கம். வண்ணங்களில் உள்ள வேதியியல் பொருட்கள் நீர்நிலை களுக்குத் தீங்கு விளைவிக்கும்.

திருமணமானவனா பிரம்மச்சாரியா

கணேசன் திருமணமானவனா, பிரம்மச்சாரியா என்று கேள்வி கேட்பவர்கள் உண்டு. கடவுளர்களின் துணைவர்களும் துணைவிகளும் அவர்களது சக்தியையே குறிக்கின் றனர். சித்தி-புத்தி இருவரும் விநாயகனின் மனைவிகளா? சித்தி என்பது பொதுவாக அறியப்பட்டிராத தளங்களை அடைந்து அங்கே இருக்கும் சக்திகளைப் பெறுவது. புத்தி என்பது உயர்நிலை அறிவைக் குறிக்கிறது.

எந்தக் காரியத்துக்கு முன்னாலும் விநாயகனைத் துதிப்பது, அவன் அனைத்துக்கும் முன்னால் இருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. அவன் விக்னேச்வரன்: தடைகளின் தலைவன். தடைகள் அனைத்தும் அவன் ஆட்சிக்குட்பட்டவை. அதனால் அவன் அவற்றை நீக்கும் வல்லமை கொண்டிருக்கிறான்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
- என்று திருமந்திரத்தைத் தொடங்குகிறார் திருமூல நாயனார்.

மற்ற காரியங்களைத் தொடங்கும்போது அவனைத் துதிக்கிறோம். ஆனால், மகாபாரதத்தை வியாசர் சொல்ல எழுதுபவனே அவன்தான். அதை எழுதும்போது எழுத்தாணி உடைந்துபோன காரணத்தால் தன் தந்தத்தை உடைத்து மேற்கொண்டு எழுதினான் அன்று கதை உண்டு. இன்னொரு கதையில், சிவனைத் தரிசிக்க வந்த பரசுராமரை விநாயகன் தடுத்து நிறுத்துகிறான்.

கோபம் கொண்ட பரசுராமன் சிவனிடமிருந்து தான் பெற்ற கோடரியை விநாயகன் மீது வீசுகிறான். தன் தந்தையின் சக்தி கொண்ட கோடரியைத் தடுத்த நிறுத்த முயலாமல் அதை ஏற்றுக்கொண்டபோது தந்தம் உடைந்துபோனது என்றும் கதை உண்டு. இதேபோல் வராக புராணத்தில் சிவனின் சிரிப்பிலிருந்து விநாயகன் தோன்றியதாக ஒரு கதை உண்டு. அனைத்துக்கும் மேலாகக் குழந்தைகளின் கடவுள் விநாயகன். குழந்தையின் மனம் இன்னும் உருவம் கொண்டு கடினப்பட்டுப் போகாத நிலையில் இருக்கிறது.

அதனாலேயே விநாயகன் குழந்தைகளுக்குப் பிடித்தமானவனாக இருக்கிறான். சைவம், வைணவம் என்று எல்லாச் சமயங்களும் விநாயகனை அங்கீகரிக்கின்றன. காலம், தேசம், மொழி, சமயம், என்ற கட்டுப்பாடுகள் விநாயகனை வரையறுக்க முடிந்ததில்லை. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவன் நிறைந்திருக் கிறான். விளையாட்டில், வழிபாட்டில், பக்தியில், ஞானத்தில், செய்யும் காரியங்களில், பிறப்பில், இறப்பில், அனுபவங்களின் ஓட்டத்தில், என்றும் எங்கும் எதிலும் நிறைந்து சர்வவியாபியாக இருக்கிறான் விநாயகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x