Published : 29 Aug 2019 10:35 AM
Last Updated : 29 Aug 2019 10:35 AM

தெய்வத்தின் குரல்: இரட்டைப் பிள்ளையார்

‘இரட்டைப் பிள்ளையார்’ என்று பக்கத்தில் பக்கத்தில் இரண்டு பிள்ளையார்களைப் பிரதிஷ்டை செய்கிற வழக்கம் இருக்கிறது. அநேக ஊர்களில் ‘இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு’ என்று இருக்கும். அங்கே, ஒரே ஆலயத்தில் ஒரே சந்நிதியில் இரண்டு பிள்ளையார்கள் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். தனிக் கோயிலாக இல்லாமல் ஈச்வரன் கோவிலிலேயே இரட்டைப் பிள்ளையார் இருப்பதுமுண்டு.
வேறே எந்த சுவாமிக்கும் இப்படி ஜோடி மூர்த்திகள் வைத்து ஆராதிப்பதாகக் காணோம். பிள்ளையாருக்கு மட்டும் இருக்கிறது. ‘இரட்டைப் பிள்ளையார்’ என்றே சொல்வதாகவுமிருக்கிறது.

ஏனிப்படி என்றால் இவர் ஒருத்தர்தான் தாமே ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றும் இரண்டு காரியங்களைப் பண்ணுகிறார். ‘எதிரானது’ என்று சொல்லவில்லை; ‘எதிரானதாகத் தோன்றுகிற’ என்கிறேன்.
இரண்டு மூர்த்திகளில்தான் ஒருத்தர் விக்நராஜர். மற்றவர் விநாயகர். அடுத்தடுத்து இரண்டு பிள்ளையார் மூர்த்திகள் உட்கார்ந்திருக்கிறாற்போலவே இந்தப் பேர்களும், ஷோடச நாமாவளியில் அடுத்தடுத்து வருகின்றன. “விக்நராஜோ விநாயக”.
அதென்ன இரண்டு காரியமென்றால் – ஒன்று விக்னங்களை உண்டு பண்ணுவது; மற்றொன்று விக்னங்களைப் போக்குவது. நேர்மாறாகத் தோன்றும் இரண்டு காரியங்கள்.

‘விக்நேச்வரர், விக்நராஜர் என்றெல்லாம் சொல்லும்போது விக்னத்தை உண்டாக்குவதில் ஈச்வரர், ராஜா என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஈச்வரனோ, ராஜாவோ எப்படிக் கெட்டதை அடக்கி அழிக்கும் சக்தியோடு இருக்கிறார்களோ’ அப்படி இவர் விக்னம் என்ற கெட்டதை அழிப்பதாலேயே இப்படி பேர் பெற்றிருக்கிறாரென்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னேன். பொதுவாக ‘விக்நேச்வரர்’ என்று அவரைச் சொல்லி வணங்கும்போது இந்த அர்த்தத்தில், ‘பாவ’த்தில்தான் செய்ய வேண்டும்.

விக்னங்களைப் போக்கும் மூர்த்தி

ஆனால் இரட்டைப் பிள்ளையார்களில் முதல்வராக அவர் விக்நராஜப் பேரில் இருக்கும்போது அவரை விக்னங்களை உண்டாக்குபவர் என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். வார்த்தையின் நேர் அர்த்தப்படி, [சிரித்து] திருட்டுப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரனாக இருப்பவனைத் ‘திருட்டு ராஜா’ என்கிற மாதிரி, விக்னங்களைப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரர் என்பதாலேயே ‘விக்னராஜா’ என்று வைத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் விக்னங்களைப் போக்கும் மூர்த்தியாக அவர் இருக்கும்போதுதான் அவருக்கு ‘விநாயகர்’ என்று பெயர்.

“விக்னங்களைப் பண்ணுகிறாரென்றால், பொல்லாத சாமியா?” என்றால், அதுதானில்லை. அதனால்தான் விக்னங்களைப் பண்ணுவதையும் போக்குவதையும் நிஜமாகவே எதிரெதிர் என்று சொல்லாமல் ‘எதிர் மாதிரித் தோன்றுகிற’ என்று சொன்னது. இந்த இரண்டு காரியங்களுக்கும் சாரம் அநுக்ரஹம் என்ற ஒன்றேதான். அதுவே இரண்டு ரூபத்தில், விக்னம் பண்ணுவது, விக்னத்தை அழிப்பது எனறு இரண்டாகியிருக்கிறது. அதனால் அடிப்படையில் எதிரெதிர் இல்லை.

“விக்னத்தைப் பண்ணுவதா அநுக்ரஹம்? அதெப்படி?” என்றால், எத்தனையோ தப்புக் கர்மா பண்ணி நாமெல்லாம் நிறைய மூட்டை கட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். ஆனாலும், இப்போது ஏதோ கொஞ்சம் ஈச்வராநுக்ரஹத்தினால் கொஞ்சம் பிள்ளையார் பக்தி உண்டாகி, அவரை வேண்டிக்கொண்டு – நாம் ஆரம்பிக்கிற காரியங்கள் நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்பதற்காக அவரை வேண்டிக் கொண்டு – ஆரம்பிக்கிறோம்.

நாம் பூர்வத்தில் பண்ணியிருப்பதன் விளைவாக நமக்குக் காரிய சித்தி ஏற்படுவதற்கில்லை என்று கர்ம நியாயக் கணக்குப்படியே இருக்கும். ஆகவே அவர் பண்ணுவதாகத் தோன்றும் விக்னத்திற்கு மூலம் பூர்வத்தில் நாம் பண்ணின தப்புதான். அது எப்படியும் நமக்கு அநேக காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறாமல் இடைஞ்சல் பண்ணத்தான் பண்ணும். அது தானாகப் பண்ணினால் எத்தனையோ உற்பாதமாகவே இருக்கும்.

இடைஞ்சலால் காரியம் அடியோடு கெட்டுத் தோற்றே போய் நிற்போம். அல்லது அநேக சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி உண்டாக இடமளித்து, அப்புறம் சேர்த்து வைத்து அத்தனையும் நொறுக்கி மண்டையில் ஒரே போடாகப் போட்டுவிடும் – படு தோல்வியை! இப்படி நேராமல், வெள்ளம் அப்படியே நம்மை அடித்துக்கொண்டு போய்விடாமல், வருமுன் காப்பாக அணைபோட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக ஜலத்தை விடுகிறாற்போலவே, விக்நராஜா நம்முடைய கர்ம சேஷத்தால் உண்டாக வேண்டிய இடைஞ்சலை நாம் தாங்கிக் கொள்கிற அளவில் ‘சானலைஸ்’ பண்ணி விடுகிறார்.

‘சானலைஸ்’ பண்ணுவது மட்டுமில்லாமல் ஜலத்தையே ஒரளவுக்கு வற்றவும் பண்ணுகிறார்! என்றைக்கோ பெரிசாகப் பழிவாங்க இருக்கற பெரிய விக்னத்தை இப்போதே தன்னுடைய தும்பிக்கையால் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, அதைக் கருணையால் கொஞ்சம் சிறுக்க வைத்து, பாக்கியையும் ஒரே வீச்சில் காட்டி விடாமல், சின்னச் சின்னதாகப் பண்ணி நாம் தாங்கிக்கொள்ளும்படிப் பண்ணுகிறார்.

பரம நன்மையே செய்பவர்

பழைய கர்மா எவ்வளவு சீக்கிரம் தீர்கிறதோ அவ்வளவுக்கு நல்லதுதானே? அது தீர்ந்தால்தானே விமோசனத்துக்கு வழி திறக்கும்? தள்ளிப் போகப் போக நாம் இன்னமும் புதிசாக எத்தனை மூட்டை சேர்த்துக்கொண்டு விடுவோமோ? இப்படி ஆகாமல் விக்னத்தை முன்னதாகவே இழுத்துக்கொண்டு வந்து, நமக்குக் கொடுமையானதாகத் தெரிந்தாலும் வாஸ்தவத்தில் பரம நல்லதே பண்ணுபவர்தான் விக்நராஜா. விக்னத்தை இழுத்துக்கொண்டு வருபவர் விக்நராஜா. அப்புறம் அதைச் சிறிசு பண்ணி, நாம் கொஞ்சம் அநுபவித்த உடனேயே, போதுமென்று அப்படியே போக்கி விடுபவர் விநாயகர். வியாதியைக் கிளறிவிட்டு ஸ்வஸ்தப்படுத்துவதுண்டல்லவா? அப்படி, கிளறிவிடுபவர்தான் வித்நராஜர். சொஸ்தப்படுத்துகிறவர் விநாயகர்.

‘விக்ந கர்த்தா’ [இடையூறு செய்பவர்], ‘விக்ந ஹர்த்தா’ [இடையூறை அழிப்பவர்] என்று இரண்டு பேரும் அவருடைய அஷ்டோத்தரத்தில் அடுத்தடுத்து வருவதில், விக்நராஜா முன்னவர், விநாயகர் பின்னவர். விக்ந விநாயகர் விக்ந விநாசகரும்தான்! அதாவது விக்னங்களை அடியோடு நாசம் செய்கிறவர். சம்ஸ்கிருத ‘ச’ தமிழில் ‘ய’ ஆகிவிடும். ஆகாசம் – ஆகாயம் மாதிரி. இங்கேயோ சம்ஸ்கிருதத்திலேயே விக்ந விநாயகர் விக்ந விநாசகராகவும் இருக்கிறார்!

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x