Published : 15 Aug 2019 11:58 AM
Last Updated : 15 Aug 2019 11:58 AM

தெய்வத்தின் குரல்: ஏகதந்தரின் தத்துவம்

யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த பிராணியானாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி. உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண் என்ற ஒரு அவயவத்துக்குத்தான் அவசியமான சமயங்களுக்காக ரப்பை என்று மூடிபோட்டு வைத்திருக்கிறதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன. ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு, நாக்கும் பல்லும் தெரியாமல் மூடுகிறதென்றாலும் இவற்றுக்குள் வித்தியாசமும் இருக்கிறது. கண்ணின் காரியமான பார்வையில் ரப்பைக்கு வேலையேயில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற காரியத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக்கொள்வது அது.

வெளியே தெரிவது

மூக்கு, பல், உதடு, மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு. ‘ப’, ‘ம’ முதலான சப்தங்கள் உதட்டாலேயே முக்கியமாக உண்டாவதால் ‘ஓஷ்ட்யம்’ என்றே அவற்றுக்குப் பெயர். இங்கிலீஷிலும் ‘lip’ – ஐ வைத்து ‘labial’ என்கிறார்கள். நமக்கெல்லாம் வாயின் அங்கமான உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.

கல்வியின் லட்சணம்

யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்துக்கு அடையாளம். நாம் கையை மடித்துக் கொண்டுபோய் ஒரு காரியமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைக்கானால் இயற்கையாகவே அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை சதாவும் மூடிக் கொண்டிருக்கிறது! தும்பி என்றால் யானை. அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆகாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உயரத் தூக்கிக்கொண்டு பிளிறுகிறபோதும் மட்டும்தான் அதன் வாயைப் பார்க்க முடியும்.

இப்படிப்பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்துவார்த்தம் இருக்கிறது. எத்தனை வித்வத் இருந்தாலும் விஷயங்களைக் கொட்டி வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், அவசியமான சமயம் தவிர மற்ற காலங்களிலெல்லாம் வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் நிஜமான வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே தும்பிக்கையால் வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம்தான் என்று காட்டுகிறார்.

விக்நேச்வரர் நிஜமான சுமுகர்

அடுத்தாற்போல், ‘ஏகதந்தர்’. ‘ஸுமுகச்-சைகதந்தச்ச’. இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். ‘ஒற்றைக் கொம்பன்’. பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு.
முதலிலே இவருக்கும் இரண்டு [கொம்பு] இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக்கொண்டுவிட்டார். அதை விக்கிரகங்களில் வலது பக்கக் கீழ்க் கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன் ஒடித்துக்கொண்டார்? புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள்.

வியாசர் பாரதம் சொல்கிறபோது அதை உடனே விக்நேச்வரர் அவசரமாக ஹிமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருந்ததென்றும், அப்போது எழுத்தாணிக்காகத் தேடிக்கொண்டு ஓடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை. அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய அழகான அங்கத்தை — யானையின் அங்கங்களுக்குள்ளேயே ‘இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை — உயிரோடு இருக்கும் போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை.

இன்னொரு கதை, மற்ற எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாசுரனைத் தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் பிரயோகித்து வதம் பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக ‘என்பும் உரியர் பிறர்க்கு’ என்று காட்டிய கதை. சாதாரணமாக அந்தக் குறளுக்கு ததீசியைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டுவார்கள். தந்தமும் யானையின் எலும்புதான். அதனால் பிள்ளையாரும் ‘என்பும் பிறர்க்கு உரிய’ரான ‘அன்புடையார்’ தான்!

ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு. பெண் யானைக்குக் கிடையாது. தாம் ஆண், பெண் இரண்டும்தான். அதாவது ஈச்வர தத்துவம் என்பது ஆண்தான், பெண்தான் என்று ஒன்றாக மாத்திரம் வரையறுக்க முடியாமல் இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று என்று காட்டவே முகத்திலே ஒரு பக்கம் யானை (களிறு என்பது) மாதிரி தந்தத்துடனும், மறு பக்கம் பெண் யானை (பிடி என்பது) மாதிரி தந்தமில்லாமலும் இருக்கிறார். மாதா பிதாக்கள் பப்பாதி [பாதிப் பாதி] ஸ்திரீ புருஷர்களாக அர்த்தநாரீச்வர ரூபத்தில் இருக்கிற மாதிரியே புத்ரரும் கொஞ்சம் இருந்து காட்டுகிறார். அப்படியே ‘காப்பி’ பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அங்கே வலது பக்கம் புருஷ ரூபம், இடது ஸ்த்ரீ என்றிருந்தால் இவரோ வலது பக்கம் தந்தமில்லாமல் பெண் யானையாகவும் இடது பக்கம் தந்தமுள்ள ஆண் யானையாவுமிருக்கிறார்!

முதலில் ஸுமுகர் — அழகான வாய் உள்ளவர்; அடுத்தாற் போல ஏகதந்தர் — அந்த வாயிலே உள்ள தந்தத்திலே ஒன்று இல்லாதவர். குழந்தை என்றால் அதற்குப் பல் விழுந்திருக்கணும்தானே? பொக்கை வாய்ச் சிரிப்பு என்று அதைத் தான் விசேஷித்துச் சொல்வது. ஜகத்தின் மாதா பிதாக்களான பார்வதி – பரமேச்வரர்களின் முதல் குழந்தை ஒரு தந்தம் போன பொக்கை வாயுடன் ஸுமுகமாகச் சிரித்துக் காட்டுகிறது.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x