Published : 08 Aug 2019 07:57 AM
Last Updated : 08 Aug 2019 07:57 AM
தக்கலை ஹலீமா
தமிழகத்தின் தென்பகுதிக்கே உரிய பூவரச மரங்களும் அதில் தொங்கிக்கொண்டிருக்கும் பச்சை நிறக் கல்லறைப் பட்டுகளும் இருவேறு மதங்களின் கலாசார ஒன்றிணைப்பினை உணர்த்தி ஆடி பள்ளி தர்கா, கந்தூரி விழாவை கடந்த ஆடி 16-ம் தேதி கண்டது. திருநெல்வேலி மாவட்டம் தெற்கு விஜயநாராயணபுரத்தில் உள்ள இந்த தர்காவின் கந்தூரி விழாவை இங்குள்ள இந்து சமயத்து மக்கள்தான் சேர்ந்து நடத்துகின்றனர்.
ஐ. என். எஸ். இந்தியாவின் கடல்போல விரிந்த பாதுகாப்பு வேலிக்கு வெளியே சாலையின் எதிர்புறம் இந்த தர்கா அமைந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற எல்லா இடங்களிலும் அமைந்துள்ள தர்காக்களில் உரூஸ் கந்தூரி விழாக்கள், இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றித்தான் நடக்கும் நிலையில், மேத்தப் பிள்ளை தர்கா எனப்படும் ஆடிபள்ளி மட்டும் விதிவிலக்காக உள்ளது.
ஆடியில் கந்தூரி விழா
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெற்கு விஜய நாராயணபுரத்தில் வாழ்ந்துவந்த இஸ்லாமியர்கள் அனைவருமே மும்பை, சென்னை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஊத்துமலை, சங்கரன்கோவில் எனப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இங்குள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களே தர்காவினைப் பராமரித்து தினசரி விளக்கேற்றியும் வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் இங்கே கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது.
தர்காவில் உறைந்திருக்கும் இறைநேசச் செல்வர் மேத்த பிள்ளை என்றழைக்கப்படும் செய்யது முஹம்மது மலுக்கு அப்பா அவர்களின் சந்ததியினரும் இங்கே வந்து வழிபடுகின்றனர். கேரள மாநிலத்திலிருந்தும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
உரலில் மாவிடிக்கும் நிகழ்வு
மேத்த பிள்ளை அப்பா வாழ்ந்த இல்லத்தின் முற்றத்தில் ஏராளமான உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. கந்தூரி விழாவுக்கு முந்தின தினமே வரும் இஸ்லாமியர்கள் கொண்டுவரும் அரிசி, சர்க்கரை, கருப்பட்டி, தேங்காய் துருவலை உரலில் இடித்து மாவாக்கிப் படைக்கின்றனர்.
கொடி ஊர்வலம்
மேத்த பிள்ளை அப்பாவின் உயிர்த்தியாக வரலாற்றோடு இணைத்துப் பேசப்படும் தேவர் குலக்கன்னி ஒருவரின் இல்லத்துக்குக் கொடியும் தண்ணீர் குடமும் கொண்டு செல்லப்பட்டு அங்கேயிருந்து கொடி ஊர்வலம் ஊரை வலம்வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் குடத்தில் மஞ்சள் கலக்கிய நீரும் அதில் வேப்பிலை கொத்துமாக கொடிவரும்போது தெளிப்பதற்குத் தருகின்றனர். குடத்தில் மீதம் வரும் தண்ணீரை வீட்டுப் பெண்கள் பக்தியோடு அருந்துகின்றனர். ஆடி 16-ம் தேதி காலை கொடி ஏறியது.
அதன்பிறகு நேர்ச்சை தயாரிக்கப்படுகிறது. ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் சேவல்களும் ஆடுகளும் காணிக்கையாக வருகின்றன. தண்ணீர் தட்டுப்பாடுள்ள தெற்கு விஜயநாராயணபுரத்தில் மூன்று நாள் கூடும் மக்களின் தண்ணீர் தேவையை இங்குள்ள கிராமத்தினர் நன்கு கவனித்துக் கொள்கின்றனர். கந்தூரி இரவில் முஸ்லிம்கள் செய்கின்ற பாத்திகாவின்போது முதல் சாம்பிராணி போடும் உரிமையை இந்து மக்களே பரம்பரையாகப் பெற்றுள்ளனர். மேத்த பிள்ளை அப்பாவின் நண்பரெனக் கருதப்படும் சின்னமாடசாமி தேவர் பரம்பரையினரும் இதர குடும்பத் தினரும் வந்த பிறகே பாத்திகா ஓதப்படும்.
மேத்த பிள்ளை அப்பா
தமிழகத்தில் இன்றும் பல கிராமங்களில் முஸ்லிம்களை ‘மேத்தன்’ என்றும் ‘மேத்தர்’ என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. தெற்கு விஜயநாராயணபுரத்தில் வாழ்ந்த முகம்மது மலுக்கு என்ற இறைநேசரையும் இந்த வட்டார மரபைப் பின்பற்றியே ‘மேத்த பிள்ளை அப்பா’ என்று அழைக்கிறார்கள். தெற்கு விஜய நாராயணபுரத்தில் இந்துக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ’மேத்த பிள்ளை’, ‘மேத்தம்மாள்’ என்று பெயர்கள் வைக்கப்படுகின்றன.
நல்லிணக்கத்தின் வழியில் இங்கே உயிர்களும் பெயர்களும் கலந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT