Published : 08 Aug 2019 07:56 AM
Last Updated : 08 Aug 2019 07:56 AM
கரு.ஆறுமுகத்தமிழன்
பாண்டி என்று ஒரு விளையாட்டு. சிறு பிள்ளைகள் நிலத்தில் கட்டம் கிழித்தோ வட்டம் இட்டோ விளையாடுவதற்கான அரங்கு ஒன்றை வரைந்துகொள்வார்கள். அந்த அரங்கில் வீசி விளையாடுவதற்காக வட்டமான கல் அல்லது ஓட்டாஞ்சல்லி ஒன்றைத் தயார் செய்துகொள்வார்கள். அதை வட்டு அல்லது சில்லி என்பார்கள். வரைந்து வைத்திருக்கிற அரங்கின் முதற் கட்டத்துக்குள் வட்டை வீசி நொண்டியடித்து ஒரே எட்டில் அதை மிதித்து அடுத்த கட்டத்துக்குத் தள்ளுவார்கள்; பிறகு மீண்டும் நொண்டியடித்து ஒரே எட்டில் அதை மிதித்து அடுத்த கட்டத்துக்குள் தள்ளவேண்டும்.
வட்டு உரிய கட்டத்துக்கு வெளியில் போய்விட்டாலோ, கட்டத்துக்குள் போகாமல் கோட்டில் விழுந்துவிட்டாலோ, ஆட்டக்காரர் (player) ஒரே எட்டில் வட்டை மிதிக்கத் தவறிவிட்டாலோ, கட்டத்தைவிட்டுக் கோட்டை மிதித்துவிட்டாலோ ஆட்டம் இழப்பார். சில்லாக்கு, சில்லு விளையாட்டு என்பன இந்த ஆட்டத்துக்குச் சில வட்டாரங்களில் வழங்கும் பெயர்கள். பாண்டில் ஆட்டம் என்பது பழைய பெயர். பாண்டில் என்றால் வட்டம். பாண்டிலே பாண்டி என்று குறுகி இருக்கலாம் என்று தமிழ்நாட்டு விளையாட்டுகள் என்ற தனது நூலில் தேவநேயப் பாவாணர் சொல்கிறார்.
ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரிஅரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டுஅரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டு ஆடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்...
(நற்றிணை, 3)
- என்று இளங்கீரனார் என்னும் புலவர் எழுதிய சங்கப் பாட்டு ஒன்று. பிழைக்க வழியில்லாததால் வில்லும் அம்பும் ஏந்தி வருகிறவர் போகிறவரை அச்சுறுத்திக் களவாடி வாழும் மனிதர்களின் சிற்றூர். ஏரால் உழுது பிழைப்பது உழவெனில், வில்லையே ஏராகக் கொண்டு உழுது பிழைக்கும் இதுவும் உழவுதான்—வில்ஏர் உழவு. அந்த வில்லேர் உழவர்களின் சிற்றூர் விளிம்பில் ஒரு வேப்பமரம். வானை முட்டுவதுபோல உயர்ந்த அதன் கிளை ஒன்றில் குஞ்சு பொரித்த பருந்து ஒன்று குஞ்சுக்கு இரைதேடிக் கிடைக்காமல் வருந்தி உட்கார்ந்திருக்கிறது.
கொடுங்கோடை. வேப்பமரத்தின் நிழல் சுருங்கிப் போயிருக்கிறது. அந்தச் சுருங்கிய நிழலின்கீழ் பள்ளிக்குப் போகாத சின்னப் பயல்கள் சிலர் மண்ணில் கட்டம் கீறி, அரங்கு வகுத்து, நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு பாண்டில் விளையாடுகிறார்கள். களவாடிப் பிழைக்கிற நிலையில் இருக்கிற அப்பாக்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளிக்குப் போய் என்ன படிப்பார்கள் என்பது ஒருபுறம் இருக்க, படிக்காத பையன்களாக இருந்தாலும் அரங்கு வகுத்து வட்டாடினார்கள் என்பதையே கவனிக்க வேண்டுகோள்.
எப்படி விளையாடுவது?
அரங்கு வகுத்து வட்டாடுவதன்மேல் அப்படி என்ன கவன ஈர்ப்பு? அரங்கு வகுக்காமல் விளையாட முடியாது அல்லவா? விளையாடுவது என்று முடிவெடுத்துவிட்டால் விளையாட்டுக்கான களத்தை வரைந்துகொண்டுவிட வேண்டும் அல்லவா? பாண்டி என்கிற எளிய வட்டாட்டமாக இல்லாமல் கிரிக்கெட்டு என்கிற வலிய துடுப்பாட்டமாகவே இருந்தாலும் அரங்கில்லாமல், எல்லைக் கோடுகள் வகுக்காமல் எப்படி விளையாடுவது? வீசியடித்தது நான்கா, ஆறா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? ஆடுகளத்துக்கு ஒரு வரையறை வேண்டுமல்லவா?
ஒரு பொருள் குறித்துப் பேசும்போதும் அப்படித்தான். வரையறை வேண்டும். விடுதலை விடுதலை என்று முழங்குகிறவர்களையெல்லாம் விடுதலை குறித்து வரையறுத்து விளக்கச் சொன்னால், ஒருவேளை விழிக்கக்கூடும். முழங்குவது குற்றமில்லை. முழங்கும் பொருளின் வரையறையும்கூடத் தெரியாமல் முழங்குவது குற்றம். பேசவிருக்கும் பொருளை வரையறை செய்து எல்லைகளைக் குறித்துக்கொண்டு பேசுவதே குழப்பமில்லாத பேச்சு.
அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். (குறள் 401)
கூட்டத்தில் பேசப் புகும் ஒருவன், உரிய நூல்களைக் கற்றுத் தன் அறிவை நிரப்பிக்கொண்டு பிறகு பேசவேண்டும். அவ்வாறு இல்லாமல் பேசுவது, விளையாடுகிறவர்கள் அரங்கு வகுத்துக்கொள்ளாமல் விளையாடுவதைப் போன்றது. வரையறை இன்றி மனம்போன போக்கெல்லாம் போகும்.
பேசும் பதங்களை வரையறை செய்துகொள்ளல் (defining the terms) என்பது மெய்யியலில் வலியுறுத்தப்படும் விதிகளில் ஒன்று—சட்டவியலிலும். எடுத்துக்காட்டாக ஒன்றைக் கருதுவோம்: இந்திய மெய்யியலில் கடவுள் என்று குறித்தால் அதன் பொருள் வேறு; பிரம்மம் என்று குறித்தால் அதன் பொருள் வேறு. கடவுளையும் பிரம்மத்தையும் ஒரே பொருளில் பயன்படுத்த முடியாது.
கடவுள் என்றால் கடவுகிறவன், அதாவது இயக்குகிறவன் என்று பொருள். இயக்குபவன் என்று ஒருவன் எப்போது ஏற்படுவான்? இயக்கப்படுவன இருந்தால்தானே? எனில் இயக்குபவன், இயக்கப்படுவன என்று இரு தரப்புகள் வந்துவிடுகின்றன அல்லவா? இயக்குபவன் கடவுளாகிய தலைவன்; இயக்கப்படுவன அவனுக்குக் கீழ்ப்பட்டு, அவன் அருள் வேண்டி நிற்கும் உயிர்கள்.
ஆனால் பிரம்மத்தின் கதை வேறு. பிரம்மம் என்பது தலைவனும் இல்லை; தொண்டனும் இல்லை. இயக்கியும் இல்லை; இயங்கியும் இல்லை. விடுவிப்பானும் இல்லை; விடுபடுவானும் இல்லை. மேலிருப்பானும் இல்லை; கீழிருப்பானும் இல்லை. பின் என்னதான் அது? அதை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் காட்ட முடியாது; ஏனென்றால் ஒப்பிட்டுக் காட்ட வேறு எதுவுமே இல்லை; இருப்பதே அது ஒன்றுதான்.
சைவத்தை வரையறுத்த முதல் ஆள்
கடவுள் அல்லது இறைவன் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் பிரம்மம் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது என்பதும் எதையும் ஆணியடித்தாற்போல வரையறுத்துக்கொண்டு பேசுவதன் இன்றியமையாமையும் இப்போது தெளிவாகிறதல்லவா?
திருமூலர் வரையறுத்துக்கொள்ளாமல் எதையும் பேசுவதே இல்லை. சைவம் என்பதை முதல் ஆளாய் வரையறுத்தவர் அவர்தாம்: ‘சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது’ (திருமந்திரம் 1512). சித்தர் என்னும் சொல்லை வரையறுத்தவரும் அவர்தாம்: ‘சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்’ (திருமந்திரம் 125).
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான். (குறள் 30)
எல்லா உயிர்களிடத்தும் அருள் கொண்டிருப்பவர்கள் யாரோ அவரே அந்தணர் என்று வள்ளுவம் வரையறை சொல்லி வைத்திருக்க, அச்சொல்லை மறுவரையறை செய்கிறார் திருமூலர்:
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுஉளோர்;
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமம்செய்து
அம்தவ நல்கருமத்து நின்று ஆங்குஇட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்குஅறுப் போர்களே. (திருமந்திரம் 224)
அந்தணர் என்பவர் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய ஆறு வேலைகளைச் செய்கிறவர்கள். காலை, நண்பகல், மாலை என்று முச்சந்தி வேளைகளிலும் தீ வளர்த்துச் சடங்கு செய்கிறவர்கள். தவம் என்கிற நற்செயலில் நிற்கிறவர்கள். வறியவர்களுக்கு உதவி செய்கிறவர்கள். நல்லனவும் தீயனவுமாகிய உலகியல் நிகழ்ச்சிகளில் சடங்கு செய்விக்கிறவர்கள். காலமாற்றம் உருவாக்கும் பொருள்மாற்றம் காட்டுகின்றன இவ்விரு வரையறைகள்.
இருபதம் ஆவது இரவும் பகலும்
உருஅது ஆவது உயிரும் உடலும்
அருள்அது ஆவது அறமும் தவமும்
பொருள்அது உள்நின்ற போகம்அது ஆமே.
(திருமந்திரம் 1792)
இப்பாட்டில் திருமூலர் வரையறை செய்வன நான்கு: நாள், உரு, அருள், பொருள். நாள் என்பது இரவும் பகலும் இணைந்தது. உரு என்பது உருவமற்ற உயிர் உடம்பெடுத்து உருவாகி நின்ற நிலை. அருள் என்பது இறையருள்; அது அறத்தாலும் தவத்தாலும் கிடைக்கப் பெறுவது. பொருள் என்பது அந்த அருளை நுகர்ந்து அதிலேயே தன்னை இழந்து தோய்ந்து ஒன்றாகிப் போன இன்பம். இரண்டாக இருந்து ஒன்றுவதுதான் முழுமை. ஒன்றே ஒன்றாக இருப்பதில் என்ன பெருமை?
திருமூலர் ஒரு வரையறை மன்னன்.
(வரையறுத்து விளையாடுவோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT