Published : 01 Aug 2019 11:34 AM
Last Updated : 01 Aug 2019 11:34 AM
சனியாஸ்னைன் கான்
எவ்வளவு முயற்சி செய்தும் இறைத்தூதரின் பணிகளைக் குரைஷ் தலைவர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அதனால், அவர்கள் அரேபியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான உத்பா இபின் ராபியாவின் உதவியை நாடினார்கள். இறைத்தூதருக்குச் செல்வம், பதவி, புகழ் போன்ற ஆசைகளைத் தூண்டி, அவருடைய பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு உத்பாவிடம் அவர்கள் கோரினார்கள். உத்பா அளிக்கும் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொண்டு, இறைத்தூதர் தன் பணிகளை நிறுத்திவிடுவார் என்று அவர்கள் நினைத்தனர்.
இறைத்தூதரைச் சந்திக்க வந்த உத்பா, “ஓ, முஹம்மது! நீ சிறந்தவனா, அல்லது உன் தந்தை அப்துல்லா சிறந்தவரா?” என்று கேட்டார்.
இறைத்தூதர் அமைதியாக இருந்தார்.
“நீ சிறந்தவனா, அல்லது உன் தாத்தா அப்த் அல்-முத்தலிப் சிறந்தவரா?” என்று கேட்டார் உத்பா.
அப்போதும் இறைத்தூதர் அமைதியாகவே இருந்தார்.
“உன் தந்தையும் தாத்தாவும் உன்னைவிடச் சிறந்தவர்கள் என்று நீ சொன்னால், அவர்கள் இருவரும் நீ விமர்சனம் செய்யும் கடவுள்களையே வழிபட்டார்கள்! அவர்களைவிட நீ சிறந்தவன் என்று சொன்னால், எந்த வகையில் நீ சிறந்தவன் என்பதை நாங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவரைப் பின்பற்றிவந்த மதத்தைப் பற்றி மோசமான விஷயங்களைப் பேசி, நீ மக்களிடம் வேற்றுமைகளை உருவாக்கியிருக்கிறாய்!” என்றார் உத்பா.
நபிகளிடம் பேசப்பட்ட பேரம் சிறிது நேரம் கழித்து, “கவனமாகக் கேள்! நான் உனக்குச் சில பரிசுகளை வழங்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார் உத்பா.
“உனக்குச் செல்வம் தேவைப்பட்டால், இந்தக் குரைஷ் இனத்தவர்களிலேயே உன்னை மிகப்பெரிய செல்வந்தவராக்கி விடுவோம். உன்னை ஏதாவது நோய் தாக்கினால், எங்கள் செல்வம் அனைத்தையும் செலவிட்டு உன்னைக் குணப்படுத்துவோம். நீ அரசனாக வேண்டுமென்று விருப்பப்பட்டால், உன்னை எங்கள் அரசராக்கி விடுவோம்” என்றார் அவர். உத்பா பேசி முடித்ததும், குர் ஆனின் நாற்பத்தியோறாவது அத்தியாயமான ‘சுரா புஸ்ஸிலத்’தை ஓதினார்.
அவரின் தெய்விக வெளிப்பாட்டை உத்பா கூர்ந்து கவனித்தார். செல்வம், கவுரவம், அதிகாரம் என்று எந்த நோக்கங்களோ ஆசைகளோ இல்லாத மனிதரின் எதிரில் தான் நின்று கொண்டிருப்பதை உத்பா உணர்ந்தார். உண்மையைக் கூறி, மக்களை நல்லவர்களாகவும் நல்லது செய்பவர்களாகவும் இருக்குமாறு கூறும் மனிதராக மட்டுமே இறைத்தூதர் தென்பட்டார். குர் ஆனின் வார்த்தை களைக் கேட்ட உத்பா நெகிழ்ந்துபோயிருந்தார். அவர் அங்கிருந்து எழுந்து அமைதியாக வீட்டுக்குச் சென்றார். அவர் திரும்பி வந்தவுடன், நபிகளுடன் என்ன நடந்தது என்பதை குரைஷ் தலைவர்களிடம் தெரிவிக்கவில்லை.
அபு ஜாஹ்ல், இதைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் குரைஷ் தலைவர் களிடம், “உத்பா, முஹம்மதுவின் பக்கம் சாய்ந்துவிட்டார்” என்று சொன்னார். அபு ஜாஹ்ல் உத்பாவின் வீட்டுக்குச் சென்று, “நீங்கள் முஹம்மதுவின் பக்கம் சாய்ந்துவிட்டீர்கள்” என்று சொன்னார்.
“முஹம்மது எனக்கு அளித்த பதில் கவிதையோ மந்திரமோ அல்ல. அது திரிக்கப்பட்ட கதையும் இல்லை. என் முழு வாழ்க்கையில் அப்படியொரு விஷயத்தை நான் கேட்டதேயில்லை. அதைக் கேட்டதும் நான் வாயடைத்துப் போனேன்! எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
முஹம்மது பொய்ச் சொல்லவில்லை என்பது உனக்கும் தெரியும். ஆகாயத் திலிருந்து உன் மீது ஏதாவது தண்டனை விழும் என்று பயப்படுகிறேன்” என்று அபு ஜாஹ்லிடம் சொன்னார் உத்பா.
சுரா ஃபுஸ்ஸிலத் குர் ஆனை அவிசுவாசிக்கிறவர்கள் பற்றி பேசப்படுவது 41-வது அத்தியாயமாகும். குர் ஆனின் தெய்விகப் பிறப்பைப் பற்றியும் இப்பகுதியில் பேசப்படுகிறது. கடவுளின் ஒருமை, கடைசி தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம், தெய்விக வெளிப்பாடு, குர் ஆனின் அம்சங்களைப் பற்றி பேசுவதோடு கடைசி தீர்ப்பு நாள் பற்றிய செய்திகளையும் விவரிக்கிறது. நரகத்தில் வசிப்பவர்களின் கண்கள், காதுகள், தோல் மற்றும் அனைத்து உறுப்புகளின் வாக்குமூலம் பற்றிப் பேசப்படுகிறது. |
(பயணம் தொடரும்)
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment