Published : 01 Aug 2019 11:18 AM
Last Updated : 01 Aug 2019 11:18 AM
தஞ்சாவூர்க் கவிராயர்
பதினெட்டாம் பெருக்கு என்கிற காவிரியின் விஸ்வரூப தரிசனத்தை நேரில் பார்த்த தலைமுறையின் மனிதர்களில் நானும் ஒருவன். காவிரியில் தண்ணீர் வரும் முன்னதாகவே குளிர்ந்த காற்று எங்கிருந்தோ சாரலாய் நதிவாசம் சுமந்துவரும். அக்காக் குருவிகள் ‘அக்காவோவ் அக்காவோவ்’ என்று கூவும் குரல் இடைவிடாமல் கேட்கும்.
‘காவேரியில் தண்ணீர் வந்துட்டுதாம்’ என்று கத்திக்கொண்டு மக்கள் ஆற்றங்கரை நோக்கி ஓடுவார்கள். கரையோரம் கூடிநின்று நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் காவிரியை கையெடுத்து வணங்குவார்கள்.
இரண்டு கரைகளையும் தொட்டுக்கொண்டு புதுவெள்ள ஓசையோடு ஓடிவரும் நீர்ப்பெருக்கு காண்பவர் நெஞ்சுக் குள்ளும் புகுந்துவிடும். முகத்திலும் கண்ணிலும் கும்மாளமிடும் சிரிப்பும் அதிலே தெளிக்கும் நீர்த்திவலைகளும் பரவசப்படுத்தும். பயபக்தியோடு தண்ணீரை அள்ளித் தலையில் தெளித்துக் கொள்வார்கள். ஆற்றுநீரில் அடித்துக் கொண்டுபோகும் மரக்கிளைகள், கோரைப்புற்கள், இலைதழைகள், நுரைப்பூக்கள் எல்லாம் பார்த்து அதிசயப்படுவார்கள். தேடிவந்த தெய்வமெனக் காட்சிதரும் நதியைத் தலைமீது வணங்கிக் கூத்தாடுவார்கள்.
மரச்சட்டகங்களால் சப்பரம் செய்து உள்ளே சாமிப்படம் வைத்து, வண்ணக் காகிதங்கள் ஒட்டி பெரியவர்கள் செய்துதரும் சின்னஞ்சிறு தேர்களைக் குழந்தைகள் ஆற்றை நோக்கி இழுத்துக்கொண்டு ஓடுவார்கள். நுணா மரத்தின் காய்களில் ‘ரோதை’ எனப்படும் சக்கரம் செய்து ஈர்க்குச்சி கோத்து ஹோவென்று கூச்சலுடன் போவார்கள்.
பெண்கள் படித்துறையில் இறங்கிக் காவிரியில் மூழ்கி தங்களை மகிமைப்படுத்திக் கொண்ட பரவசத்துடன் கணவன்மார்களின் கைகளில் மஞ்சள் கங்கணம் கட்டி மகிழ்வார்கள்.
மஞ்சளும் குங்குமமும் பிரகாசிக்கும் முகத்துடன் புன்னகை மின்ன ஆற்றுமணலைப் பிடித்துவைத்து மலர்களால் அர்ச்சித்து காதோலை, கருகமணி போன்றவற்றைச் சமர்ப்பித்து வெல்லமும் வாலான் அரிசியும் கலந்து படித்துறையை ஒட்டியுள்ள சுவர்களின் மாடப்பிறைகளில் படைத்து வணங்குவார்கள். தாலியைக் கழற்றி காவிரித் தாயின் காலடிகளில் வைப்பதான உணர்வோடு வேண்டிக்கொண்டு, மீண்டும் எடுத்து அணிந்துகொள்வார்கள். புதுமணத் தம்பதியினர் ஆற்றங்கரையோரம் நின்று தாலிப்பெருக்கும் சடங்கில் கலந்து கொண்டு புதிய மஞ்சள் சரட்டை அணிந்துகொள்வார்கள். காவிரி தெய்வத்தின் புதுவெள்ளப் பெருக்காய் வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க வேண்டிக் கொள்வார்கள்.
பதினெட்டாம் பெருக்கு, காவிரி நதி தீர நாகரிகத்தின் முதல் திருவிழா. புறநானூற்றிலிருந்து ஆடிப்பெருக்கு நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மணலிலே ஆற்றுத் தெய்வத்தைச் செய்து வணங்கும் பாவையரின் சித்திரமும் மருதமரத்தின் கிளை ஆற்றில் தாழ்ந்திருக்க அதன் மீதேறி கரையில் நிற்போர் திடுக்கிடும்படி திடும் திடும் என்று ஓசையெழுப்பி இளைஞர்கள் குதித்து ஆற்றுமணலை அள்ளிவரும் காட்சிகளும் அதைக் கண்டு முதியோர் பெருமூச்செறிவதும் இப்போதைப் போல அப்போது பதிவாகியுள்ளன.
காவிரியின் ஒய்யாரம்
காவிரியின் புதுவெள்ளப் பெருக்கினை நேரில் காணச் செல்ல முடியாத பெண்கள் அதிகாலையில் எழுந்து தலைமுழுகி வீடுகளில் உள்ள கிணற்றில் விளக்கேற்றி மலர்களால் பூசித்து வழிபடுவார்கள். கேணிக்குள் குனிந்து பார்த்தால் காவிரியைப் பார்த்துவிட்டதாக ஐதிகம். நதியோடு உறவுகொள்ளும் வகையில் நேர்த்தியாகக் கட்டப்பட்ட படித்துறைகளின் சுவர் ஓரமாகச் சுழித்துத் திரும்பும் காவிரியின் ஒய்யாரத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு வாழ்நாளைக் கழித்துவிடலாம்.
காவிரிக்கரை நெடுக உள்ள படித்துறைகளின் எண்ணிக்கை வியப்பூட்டுவதாகும். திருவையாற்றில் மட்டும் 24 படித்துறைகள் உள்ளன. பூசப்படித்துறை, தியாகைய்யர் சமாதி அருகில் தியாகராஜர் படித்துறை, செவ்வாய்க்கிழமை படித்துறை, புஷ்பமண்டபப் படித்துறை, பாவாசாமி படித்துறை என்பன அவற்றில் சிலவாகும். நாயக்கர் காலத் தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் இவற்றைக் கட்டுவித்ததாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. மராட்டிய மன்னர்கள் காலத்திலும் சில படித்துறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
காவிரி வெறும் நதியல்லள். ஓடிவரும் வழியெல்லாம் மண்ணை யும் மக்களையும் மடியிலேந்தி முலைப்பால் ஊட்டி கலைகள், ஞானம், உணவு, உயிர், உணர்வு, கலாச்சாரம் என்று யாதுமாகி நின்றவள் அவள்.
‘ஆற்றுவெள்ளம் நாளை வரத் தேற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே’ என்று வானிலை முன்னறிவிப்பு கூறும். மழைமேகம் சூழ்ந்து, மின்னல் வெட்டி, மழைபொழியட்டும்! மீண்டும் பதினெட்டாம் பெருக்கில் புதுவெள்ளம் பொங்கிவந்து கடைமடைப் பகுதிவரை பாய்ந்து தமிழகம் செழிக்கட்டும் என்று காவிரித்தாயை ஆடி பதினெட்டுத் திருநாளில் கரம் குவித்து வணங்குவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT