Published : 01 Aug 2019 10:04 AM
Last Updated : 01 Aug 2019 10:04 AM
அருமைநாயகம்
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ பாஷ்யகார அறக்கட்டளை, துணைவர்கள் சார்பில் ஹரி நாம சங்கீர்த்தன பிரபாவ அருட்பேரிசை விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
வெகுமக்களின் நினைவில் மறைந்துபோயிருந்த நாலாயிர திவ்ய பிரபந்தங்களை தனது தவ முயற்சிகளாலும், நம்மாழ்வாரின் அருளாசியினாலும் மீண்டும் பெற்று, அவற்றை கோயில்களில் மரபுமுறையிலும் பண்ணிசையிலும் பாடவைத்துப் பிரபலப்படுத்தியவர் நாதமுனிகள். அவருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு 'நாத ஆராதனை’ யாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
ராமானுஜரின் குருவுக்கும் குருவான ஸ்ரீமன் நாதமுனிகள் வைணவ குருபரம்பரையில் பெரும் போற்றுதலுக்கு உள்ளவராவார். மேனாள் தமிழக அமைச்சர் எச்.வி.ஹண்டே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காட்டுமன்னார்கோவில் M.S.வேங்கடாச்சார், வில்லூர் கருணாகராச்சார் போன்றோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மேல்கோட்டை ஆலய அரையர் ஸ்ரீ ராம சர்மா, ஆழ்வார்திருநகரி ஆலய அரையர் ஸ்ரீராமன் ஆகியோரது அபிநயம் கலந்த, நாதமுனிகள் ஆரம்பித்து வைத்த அரையர் சேவை விளக்க உரைகள் நடைபெற்றன.
இதே மேடையில் இருநூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஸ்ரீமான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமிகளின் ஹரிநாம சங்கீர்த்தன சேவைகளும் போற்றப்பட்டு நினைவுகூரப்பட்டன.
திவ்யப்ரபந்த பண்ணிசை வித்வானாக சிறந்த ஹரிபக்தி சேவை புரிந்து வந்த M.N. வேங்கடவரதனுக்கு பாராட்டுரைகளும் வழங்கப்பட்டன. ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், P.T சேஷாத்ரி, வைத்தியலிங்கம் மற்றும் பலர் மானுடத் துன்பங்களை வேரறுக்கும் ஹரி நாம சங்கீர்த்தன மகிமையை எடுத்துரைத்தார்கள்.
பல இசைக்கலைஞர்களை தனித்தனியே அணுகி ஸ்ரீ பாஷ்யகார அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்ட அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகளின் இசைக் குறுந்தகடும், புதிய படைப்பாக அன்னமாச்சாரியார் அஹோபிலம் நரசிம்மர் பற்றி பாடிய கீர்த்தனைகள் அடங்கிய குறுந்தகடும் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கபட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT