Published : 25 Jul 2019 12:19 PM
Last Updated : 25 Jul 2019 12:19 PM
கரு.ஆறுமுகத்தமிழன்
ஒரு கொள்கையைச் சொல்வதற்குச் சிலர் வகைதொகையாகப் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்க, சிலரோ ஓரிரு வரிகளில் சொல்லிப் போய்விடுவார்கள். சைவ சித்தாந்தம் என்பது மெய்யியல் கொள்கை. அதற்கு முதல் நூல் செய்தவர் மெய்கண்டார். நூலின் பெயர் சிவஞான போதம். சிவஞான போதத்தில் மொத்தம் பன்னிரண்டே நூற்பாக்கள். பன்னிரண்டு நூற்பாக்களுக்கும் சேர்த்து மொத்தம் நாற்பதே வரிகள்.
ஒரு மெய்யியல் கொள்கையை எடுத்துரைக்கத் தேவைப்பட்ட மொத்த வரிகளின் மேல்எல்லை அவ்வளவுதான். சொற்சிக்கனம் மிக்கவர் மெய்கண்டார். மெய்கண்டாருக்கு முன்னோடி திருமூலர். சைவ சித்தாந்தம் என்ற அதே மெய்யியல் கொள்கையை முன்வைக்க அவர் பயன்படுத்திய வரிகள் நான்கே நான்கு:
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி;
பதியினைச் சென்றுஅணு காப்பசு பாசம்;
பதிஅணு கில்பசு பாசம் நிலாவே.
(திருமந்திரம் 115)
பதி, பசு, பாசம் என மூன்று; இம்மூன்றில் பதி அனாதி. அவ்வாறே பசுவும் பாசமும் அனாதிகள். பாசம், பசுவைத்தான் பற்றிக்கொண்டு நிற்குமே தவிரப் பதியை அணுகாது. ஆனால் பசு, பதியை அணுகும். அவ்வாறு பசு பதியை நெருங்கினால், பசுவைப் பிடித்திருக்கும் பாசம் கழன்று ஓடிவிடும்.
இவை என்ன பதி, பசு, பாசம் என்பார்க்கு: பதி என்பது கடவுள்; பசுக்கள் என்பவை உயிர்கள்; பாசம் என்பது தளை. மூன்றில் கடவுள் புரிகிறது; உயிர்கள் புரிகிறது; அதென்ன தளை என்று கேட்பவருக்கு, உயிர்களைக் கட்டி வைத்திருப்பது தளை. ஒரு தளைதான் என்று எண்ண வேண்டாம்; ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று தளைகள் உயிரைப் பிணைத்து வைத்திருக்கின்றன.
(1) இவற்றில் ஆணவம் என்பது அறியாமை. ஆணவத்தைத் திமிர் என்று இன்று அறிகிறோம். திமிருக்குக் காரணம் அறியாமை. அரைகுறையாக அறிந்து வைத்துக்கொண்டு நான் பெரியவன்/ள் என்று கருதும் அறியாமையே திமிரை உருவாக்குகிறது. திமிர் என்பது ஆணவத்தின் ஒரு கூறு மட்டுமே.
(2) கன்மம் என்றால் வினை. உயிர்கள் மனத்தால், உடம்பால், மொழியால் ஏதேனும் செய்துகொண்டே இருக்கின்றன. அவற்றின் செயல்கள் காற்றோடு போய்விடுவன அல்ல; அவற்றுக்கு விளைவுகள் உண்டு. விளைவுகளைத் துய்க்காமல் தப்ப முடியாது.
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
(3) உயிர்கள் வினை செய்ய வேண்டுமானால் அவற்றுக்கு உடம்பு வேண்டாமா? உலகம் வேண்டாமா? கட்டாயம் வேண்டும். கிட்டிப்புள் விளையாட வேண்டும் என்றால்கூடக் கருவிகள் வேண்டும்; களம் வேண்டும் இல்லையா? உயிர்களுக்குக் கருவியாக உடம்பையும் களமாக உலகத்தையும் படைத்துக் கொடுக்கப் பயன்படும் மூலப் பொருளுக்குத்தான் மாயை என்று பெயர்.
உயிர் தன்னியல்பில் அறிவுடையது
சிலந்திவலையில் சிக்கிய பூச்சிபோல உயிர் இந்த முத்தளைகளில் சிக்கியிருக்கிறது. எவ்வாறு சிக்கியது? உயிர் தன்னியல்பில் அறிவுடையது. ஆனால், ஆணவம் உயிரின் அறிவை மறைக்கிறது. எப்படி? எரிகிற விளக்கின் மேல் சட்டியைக் கவிழ்த்து மூடிவிட்டால் இருட்டாகி விடுகிறதில்லையா? அதைப் போல. உயிர் அறிவின்மேல் அறியாமை கவிந்திருக்கிறது. அறியாமையின் இருள் மூட்டத்திலிருந்து வெளிவர உயிருக்கு உடம்பு, உலகம் முதலிய கருவிகள் தேவை. மாயை என்ற மூலப் பொருளிலிருந்து அவை இறைவனால் படைத்து அளிக்கப்படுகின்றன. களிமண்ணைப் பிசைந்து சட்டி, பானை செய்வதில்லையா?
இப்போது அறிவைப் பெறுவதற்கான கருவிகள் உயிருக்குக் கிடைத்துவிட்டன; அப்படியானால் உயிர் அறிவைப் பெற்றுவிட்டதா? இல்லை. புதிய கருவி கிடைத்த உற்சாகத்தில் உயிர் ஆகாத வேலைகள் செய்கிறது. புதிதாக மோட்டார் பைக் வாங்கிய இளம்பையன் அதை நெளித்து வளைத்து ஓட்டியும் முன்சக்கரத்தைத் தூக்கிச் சீற விரட்டியும் சேட்டைகள் செய்வதில்லையா? அதைப் போல. இப்படித்தான் உயிருக்கு வினைகள் சேர்கின்றன.
உயிர் உடம்பெடுத்த காரணம்
உயிர் உடம்பு எடுத்த காரணம் அறிவைச் சேர்ப்பது; ஆனால், நிகழ்வதோ வினையைச் சேர்ப்பதுதான். இந்த வினைச் சேர்ப்பின் ஊடாகவே அறிவுச் சேர்ப்பும் நிகழும். அறிவுச் சேர்ப்பில் ஈடுபாடு வந்துவிட்டால் மெல்ல அறியாமை நீங்கிவிடும்; வினைச் சேர்ப்பு
நின்றுவிடும்; உடம்பு, உலகம் ஆகிய கருவிகளின் தேவை அற்றுவிடும். காரியம் கைகூடிவிட்டால் கருவிகள் எதற்கு?
பாட்டுக்கு மீள்வோம்: பதி, பசு, பாசம் எனப்படும் இவை மூன்றுமே அனாதிகள். அதாவது தொடக்கம் இல்லாதவை; அதாவது இவற்றை யாரும் தோற்றுவிக்கவில்லை; தோன்றாமல், அழியாமல், எப்போதும் இருக்கின்றன (eternal). இதென்ன அநியாயம்? கடவுளை யாரும் தோற்றுவிக்கவில்லை என்பது சரி; உயிர்களையும் யாரும் தோற்றுவிக்கவில்லை என்பது சரியா? உயிர்களைக் கடவுள்தான் படைத்தார் என்று வைத்துக்கொண்டால் என்ன குறை? உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்ட பொருள்கள் என்றால், கடவுள் அவற்றை எதற்காகப் படைத்தார் என்ற கேள்விக்கு விடை சொல்வதில் சிக்கல் வரும்.
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட; அவை
இரண்டும் சேர்ந்துஒரு பொம்மையைச் செய்தன
தாம் விளையாட...
-என்று வைத்துக்கொள்ள வேண்டி வரும்.
விளையாடுவதற்காகத்தான் இறைவன் உயிர்களாகிய பொம்மைகளைச் செய்தார் என்றால், இறைவனுக்குப் பொழுது போகவில்லை என்று கொள்ள வேண்டி வரும். அவ்வாறு கொண்டால், இறைவன் பிற உயிர்களைப் போலவே இடத்துக்கும் காலத்துக்கும் (space-time) உட்பட்டவர் என்று கொள்ள வேண்டி வரும். அவரும் எல்லா உயிர்களையும் போலத்தான் என்றால், அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் வரும். உயிர்கள் படைக்கப்பட்டவை அல்ல, என்றும் இருக்கும் அனாதிகள் என்று கொண்டுவிட்டால் இந்தச் சிக்கல் எழாது அல்லவா? அப்படியானால் உடம்பை, உலகத்தை யார் படைத்தார்கள்? இறைவன்தான்.
ஆண்டவன் படைச்சான்;
எங்கிட்டக் கொடுத்தான்;
அனுபவி ராசான்னு அனுப்பி வச்சான்...
இறைவன் உயிர்களைப் படைத்தால் ஏன் படைத்தான் என்ற கேள்வி வரும்; அதே இறைவன் உலகத்தைப் படைத்தால் ஏன் படைத்தான் என்ற கேள்வி வராதா? வந்தால் விடை சொல்லிக்கொள்ளலாம்: இறைவன் உலகத்தை உயிர்களுக்காகவே படைத்தான்; உயிர்கள் அறிவுபெறக் கருவி வேண்டும் என்ற காரணத்துக்காகப் படைத்தான். எதிலிருந்து படைத்தான்? மாயை என்ற மூலப் பொருளிலிருந்து படைத்தான்.
மாயை எங்கிருந்து வந்தது? அது தொடக்கமற்றது; எப்போதும் இருப்பது.
இவ்வாறாக, கடவுள், உயிர், தளை என்று முப்பொருள்கள்; இவற்றில் கடவுள் எதனாலும் கட்டப்படாது எப்போதும் விடுதலையோடு நிற்கும் உயர்தனிப்பொருள். உயிர்கள் அறிவுள்ளவை என்றாலும் அறியாமை என்னும் தளையினால் கட்டப்பட்டு, விடுதலை அடையமுடியாமல் சிறைப்பட்டிருக்கின்றன. அவற்றை விடுவிக்கக் கடவுள் மாயை என்ற மூலப் பொருளிலிருந்து உடம்பையும் உலகத்தையும் படைத்து வழங்குகிறார். அவற்றைக் கொண்டு உயிர் இல்லாததும் பொல்லாததும் செய்து ஒரு பக்கம் வினைகளைச் சேகரித்தாலும், மறுபக்கம் அறிவையும் சேகரிக்கிறது. அறிவுச் சேகரம் அதிகரிக்கும்போது உயிர், தளைகளை உணர்கிறது; கட்டறுக்கிறது; விடுதலை பெறுகிறது. விடுதலை பெறுதல் நோக்கம்; அதற்குத் தேவை அறிவு. அதைப் பெறத் துணை நிற்பது எதுவோ, அது இறை என்று போற்றத்தக்கது.
எழுத்துஅறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டுஅறுப்பான் ஆகும் – மொழித்திறத்தின்
முட்டுஅறுத்த நல்லோன் முதல்நூல் பொருள்உணர்ந்து
கட்டுஅறுத்து வீடு பெறும்
-என்று ஒரு பழம்பாடல். தன்னிலை என்ன? அடிமைத்தனமாகிய இழிதகைமை. பெற வேண்டியது என்ன? விடுதலை. பெறும் வழி என்ன? அறிவைப் பெறுதல். துணை செய்வார் யார்? இறை. அவ்வளவுதான் சைவ சித்தாந்தம். பெறுவன பெறுக.
(நல்லறிவு பெறுவோம்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு:
arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT