Published : 18 Jul 2019 12:17 PM
Last Updated : 18 Jul 2019 12:17 PM
சிந்துகுமாரன்
காலத்தின் ஓட்டம் வெவ்வேறு உணர்நிலைகளில் வெவ்வேறு வேகத்தில் இயங்குகிறது என்னும் உண்மையை வேறுபட்ட கலாச்சாரங்கள் ஏறக்குறைய ஒரே விதத்தில் காட்டுகின்றன. இது ஒரு சூபிக் கதை. முன்னொரு காலத்தில் அரேபியாவில் ஒரு சுல்தான் இருந்தார். ஒருமுறை அவருக்குக் காலம் என்றால் என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
தன் சபையில் இருந்த கல்விமான்களிடம் அவர் விளக்கம் கேட்டார். யார் சொன்ன பதிலும் சுல்தானுக்குத் திருப்தியாக இல்லை. தன் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு நல்ல பரிசு கொடுப்பதாக அறிவித்தார். யார் யாரோ வந்தார்கள். யார் சொன்ன விளக்கமும் அவருக்கு நிறைவாக இல்லை.
ஒரு நாள் சபையில் சுல்தானும் மற்றவர்களும் அமர்ந்திருந்தபோது சுல்தானின் சந்தேகத்தைத் தான் தெளியவைப்பதாக ஒரு பக்கிரி வந்து சொன்னார். அழுக்குப் படிந்த உடையும் கலைந்த தலையும் பார்ப்பதற்குப் பைத்தியக்காரனைப் போல் இருந்த அந்தப் பக்கிரியைக் கண்டு சபையில் இருந்த அனைவரும் ஏளனமாகச் சிரித்தார்கள். ஆனால் சுல்தான் மட்டும், ‘சரி, சொல்லுங்கள். காலம் என்பது என்ன?' என்று கேட்டார் சுல்தான்.
தண்ணீரில் தலை நுழைத்தார்
அதற்கு அந்தப் பக்கிரி, ‘முதலில் ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லுங்கள்' என்றார். தண்ணீர் வந்தது. பக்கிரி சுல்தானிடம், ‘ஒரு தடவை அந்தத் தண்ணீரில் தலையை முக்கி எடுங்கள். பிறகு உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்' என்று சொன்னார். சுல்தானும் தலையை அந்தப் பாத்திரத்தில் இருந்த தண்ணீருக்குள் நுழைத்தார்.
அடுத்த கணம் சுல்தான் எங்கோ அறியாத ஊர் ஒன்றில் தான் நிற்பதைக் கண்டார். சுற்றிலும் ஏதோ சந்தைபோல் இருந்தது. சுல்தான் மட்டும் விலையுயர்ந்த ஆடைகளுடன் அங்கே நின்றிருந்தார். இந்தப் பக்கிரி ஏதோ மாயம் செய்து தன்னை எங்கோ கொண்டுவந்து விட்டான் என்று சுல்தானுக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய மொழி அங்கு யாருக்கும் புரியவில்லை. அவர் அணிந்திருந்த உடையும் அந்த இடத்துக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் இருந்தது.
சற்று நேரத்தில் அவருக்குப் பசி எடுக்கத் தொடங்கிவிட்டது.
தாகமாகவும் இருந்தது. ஒரு சிற்றுண்டிக் கடையில் சென்று சாப்பிட ஏதாவது தரும்படி சைகை செய்து கேட்டார். கடைக்காரனும் பணம் வேண்டும் என்று கேட்டான். சுல்தானிடம் பணமேதும் இல்லை. வேலை ஏதாவது செய்தால் உணவோ பணமோ கிடைக்கும் என்று கடைக்காரன் சொன்னான். அங்கே இருந்த மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு போய் சற்றுத் தள்ளி இருந்த வீட்டில் போட்டால் பணம் கிடைக்கும் என்று அவன் சொன்னான்.
வேறு வழியில்லாமல் சுல்தான் மூட்டையைத் தூக்கிக்கொண்டார். உடலில் பசியும் பலவீனமும், மனத்தில் கோபமும் சுய பச்சாதாபமும் நிறைந்து இருந்ததால், அந்த வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். அந்த வீட்டு எஜமானி ஒரு பணக்கார விதவை.
ஆடம்பர உடையுடுத்திய ஒருவன் தன் வீட்டு வாசலில் மூட்டையைத் தூக்கிக் கொண்டு விழுவதை மாடியிலிருந்து பார்த்த அவள், அந்த மனிதரைத் தூக்கி வருமாறு தன் வேலையாட்களைப் பணித்தாள். அவர்களும் சுல்தானைத் தூக்கிக்கொண்டு வந்து எஜமானி காட்டிய கட்டிலின்மேல் படுக்க வைத்தனர். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் களை நிரம்பிய முகத்துடனும் அந்த மனிதர் இருப்பதைக் கண்ட அந்தப் பெண்மணி வைத்தியரை அழைத்து, பார்க்கச் சொன்னாள்.
பசியும் சோர்வுமே மயங்கி விழுந்ததற்குக் காரணம் என்று வைத்தியர் சொல்லிவிட்டுப் போனார். அவள் சுல்தானின் மயக்கத்தைத் தெளிய வைத்து உணவு கொடுத்து இளைப்பாறச் சொன்னாள். பிறகு அவருடைய கதையைக் கேட்டாள். இவரும் சைகைகளால் தன் கதையைச் சொன்னார். சுல்தானுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதும் கணக்கு வழக்குப் பார்க்கத் தெரியும் என்பதும் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
தன் செல்வங்களைப் பராமரிக்கச் சரியான ஆள் கிடைத்துவிட்டதாக அவள் நினைத்தாள். ஒரு வருடம் கழிந்தபின் சுல்தானை அவள் மணம் செய்து கொண்டாள். இருவரும் சுகமாக வாழ்ந்தனர். குழந்தைகள் ஐந்தாறு பிறந்தன. சொத்து இன்னும் சேர்ந்தது. தான் சுல்தானாக இருந்ததை அவர் ஏறக்குறைய மறந்தே போய்விட்டார். அது ஒரு பழைய கனவுபோல் அவருக்கு எப்போதாவது நினைவுக்கு வந்தது.
ஒருகணம் தான்
ஒரு முறை மழை பெய்ய ஆரம்பித்து, விடாமல் நாட்கணக்கில் மழை பெய்தது. வெள்ளம் ஊரெல்லாம் அடித்துக்கொண்டு போயிற்று. வீடுகளெல்லாம் இடிந்து விழுந்தன. சுல்தானின் மனைவியும் குழந்தைகளும் வெள்ளத்துக்கு இரையாகிப் போயினர். ஊரெங்கும் தண்ணீர் நிறைந்தது. இடுப்பு, மார்பு, கழுத்து என்று தண்ணீரின் அளவு ஏறிக்கொண்டே வந்தது. தலையும் தண்ணீருக்குள் மூழ்கும்போது, தலையை நிமிர்த்தினார் சுல்தான்.
அந்தக் கணத்தில் தன் அரண்மனையில், மந்திரி பிரதானிகள் சூழ்ந்திருக்க, அருகில் பக்கிரி நின்றிருக்க, எதிரே தண்ணீர்ப் பாத்திரம் இருக்க, தன் தலை மட்டும் ஈரம் சொட்டச் சொட்ட தான் நின்றிருந்ததைக் கண்டார். பக்கிரியைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘என் வாழ்க்கையில் எவ்வளவு ஆண்டு காலத்தை இப்படி வீணடித்துவிட்டாய்? உன்னைச் சும்மா விட மாட்டேன்' என்று கத்தினார் சுல்தான்.
பக்கிரி நிதானமாக, ‘என்ன சுல்தான்? நான் எங்கே உங்கள் காலத்தை வீணடித்தேன்? ஒரு கணம் தண்ணீருக்குள் தலையை நுழைத்துவிட்டு காலத்தை வீணடித்துவிட்டேன் என்கிறீர்களே?' என்று கேட்டார்.
‘இந்தப் பக்கிரி சொல்வதை யாரும் நம்பாதீர்கள். ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் என் வாழ்வில் வீணாகிப் போய்விட்டது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது உங்கள் யாருக்கும் தெரியாது. இவனை முதலில் கைது செய்யுங்கள்' என்று கத்தினார். மந்திரி ஒருவர் எழுந்து, ‘சுல்தான், நீங்கள் ஒரே ஒரு கணம் தலையைத் தண்ணீருக்குள் நுழைத்தீர்கள். அடுத்த கணம் வெளியே தலையை எடுத்துவிட்டீர்கள். இதுதான் நடந்தது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை' என்று சொன்னார்.
‘என்ன சுல்தான்? காலம் என்பது புரிந்ததா?' என்று கேட்டுவிட்டு விடுவிடுவென்று நடந்து வெளியே போய்விட்டார்.
நாரதர் - கிருஷ்ணர் கதையில் வந்த அதே விஷயம்தான் இது. பார்ப்பவர் எந்த உணர்தளத்திலிருந்து பார்க்கிறார் என்பதுதான் என்ன தெரிகிறது என்பதை நிர்ணயிக்கிறது. சுல்தானின் பார்வையும் பக்கிரியின் பார்வையும் ஒரே தளத்தில் இருந்து இயங்கவில்லை. அவர்கள் இருவரது பார்வையின் எல்லைகள் வெவ்வேறானவை. இருவரும் பார்ப்பது வெவ்வேறு உலக அமைப்புகள். அவற்றின் சட்டகங்கள் வேறானவை. சுல்தான் பார்ப்பது அனைத்தையும் பக்கிரியால் பார்க்க முடியும். ஆனால் பக்கிரியின் பார்வை வெளி முழுவதும் சுல்தானின் பார்வையில் அடங்காது.
(கால விசாரணை தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT