Published : 18 Jul 2019 12:02 PM
Last Updated : 18 Jul 2019 12:02 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 86: மண்ணுயிர்க்கெல்லாம் அன்பு வழங்குவார்

கரு. ஆறுமுகத்தமிழன் 

‘சித்தாந்தம்’ என்ற சொல் நமக்கு நன்கு அறிமுகமானது. மெய்யியலில் (தத்துவத்தில்) மட்டுமின்றி அரசியலில், இலக்கியத்தில் என்று பல துறைகளிலும் புழங்கும் சொல் அது. என்ன பொருள் அதற்கு? ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்; அது தெரியாமல் போனாலே வேதாந்தம்’ என்று கண்ணதாசன் ஒரு திரைப்பாட்டில் எழுதுகிறார்.

தெளிவாகப் புரிந்தால் சித்தாந்தம்; குழப்பியடித்தால் வேதாந்தம். இது ஓரளவு உண்மையும்தான் என்றாலும்கூட, சித்தாந்தத்துக்கு அவ்வளவு எளிமையாகப் பொருள் கொண்டுவிட முடியாது. ‘சித்தாந்தம்’ என்பதற்கு, ‘நன்கு நிறுவப்பட்ட முடிவு அல்லது கொள்கை’ (an established conclusion or tenet) என்று பொருள். 

நன்கு நிறுவப்பட்ட முடிவு எப்போது பிறக்கும்? ஒன்றைச் சீர் தூக்கி ஆராய்ந்து, அளவையியல் பிறழ்வுகள், முரண்கள் (logical inconsistencies, contradictions) ஏதும் வாராமல், தெளிவாகச் சிந்தித்து முடிக்கும்போது பிறக்கும். அந்த முடிவை நாம் கொள்கையாக ஏற்றுக்கொள்வோம். ஒன்றைக் குறித்து வாதிடும்போது இது என் கொள்கை, இதைச் சரி என்று நிறுவவே நான் வாதிடுகிறேன், அதற்கு இன்னின்ன சான்றுகள் உள்ளன என்று எதிர்வாதாடிக்கு உணர்த்துவது வாதியல் மரபு. நீதிமன்றங்களில்கூட அதுவே நடைமுறை. 

எது உண்மை

தன்னுடைய மெய்யியல் கொள்கையை அடையாளப்படுத்துவதற்காகச் சித்தாந்தம் என்ற இந்தச் சொல்லைத் தமிழ்நாட்டுச் சைவம் எடுத்துக்கொண்டபோது, தமிழ்ச் சைவ மெய்யியல் சைவ சித்தாந்தம் என்று பெயர் பெற்றது. எது உண்மை என்று சீர்தூக்கி ஆராய்ந்து, முரண் அறுத்து உருவாக்கப்பட்டுத் தமிழ்ச் சைவத்தால் முன்வைக்கப்பட்ட கொள்கை சைவ சித்தாந்தம். இந்தச் சொல்லை வடமொழியிலிருந்து முதன்முதலாய்த் தமிழுக்கு இறக்கியவர் திருமூலர்: 

கற்பன கற்றுக் கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
தொல்பதம் மேவித் துரிசுஅற்று மேலான
தற்பரம் கண்டுஉளோர் சைவசித் தாந்தரே. (திருமந்திரம் 1421)

எவற்றைக் கற்க வேண்டுமோ அவற்றைக் கற்க; கற்பதோடு நில்லாமல் அதற்குத் தக ஓகத்தில் நிற்க; அறிவை அடைய வேண்டிய வழிகளில் அடைக; உண்மைநிலை எது என்று தெளிக; அழுக்குகளை அகற்றுக; தன்னையும் தன்னிலும் மேலான பரத்தையும் கண்டுகொள்க; அவ்வாறு கண்டுகொண்டவர் எவரோ அவரே சைவசித்தாந்தர் ஆவர் என்று வரையறுக்கிறார் திருமூலர். 
சித்தாந்தம் என்பதைக் குறிக்கத் தமிழில் சொல் இல்லையோ? இருக்கின்றன. திருவள்ளுவர் பயன்படுத்திய மெய்ப்பொருள், செம்பொருள் ஆகியன (குறள்கள் 355, 356, 358). சாத்தனாரும் கம்பரும் பயன்படுத்திய துணிபொருள் என்பது.

...துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்புஒழி யார்... 
(மணிமேகலை, சிறைவிடு காதை, 136-37)

துன்பத்தைத் தீர்க்க உதவும் மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள், இந்த மண்ணில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் இடையறாது அன்பினை வழங்குவார்கள்.

மறைகளும் முனிவர் யாரும் 
மலர்மிசை அயனும் மற்றைத்
துறைகளின் முடிவும் சொல்லும்
துணிபொருள் தனிவில் தாங்கி
அறைகழல் இராமன் ஆகி
அறநெறி நிறுத்த வந்தது;
இறைஒரு சங்கை இன்றி
எண்ணுதி, எண்ணம் மிக்கோய்!
(கம்ப ராமாயணம், கிட்கிந்தா காண்டம், வாலிவதைப் படலம், 4177)

வாலி சாகுமுன் தன் தம்பி சுக்கிரீவனை அழைத்து அறிவுரை சொல்கிறான்: சிந்திக்கத் தெரிந்தவனே! நான் சொல்வதைச் சிந்தித்துப் பார். மறைகள், முனிவர்கள், பிரம்மன், இன்னும் கருதத்தக்க பிற துறைகள் எல்லாமே ஆராய்ந்து துணிந்த மெய்ப்பொருள் எதுவோ அந்த மெய்ப்பொருள், உருவெடுத்து, கையில் வில் ஒன்றைத் தாங்கி, ராமன் என்று பெயரும் பூண்டு, அறத்தை நிலைநிறுத்த இந்த உலகுக்கு வந்திருக்கிறது. சற்றும் தயக்கம் இன்றி அந்தத் துணிபொருளை நினை, மனங்கொள், போற்று.

செம்பொருள் துணிவு

மணிவாசகர் ஒரு தொடரைப் பயன்படுத்துகிறார்: ‘செம்பொருள் துணிவு.’ இந்தத் தொடரைச் சைவ சித்தாந்தம் என்பதற்கே நிகராகப் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். 

உம்பர்கட்கு அரசே! ஒழிவுஅற நிறைந்த
யோகமே! ஊற்றையேன் தனக்கு
வம்புஎனப் பழுத்துஎன் குடிமுழுது ஆண்டு
வாழ்வுஅற வாழ்வித்த மருந்தே!
செம்பொருள் துணிவே! சீர்உடைக் கழலே!
செல்வமே! சிவபெரு மானே!
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்!
எங்குஎழுந்து அருளுவது இனியே?
(திருவாசகம், பிடித்த பத்து, 1)

தேவர்களுக்கு அரசனே! எல்லாப் பொருள்களிலும் நிறைந்து இருப்பவனே! எனக்குள்ளேயும் நீயே நிறைந்திருந்தாய் என்றாலும் நான் உண்ணுமாறு கனியாமல் காயாக இருந்த நீ எனக்காக ஒரு நாள் குபீரென்று பழுத்துக் கனிவு காட்டினாய்! என்னை மட்டுமல்லாது என் குடி முழுதையும் ஆண்டுகொண்டாய்! நாங்கள் வாழும் வாழ்வு வாழ்வல்ல என்று காட்டி, அதை அறுத்து, எங்களை வேறாக்கி வாழ்வித்தாய்! செம்பொருள் என்று துணியத்தக்க மெய்ப்பொருளே! நாங்கள் நாளும் தொழும் திருவடியே! செல்வமே! சிவமே! உன்னைச் சிக்கென்று பிடித்தேன்! மாட்டிக்கொண்டாய்! இனி என்னை விட்டு எங்கே போவாய்?
சைவ மெய்ப்பொருள், சைவச் செம்பொருள், சைவத் துணிபொருள், செம்பொருள் துணிவு என்பன போன்று ஒரு தமிழ்த் தொடரை ஆக்கி ஆளாமல் வடமொழியில் கடன் வாங்கிச் சைவ சித்தாந்தம் என்று ஏன் ஆண்டார் திருமூலர்? திருமூலர் தமிழ்க் காதலர்தாம் என்றாலும் வடமொழி மறுத்துத் தமிழ் நிறுத்தும் போக்கினர் அல்லர். 

...தமிழ்ச்சொல், வடசொல் எனும்இவ் இரண்டும் 
உணர்த்தும் அவனை உணராலும்
 ஆமே (திருமந்திரம் 66) 

-என்று ஒன்றை மறுக்காமல் மற்றொன்றை ஆதரிப்பவர். பரம்பொருளை வடமொழி மட்டுமா உணர்த்துகிறது? தென்மொழியுந்தான் உணர்த்துகிறது. வடமொழியில் மட்டும்தான் அறிவு இருக்கிறது, மற்றவற்றில் இல்லை என்று வடமொழிவாணர்கள் சில வேளைகளில் மூடத்தனமாகப் பேசலாம்; ஆனால் அதையே திருப்பிப் போட்டுத் தென்மொழியில் மட்டும்தான் அறிவு இருக்கிறது, மற்றவற்றில் இல்லை என்று தென்மொழிவாணர்களும் மூடத்தனம் பேசக் கூடாது என்பது திருமூலர் கருத்தாக இருந்திருக்கலாம். சரி. அதற்காகச் சைவ சித்தாந்தம் என்ற வடமொழித் தொடரைப் பெருவழக்காக்க வேண்டுமா?

மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தினர். வேதாசலம் என்கிற தன் பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டவர். மாணிக்கவாசகத்தை மணிமொழியன் என்றும், திருஞான சம்பந்தத்தை அறிவுத் தொடர்பன் என்றும் குஞ்சிதபாதத்தைத் தூக்கிய திருவடி என்றும் திரிபுரசுந்தரியை முந்நகர் அழகி என்றும் தமிழாக்கி அழைத்தாராம். அத்தகையவர், சைவ சித்தாந்தத்தைப் பரப்ப ஒரு மன்றத்தை உருவாக்கியபோது அதற்கு வைத்த பெயர் ‘சைவ சித்தாந்த மகாசமாஜம்’ என்பது. (இப்போது சைவ சித்தாந்தப் பெருமன்றம்).

இது ஏன்? தனித்தமிழ் அடிகளார் சமாசப் பெயரைத் தமிழில் ஏன் வைக்கவில்லை? வடநாட்டில் பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தோன்றி நாடெங்கிலும் வைதிகக் கருத்தைப் பரப்ப முயன்று கொண்டிருந்தபோது, ஆகமக் கருத்தாகிய சைவ சித்தாந்தத்துக்கும் ஒரு சமாஜத்தை உருவாக்கி அதையும் நாடெங்கும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடனே தமிழில் பெயரிடப்படாமல் சைவ சித்தாந்த மகாசமாஜம் என்று வடமொழியில் பெயரிடப்பட்டதாக அடிகளாரின் மகனார் மறை.

திருநாவுக்கரசு குறிக்கிறார் (வல்லிக்கண்ணன், தமிழ் வளர்த்த ஞானியாரடிகள், ப.78). 
ஒருவேளை திருமூலருக்கும் அதுதான் கருத்தோ? வேதாந்தம் போற்றுகிற வடநாடு சித்தாந்தத்தைக் கேள்வியாவது படட்டும் என்றுதான் வடமொழிப் பெயரை இறக்கினாரோ? நல்லது. வம்பெனப் பழுத்த அறிவுப் பழத்தை, வாழ்விக்க வந்த மருந்தை, அகவினத்தார்க்கு மட்டுமல்லாது புறவினத்தார்க்கும் பங்கிட்டு அளிப்பது திருமூலர் அருள்.

(அருள் தொடரும்) 
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x