Last Updated : 30 Jan, 2025 04:20 PM

 

Published : 30 Jan 2025 04:20 PM
Last Updated : 30 Jan 2025 04:20 PM

மால் விட்டு மால் தாவும் மனம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 13

வண்டென வரதனை வாரிப் பருகிய திருப்பாணாழ்வார், ஒரு சிறுபொழுது வானரமாக வடிவம் எடுக்கிறார். மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல அவர் மனம் மால் விட்டு மால் தாவுகிறது. எத்தனை பெரு‘மால்’ மரங்களை தாவிக் கடந்தாலும் இறுதியில் ஒரு ‘மால்’ மரத்திடம் அவர் மனம் சென்று அமைந்து விடுகிறது . அம்‘மால்’மரம் ஸ்ரீ ரங்கநாத பெருமான்.

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே

வடவேங்கடம் என்னும் திருப்பதித் திருத்தலம் உண்மையில் இந்த உலகமே. அங்கு வாழும் மந்திகள் சபல மனம் படைத்த சம்சாரிகள். எதிலும் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் அலையும் அந்த ‘வானர’ங்களை திருவேங்கடமுடையான் தான் ஆற்றுப்படுத்தி அமைதியுறச் செய்கிறான். எப்போதும் ‘நின்ற’ கோலத்தில் இருப்பவன் தானே நிலையில்லாத உயிர்களை நிலைப்படுத்தி நிறைவளிக்க முடியும்.

ஒரு சராசரி வானரமாய் இல்லாமல் வானரங்கனின் மேல் எப்போதும் ஈடுபட்டிருந்ததால் தான் திருமாலின் உந்திச்சுழி கூட திருப்பாணாழ்வாருக்குப் பேரழகாய்த் தெரிகிறது.

“அயனைப் படைத்ததோர் எழில் உந்தி மேலதன்றோ அடியேனுள்ளத் தின்னுயிரே” என்ற வரிகளில் ஒரு மிகப் பெரிய சூட்சுமமும் உள்ளது.

நாம் விழித்திருந்து இயங்கும்போது உயிரானது நெற்றிப்பொட்டில் தங்கும். இது நனவு நிலை. இதே உயிர் , கனவு நிலையில் கழுத்துப்பகுதியில் தங்கும். உறக்க நிலையில் நெஞ்சுப்பகுதியில் தங்கும். இவ்விடம் தான் ஆன்மாவின் இயல்பான இருப்பு நிலையாகும். இதைத் தான் நமது முன்னோர்கள் இதயக்கமலத்தில் இறைவன் வீற்றிருக்கிறான் என்று உருவகப்படுத்தினார்கள்.

திருப்பாணாழ்வார் சொல்வதும் இதையே. இதயத்தில் வெளி (space) இருக்கும் வரை தான் நம்மால் வாழ இயலும். இந்த இதயக்கமலத்தை நமது உடலெங்கும் ரத்தத்தைக் கொண்டு சேர்க்கும் இதயம் என்னும் உறுப்போடு தொடர்புபடுத்தக்கூடாது.

நனவு நிலை, கனவு நிலை, உறக்க நிலை ஆகியவற்றுக்குப் பிறகு துரிய நிலை என்றொரு நிலை உள்ளது. இந்த நிலையில் உயிரானது தொப்புளில் தங்கியிருக்கும். தன்னைப் பற்றித் தானறிந்து தன்மயமாகி நிற்கும். இது யோகத்தின் மிக உயர்ந்த நிலை. இதையும் கடந்த நிலை தான் துரியாதீதம் என்னும் ஐந்தாம் நிலை.

இதிலிருந்து துரிய நிலையிலிருந்து தான் இந்தப் பாசுரத்தைத் திருப்பாணாழ்வார் பாடினார் என்று புரிந்துகொள்ளலாம். சீவாத்மா தன்னில் தானே அமிழ்ந்திருக்கும் அந்த நிலையைக் காட்டிலும் ஸ்ரீ மந் நாராயணனாகிய பரமாத்மாவுக்கு ஆட்பட்டு நிற்றல் மிக உயர்ந்த நிலை. அதுதான் வைணவத்தின் அடிப்படை.

அயனாகிய பிரம்மாவைப் படைத்த அவன் தான் இந்தச் சிறிய சீவாத்மாவையும் படைத்தான். பரமாத்மாவாகிய அவனுக்கு இந்த சீவாத்மா அடிமை. அவனுக்குத் தொண்டு செய்ய படைக்கப்பட்டிருப்பதால் இவ்வுயிர் இன்னுயிர் ஆகிறது. அதனால் தான் தன் உந்திப் பிரதேசத்தில் சென்று உயிர் தங்கவில்லை என்று பாடாமல் தன் உள்ளத்து இன்னுயிர் பெருமாளின் நாபிக்கமலத்தில் சென்று தங்குகிறது என்று திருப்பாணாழ்வார் பாடுகிறார்.

> முந்தைய அத்தியாயம்: பொன்னிறமா, செந்நிறமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 12

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x