Published : 09 Jan 2025 06:44 AM
Last Updated : 09 Jan 2025 06:44 AM

சங்கடங்களை தீர்த்து அருள்பாலிக்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!

தெப்பக்குளம் மாரியம்மன் கோயில். படங்கள்: நா.தங்கரத்தினம்.

மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட் டில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்துக்குட்பட்டது வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாநகரை கூன்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தார். அப்போது, மதுரையின் கிழக்கே தற்போது கோயில் அமைந்துள்ள பகுதி மகிழம் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

அதனை திருத்தி, அருகே வைகை ஆற்றில் கிடைத்த அம்மனை தெற்கு கரையில், தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக அறியப்படுகிறது. மாரியம்மன், துர்கையும் என வெவ்வேறு வடிவமாக இருந்தபோதும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும் வகையில், மாரியம்மன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கி வைத்திருக்கிறார். துர்கை அம்மனின் இடது காலுக்கு கீழே எருமைத்தலை உள்ளது.

மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள் போருக்கு செல்லும் முன் வீர தீரத்துடன் செயல்படவும், போரில் வெற்றி பெறவும், அம்மனை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிற்காலங்களில் இந்த அம்மனே மதுரையின் எல்லைக்காவல் தெய்வமாகவும், தெப்பக்குளம் மாரியம்மன் ஆகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

மதுரை மன்னராக திருமலை நாயக்கர் இருந்த போது, தற்போது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனையை கட்டுவதற்கான மணல் இங்கிருந்து தோண்டப்பட்டது. அப்படி மணலை தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தை, சதுர வடிவ தெப்பக்குளமாக மாற்றினார். தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பங்களில் இதுவும் ஒன்று. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் மரங்களுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது. தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கு சுரங்கக் குழாய்கள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டன.

தெப்பக்குளம் மாரியம்மன்

இந்த தெப்பம் தோண்டும்போது கிடைத்த விநாயகர் சிலையே மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநா யகராக பிரதிஷ்டை செய்யப்பட்டது. தைப்பூசத் தன்று மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இத்தெப்பத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மதுரைக்கு வருவார்கள். இங்கு அம்மனே பிரதானம் என்பதால், வேறு பரிவாரத் தெய்வங்கள் இல்லை. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் உள்ளனர்.

அம்மைநோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தீராத நாள்பட்ட நோய்கள், குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் தீர பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் வேண்டுதல் செய்து நேர்த்தி செய்கின்றனர். வேண்டிய காரியங்கள் நிறைவேறினால் அம்மனுக்கு அக்னிச்சட்டி, பால் குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை நிறை வேற்றுகின்றனர்.

அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பருகினால் சகல நோய்களும் நீங்கும் என்பதால், பக்தர்கள் தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பக்தர்கள் எலுமிச்சை தீபமேற்றியும் வழிபடுகின்றனர். உள்ளம் உருகி வேண்டி நிற்கும் பக்தர்களின் சங்கடங்களை தீர்த்தருளும் மகாசக்தியாக விளங்குகிறார் தெப்பக்குளம் மாரியம்மன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x