Last Updated : 09 Jan, 2025 06:35 AM

 

Published : 09 Jan 2025 06:35 AM
Last Updated : 09 Jan 2025 06:35 AM

திருநீறு அணிந்தவரை துர்சக்திகள் நெருங்காது!

`நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது அவ்வை வாக்கு இந்து மதத்தின் அடையாளங்களில் மிக முக்கியமானது திருநீறு என்படும் விபூதி. சீறு என்றால் சாம்பல், திருநீறு என்றால் மகிமை பொருந்திய நீறு. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சம்பலாகத்தான் போகிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுவது திருநீறு ஆகும்.

விபூதி பூசுவதில் உத்தூளனம், திரிபுண்டரம் என இரு வகைகள் உள்ளன. திருநீற்றை பரவி பூசும் முறை உத்தூளனம். சிவபெருமானை நினைத்து தண்ணீருடன் சேர்த்து குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை பூசிக்கொள்வது திரிபுண்டரம். 3 வகை பாவங்களை போக்கும் வகையில் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை. நடுப்பகலுக்கு முன்பாக விபூதி பூசும்போது இப்படி பூசவேண்டும்.

திருநீறு பொதுவாக பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், அது எந்த வகை பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகிறதோ அதை வைத்து தீறுநீற்றை, கல்பம், அணு கல்பம், உபகல்பம், அகல்பம் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

கல்பம்: கல்பம் திருநீறு கன்றுடன் இருக்கும் பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான பசு சாணம் இடும்போது, அது பூமியில் விழும் முன் அதை தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி கொள்ளவேண்டும். பின்னர், அதை சிவாக்கினியில் எரித்து எடுப்பதுதான் கல்பத் திருநீறு. இந்த வகை திருநீறு மிகச்சிறந்த அருள் சாதனமாகக் கருதப்படுகிறது.

அணுகல்பம்: காடுகளில் சுற்றித் திரியும் பசுக்களின் சாணத்தில் தயாரிக்கப்படுகிறது அணுகல்பம். இந்த வகை பசுக்கள் கன்றுகள் ஈன்றும், ஈனாமலும் இருக்கலாம். இந்த வகை திருநீற்றை மந்திரங்கள் கொண்டு பூஜைகள் செய்து முறைப்படி தயாரித்தால் நல்ல பலனை கொடுக்கும்.

உபகல்பம்: மாட்டுத் தொழுவம், மாடுகள் மேயும் இடங்களிலிருந்தும் எடுக்கப்படும் சாணத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை திருநீற்றைதான் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.

அகல்பம்: மக்கள் சேகரித்துக்கொண்டு வரும் சாணத்தை சுள்ளிகளால் எரித்து தயாரிக்கப்படும் திருநீறு அகல்பத் திருநீறு என அழைக்கப்படுகிறது.

மருந்தாகும் திருநீறு:

திருநீறு ஆன்மிகப் பலத்துக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது என நவீன அறிவியல் சொல்கிறது. சாணத்தில் நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. திருநீறை பூசினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நோய் தீரும் என்ற நம்பிக்கை மனதில் உருவாகும்.

வாதத்தால் உண்டாகும் நோய்கள் 81, பித்தத்தால் உண்டாகும் நோய்கள் 64, கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் தீர்க்கும் வல்லமை திருநீறுக்கு உண்டு என மருத்துவக் குறிப்புகள் உள்ளன. திருநாவுக்கரசு நாயனாரின் தீராத சூலை நோய் என்ற வயிற்று வலியை, அவரது தமக்கை திலகவதி திருநீறை வயிற்றுப் பகுதியில் தடவச் செய்துதான் குணப்படுத்தினார். இதேபோல்,

"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே"

எனப் பாடி பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் வெப்பு நோயை, திருஞானசம்பந்தர் பெருமான் திருநீறு கொண்டுதான் குணப்படுத்தினார்.

யாராலும் வெல்ல முடியாதது அக்னி. அதேபோல், விபூதி அணிந்தவரை துர்சக்திகள் நெருங்க முடியாது. சிவ சின்னங்களில் ருத்ராட்சத்துக்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவது இந்த திருநீறுதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x