Last Updated : 06 Jan, 2025 03:30 PM

1  

Published : 06 Jan 2025 03:30 PM
Last Updated : 06 Jan 2025 03:30 PM

ஏழாவது மலையில் குடிகொண்டிருக்கும் வெள்ளியங்கிரி ஈசன்

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. மொத்த பயண தூரம் 6 கி.மீ. ஆகும். கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப் பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலை உச்சியை அடைந்து, வெள்ளியங்கிரி ஈசனை வழிபடலாம்.

முதல் மலை: முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும், படியின் உயரம் முக்கால் முதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும், அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும்போது, இருட்டாகத்தான் இருக்கும். இம் மலையில் மூங்கில், தேக்கு, வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும்போது, லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும்போது அந்த இரவு நேரத்திலும் வியர்த்து கொட்டும். மலை ஏறும்போது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு சென்றால், எந்தவித சலிப்பும் தெரிவதில்லை. ஏழு மலைகளில் முதல் மலை அதிக உயரம். சுமார் ஒன்றரை கி.மீ. இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சந்நிதி உள்ளது.

இரண்டாவது மலை: இந்த மலையில் சிற்சில இடங்களில் சமவெளியும், படிகளும் இருக்கும். சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. இந்தப் பாறையில் ஏறும்போது புதுமையாய் இருக்கிறது. இம்மலையில் மிளகு, திப்பிலி, மூங்கில், வேங்கை போன்ற தாவர மர வகைகள் காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.

மூன்றாவது மலை: மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு தொடங்குகிறது. இதற்கு கைதட்டிச் சுனை என்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால், பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கைதட்டிச் சுனை என்ற பெயர்.

நான்காவது மலை: ஒருவிதமான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால், அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும், பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது. இந்த நான்காம் மலையில்தான் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அடைந்திருக்கிறார். எனவே, ஒட்டர் சமாதி என்கிற பெயர் வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். இம்மலையை திருநீர் மலை எனவும் கூறுவர்.

ஐந்தாவது மலை: ஐந்தாம் மலைக்கு பீமன் களியுருண்டை மலை என்று பெயர். பஞ்ச பாண்டவர்கள் தாராபுரத்தில் தங்கி இருந்ததாகவும், அப்போது வெள்ளியங்கிரிக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது. எனவே, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் “அர்ச்சுனன் தலைப்பாறை” போன்ற இடங்களெல்லாம் இங்கே உண்டு. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும்போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதிவேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும்.

ஐந்தாம், ஆறாம் மலைகள் ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கும். இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது. இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 60 – 70 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது மலை: ஆறாவது மலை கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்கே பாயக்கூடிய சுனை ஆண்டி சுனை. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத சுகமான அனுபவம் என்கின்றனர் பக்தர்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை. எனவே, இவற்றுக்கு திருநீற்றுமலை என்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டுசெல்வது பக்தர்களின் வழக்கம்.

ஏழாவது மலை: சுவாமி முடி மலை என்று பெயர்கொண்ட ஏழாவது மலைமேல் ஏறுவது, முதல் மலையில் ஏறியபோது இருந்த அதே அளவு சிரமமும், சவாலுமானது. இதில், பெரும் பாறைகள் மூன்றும் சேர்ந்து இயற்கையாகவே தோரணம்போல் அமைந்திருக்கும் அரிய காட்சி கண்களுக்கு விருந்தாகிறது. இதைத் தோரணவாயில் என்றும் அழைக்கிறார்கள்.

இவ்வாயிலைக் கடந்தால் விநாயகர் சந்நிதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சந்நிதி உள்ளது.இதையடுத்து, ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. ஏழாவது மலையில் இருக்கிற சுயம்புலிங்கம் அனைவராலும் வழிபடப்படுகிற வெள்ளியங்கிரி ஈசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x