Published : 03 Jan 2025 04:50 AM
Last Updated : 03 Jan 2025 04:50 AM

சிவனும் சிவத்தலங்களும் உள்ளம் பெருங்கோயில்... ஊனுடம்பு ஆலயம்!

உடலுக்கு உணவு வேண்டப்படுவது போல, உயிருக்கு வேண்டப்படுவது உள்ளம் நெகிழ்ந்த ஆலய வழிபாடு. `ஆ' வாகிய உயிர் இலயப்படும் இடம் ஆலயம் எனப்பட்டது. ஆலயம் எனினும் கோயில் எனினும் ஒன்றே. கோயில் மனித அங்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால், உள்ளம் பெருங்கோயிலாகவும், ஊனுடம்பு ஆலயமாகவும் கருதப்பட்டது.

பெருங்கோயில் என்பது கோயிலின் உள்ளிருக்கும் கருவறையையும் (கர்ப்பக் கிருகம்), ஆலயம் என்பது சுற்றியுள்ள கோயில் பகுதியையும் குறிக்கும். கோயில் வழிபாடு மக்களின் சமுதாய வாழ்வின் வாழ்க்கை நெறியாக இருந்தது. எனவே, சமய, சமுதாய வளர்ச்சிக்குத் தாயகமாய் விளங்குபவை கோயில்களாகும். கோயில்கள் இயற்கை எழில் மிகுந்த, வளமான, நீர்நிலையுள்ள இடங்களில் அமைத்ததால், அவை கடவுளரின் உறைவிடங்களாயின.

உடல், உள்ளம், அறிவு, செயல் என அகக்கண்ணால் மட்டுமின்றிப் புறக்கண்களாலும் வழிபடும் தெய்வங்கள் உறையும் ஆன்மிக இருப்பிடமாகிய கோயில்கள் மூவகைப்படும். அவை, 1. தானாக உருவானவை, 2.தேவர்கள் அமைத்தவை, 3. முனிவரும், மனிதரும் ஏற்படுத்தியவை என்பன. இவ்வகையில் கோயில்கள் அமைந்த இடங்கள் தலங்கள் எனப்பட்டன. அவை, இறைவன் உறையும் தலங்களாக இருந்ததால் 'திரு' என்ற அடைமொழி பெற்றுத் `திருத்தலங்கள்' ஆயின.

இத்தகைய தெய்வத் திருத்தலங்கள் திருக்கோயில், தேவக்கிருகம், தேவாகாரம், தேலாயதனம், தேவாலயம், தேவமந்திர், தேவஸ்தானம், அர்ச்சாக்கிருகம், கோட்டம் எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டன.

கோயில்கள் உலக மக்களைத் துன்பக் கடலிலிருந்து கரையேற்றும் துறையாக விளங்கியதால் `துறை' என்றும், குளிர்ச்சியைத் தரும் நீர்நிலைகளாக இருந்ததால் `தளி' என்றும், ஈசன் அமர்ந்திருக்கும் தலங்கள் `ஈச்சுரம்' என்றும், இறைவன் வீரம் விளைவித்த கோயில் `வீரட்டானம்' என்றும், மக்கள் முறையீட்டுக்கு அருள்நீதி வழங்கிய கோயில் `அம்பலம்' என்றும், இறைவன் சிறப்பாக நிலைகொண்டிருந்த கோயில் `தானம்' என்றும், இறைவனுக்குத் தானே தோன்றியவை `தான்தோன்றிமாடம்' என்றும், பேரழகு நிறைந்தவை `மாகாளம்' என்றும் வழங்கப்பட்டன. அம்பர் என்னும் திருப்பதியில் அழகுற அமைந்த கோயிலை `அம்பர் மாகாளம்' என்றும் அழைக்கப்படுவது அறியத்தக்கதாகும்.

"நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமா னென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே"

(திருமந்திரம் 1418)

கோ-இல் என்றால், இறைவனது வீடு என்பதே சிறந்த பொருளாகும். மனிதனது மனம், அறிவு, செயல் முதலான அந்தக்கரணங்களும் ஒன்றி வழிபடும் இடம் கோயிலாகும். கோயில் இல்லாத ஊரானது திருவில்லாத ஊராக அடியார்களால் கருதப்பட்டது. இதனைத் திருநாவுக்கரசர்,

"திருக்கோயில் இல்லாத திருவிலூரும்
திருவெண்ணீ றணியாத திருவிலூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும்
பாங்கினொடு பலதளிகள் இல்லாவூரும்
விருப்பொடு வெண்சங்கம் ஊதாவூரும்
விதானமும் வெண்கொடியும் இல்லாவூரும்
அரும்பொடு மலர்பறித்திட் டுண்ணாவூரும்.
அவையெல்லாம் ஊரல்ல அடவிகாடே "

என்கிறார். அவர் திருக்கோயில் இல்லாத ஊரைத் திருமகள் தங்காத, செல்வம் இல்லாத ஊர் என்றும், அப்படிப்பட்ட ஊர் விலங்குகள் வாழும் காட்டுக்கு ஒப்பானவை என்றும் கூறியுள்ளார்.
பண்டைக்காலத்தில் கோயில்கள் நதிக்கரை, மலைகள், பூங்காக்கள், சோலைகள், ஊற்றுள்ள இடங்கள், அற்புதம் நிகழ்ந்த இடங்கள், முனிவரும் சித்தரும் தவம் செய்த இடங்கள், பெரியோர் அல்லது அடியார்கள் முக்திபெற்ற தலங்கள் போன்ற அழகான, வளமான, சிறப்புமிக்க இடங்களிலேயே அமைந்தன. இத்தகைய இயற்கை எழில்மிகுந்த வசதியான நீர்நிலைத் தீர்த்தங்கள் உள்ள இடங்களில் அமைந்த கோயில்கள்தான் கடவுளரின் உறைவிடங்களாயின.

தலபுராணங்கள்: இறைவனின் தலம், தீர்த்தம், தலமரம் ஆகியவற்றின் பெருமைகளையும், சிவனது அருட்செயல்களையும் விளக்கக் கூடியவை தலபுராணங்கள் எனப்பட்டன. தலபுராணங்கள் தலங்களை மையமாகக் கொண்டு தொகுக்கப் பெற்றன. வடமொழியில் பொதிந்து வைக்கப் பெற்ற தொன்மையான பழங்கதைகள், தமிழில் தலபுராணங்களை அறிவிக்கும் மூலங்களானது.

தலபுராணங்கள் புராணச் சிறப்பையும், இறைச் சிறப்பையும், இறைவழிபாட்டுச் சிறப்பையும், அடியார்கள் அருள்பெற்ற பெருமையையும், இயம்புவனவாக இருந்தமையால், அவை அழியாப் புகழ்பெற்றன. மேலும், புராணம் கொண்ட நிலையாலும், தல வரலாற்றாலும், வரலாற்றுப் பெருமையாலும், தீர்த்தச் சிறப்பாலும், தல விருட்சங்களாலும் சிறந்தனவாய் இருந்தன. இதனை,

"தலவி சேடமும் தீர்த்தமார் விசேடமும் தக்க
நிலவு வேணியன் மூர்த்திமெய் விசேடமும் நிமலன்
அலகி லாவருட் கருணையா லமைந்திடு சிறப்பின்
உலகி லெப்பதி உளங்கொள உரைப்பாய்" (திருச்சுழி பாயிரம் 201)
எனத் திருச்சுழியியற்பாயிரம் கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x