Last Updated : 02 Jan, 2025 06:45 AM

1  

Published : 02 Jan 2025 06:45 AM
Last Updated : 02 Jan 2025 06:45 AM

யேசு​தாஸின் `சர்​வேசா'!

பெங்களூரூவைச் சேர்ந்த பிரபல வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான மனோஜ் ஜார்ஜ் மற்றும் கர்னாடக இசைப்பாடகரும் அருட்தந்தையுமான பால் பூவத்திங்கள் (கேஜே.யேசுதாஸின் சீடர்) ஆகியோரின் முன்முயற்சியில் `சர்வேசா' என்னும் இசைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல சம்ஸ்கிருத அறிஞர் பேராசிரியர் பி.சி. தேவஸ்ஸியா எழுதியிருக்கும் `கிறிஸ்துபாகவதம்' படைப்பிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளுக்கு மனோஜ் ஜார்ஜ் இசையமைக்க, கே.ஜே.யேசுதாஸ் இந்தப் பாடலைப் பாடியிருப்பது, தேவதூதனுக்கு, புவியிலிருந்து விடுக்கப்படும் அழைப்பு அனுபவத்தைத் தருகிறது.

தொடக்க இசைக்குப் பிறகு, நடபைரவி ராகத்தின் ஜீவ ஸ்வரங்களை தன்னுடைய இறைஅனுபூதியுடன் கூடியகுரலில் தொட்டுக் காட்டுகிறார் யேசுதாஸ். `எங்கள் பிதாவே, அனைவருக்கும் ஆண்டவரே, மேலே பரலோகத்தில் வாழ்பவரே, உமது நாமம் பரிசுத்தமானது, உமது ராஜ்யம் வரட்டும்' என்னும் பொருளைக் கொடுக்கும் `அஸ்மாகம் தாதா சர்வேசா / ஸ்வர்க்க லோகம் அதிஷ்டிதா' வரிகளை யேசுதாஸ் பாட, நூறு பாதிரியார்கள், நூறு கன்னியாஸ்திரிகளின் சேர்ந்திசைக் குரலும் யேசுதாஸின் குரலோடு ஐக்கிய மாகி, கேட்டுக் கொண்டிருக்கும் நம்மையும் பாடலோடு ஒன்றிணைய வைக்கிறது.

கொச்சியின் எலங்குளம் பகுதியிலுள்ள லிட்டில் ஃபிளவர் தேவாலயம், லாஸ்ஏஞ்சல்ஸ் இசைக் குழுவினர் இசையமைக்கும் காட்சியை லாஸ்ஏஞ்சல்ஸிலும், யேசுதாஸ் பாடும் காட்சிகளை ஃபுளோரிடாவிலும் என இந்த இசைப் பேழைக்கான காட்சிப் பதிவு மூன்று இடங்களில் நடந்திருக்கிறது.

இந்த பாடலின் இசை வடிவத்தை போப் ஃபிரான்ஸிஸ் அண்மையில் வாடிகனில் முழுவதுமாகக் கேட்டு ரசித்து, இசைப் பேழையின் முகப்பில் கையெழுத்தும் போட்டு, பாடலை வெளியிட்டிருப்பது உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ மக்களிடையே அன்பையும் சமாதானத்தையும் வேரூன்றச் செய்திருக்கிறது. பாடலுக்கான வரிகள், மகாகவி பி.சி. தேவஸ்ஸியாவின் `கிறிஸ்துபாகவதம்' படைப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

பிளாக்கியில் சாக்கோ தேவஸ்ஸியா என்னும் இயற்பெயர் கொண்ட இவர், சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாளக் கவிஞர். மலையாளம், சம்ஸ்கிருதம் மொழிகளில் எண்ணற்ற இலக்கியப் படைப்புகளைப் படைத்தவர். யேசு கிறிஸ்துவின் சரித்திரத்தை சம்ஸ்கிருதத்தில் `கிறிஸ்துபாகவதம்' என்னும் பெயரில் காவியமாக எழுதினார். இந்தப் படைப்புக்காக சாகித்ய அகாடமியின் விருதை தேவஸ்ஸியா வென்றார். மலையாளத்தில் இவர் எழுதியிருக்கும் படைப்புகளுக்காக கேரள சாகித்ய அகாடமி விருதையும் இவர் வென்றிருக்கிறார்.

பரலோகத் தந்தையைப் பற்றிய பாடலை சம்ஸ்கிருதத்தில் உருவாக்கும் யோசனையை என்னுள் விதைத்தவர் அருட்தந்தை பால் பூவத்திங்கள்தான் என்னும் மனோஜ்ஜார்ஜ், "பாடலுக்கான இசையை இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் அமைத்திருப்பதாகத் தெரிவித்தார். பல்வேறு விதமான இசைப் பாணிகளின் வழியாக உலக மக்களை அன்பால் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் இந்த இறையிசைப் பாடல் வடிவத்தின் நோக்கம்.

பாடலின் சேர்ந்திசையை ஒலிப்பதிவு செய்தபின், பாடலின் பிரதானமான தொடக்கத்தை தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட காந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான கே.ஜே.யேசுதாஸ் பாடவேண்டும் என்று நினைத்தோம். அவரும் மிகவும் பக்தி மணம் கமழும் வண்ணம் பாடினார். இந்த இசை முயற்சி, அருட்தந்தை பால் பூவத்திங்கள், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு இசையின்வழி ஆற்றுப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் இருக்கும்" என்றார்.

பாடலின் காணொலியைக் காண: https://www.youtube.com/watch?v=9echIwvE0u0

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x