Published : 31 Dec 2024 04:19 AM
Last Updated : 31 Dec 2024 04:19 AM
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால், விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரால் மட்டுமே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட்டனர். இதனால், பெருமாள் மது, கைடபருடன் போர் புரிந்தார்.
ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால், எங்களுக்கு நீங்கள் கருணை காட்டவேண்டும் என பணிவாகக் கூறி, வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றனர்.
அசுர சகோதரர்கள், தங்களைபோல் பலரும் இந்த பாக்கியம் பெறவேண்டும் என்று எண்ணி, அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். எம்பெருமானே வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்குவாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி, அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் அசுர சகோதரர்கள்.
இருவரின் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டார் பெருமாள். அதேபோல், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது. இந்த ஏகாதசி நன்னாளில், ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீ மகாலட்சுமியின் அருளையும் பெறுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT