Published : 31 Dec 2024 03:41 PM
Last Updated : 31 Dec 2024 03:41 PM
பெருந்தாய்மைக் குணத்தில் பெரியாழ்வாருக்கு நிகர் யாருமில்லை என்று நாம் பெருமைப்படுகிறோம். ஆனால், தன்னிலும் சிறந்த தாயன்பர் ஒருவரை எண்ணி அந்தப் பெரியாழ்வாரே பெருமைப்படுகிறார்.
அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே
மனம் திருந்திய ஐஸ்வர்யார்த்திகள் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுவது போல எழுதப்பட்டுள்ள இப்பாசுரத்தில், ‘செல்வன்’ என்பவர்தான் பெரியாழ்வாரே கொண்டாடும் பெருமைக்குச் சொந்தக்காரர். இவரின் உண்மையான பெயர் செல்வ நம்பி.
இராமநாதபுரம் மாவட்டம் பெருங்கருணை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பின்னாளில் பாண்டிய மன்னன் வல்லபதேவனுக்கு ராஜ புரோகிதராகவும் குருவாகவும் விளங்கினார். 'முக்தியை அளிக்க வல்ல பர தெய்வம் எது?' என்று வல்லபதேவனுக்கு வினா எழுந்த போது, ஒரு விவாதம் நடத்துமாறு மன்னனுக்கு அறிவுறுத்தியது இந்த செல்வ நம்பி தான்.
திருவில்லிப்பூத்தூர் வடபத்ரசாயி பெருமாளுக்கு பூமாலை தொடுக்கும் பணிவிடை செய்து வந்த விட்டுணுசித்தர், விவாதத்தில் வெற்றி பெற்று, 'பெரியாழ்வார்' ஆனதும் இந்த செல்வ நம்பியால் தான். பெருங்கருணை என்னும் ஊரில் பிறந்ததாலோ என்னவோ எல்லோருக்கும் வாரி வழங்கும் வள்ளன்மை குணம், வற்றாத செல்வமாக இவரிடத்தில் பொங்கி வளர்ந்தது.
நீதி நெறி வழுவாத வாழ்க்கை முறை, திருமாலுக்கு இடையறாது பணிவிடை செய்யும் பேருள்ளம் ஆகிய இரு குணங்களும் நிரம்பப் பெற்றிருந்தவர், செல்வ நம்பி. அதனால் தான் இவரை 'அல்வழக்கு ஒன்றும் இல்லா' , 'அபிமான துங்கன்' என்னும் அழகான பாமாலைகளால் பெரியாழ்வார் அலங்கரிக்கிறார். திருக்கோட்டியூரில் வாழ்ந்ததால் கோட்டியர் கோன் என்றும் புகழ்கிறார்.
அல்வழக்கு என்னும் அழகான தமிழ்ச்சொல்லுக்கு தோஷம் ஏதும் இல்லாத அல்லது குற்றம் குறை ஏதுமற்ற என்று பொருள். அல்வழக்கு என்பதற்கு நல்லொழுக்கம் மிக்க மனிதர் என்பது ஒரு விளக்கம். உடம்பே ஆத்மா என நினைத்தல், சீவாத்மா சுதந்திரமானது என கருதுதல், தனக்கென மட்டும் வேண்டுதல், தன்னலத்துக்காக இறைவனுக்குத் தொண்டு செய்தல் முதலிய குற்றங்கள் இல்லாத மனிதர் என்பது இன்னொரு விளக்கம். 'அல்வழக்கு' என்னும் சொல்லை நாம் திருக்கோட்டியூர் வாழ் மக்களுக்கும் கூட ஓர் அடைமொழியாகக் கொள்ளலாம்.
துங்க என்றால் மேன்மை மிகுந்த. அபிமான என்றால் அன்புக்குரிய. அபிமான துங்கன் என்றால் என் அன்புக்குரிய மேலோனே என்று அர்த்தம். அறிவில் சிறந்தவர்கள் அன்பில் சிறந்து விளங்குவதில்லை. அன்பில் சிறந்தவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பதில்லை. செல்வ நம்பி இரண்டிலும் சிறந்தவராகத் திகழ்ந்தார்.
“திருமாலே, அப்பேர்ப்பட்ட செல்வ நம்பி எப்படி உனக்குப் பழம்பெரும் தாசரோ நானும் உனக்குப் பழம்பெரும் தாசன்” என்கிறார் பெரியாழ்வார். இங்கேயும் ஐஸ்வர்யார்த்திகளில் ஒருவராகத் தன்னைப் பெரியாழ்வார் முன்னிறுத்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓர் அழுக்கான பொருள் அழுக்கற்ற பொருளோடு சேர்ந்தால் அவ்வழுக்கற்ற பொருளும் அழுக்காகி விடும். ஆனால், இயல்பிலேயே களங்கமற்றவரான திருமால், களங்கம் கொண்ட ஐஸ்வர்யார்த்திகளோடு சேரும் போது , ஐஸ்வர்யார்த்திகளின் களங்கமும் நீங்குகிறது. திருமாலின் களங்கமின்மையும் அப்படியே நீடிக்கிறது.
இதனால் தான் திருமாலை பவித்திரனே என்கிறார் பெரியாழ்வார்.
அவன் தானும் தூய்மையானவன். மற்றவர்களையும் தூய்மையாக்குபவன்.
முந்தைய பகுதி > நாள்களில் சிறந்த நாள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 4
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT