Published : 31 Dec 2024 02:58 AM
Last Updated : 31 Dec 2024 02:58 AM
விருதுநகர் அருகே அமைந்துள்ள கோபால்சாமி மலை தங்கம்போல் தோற்றம் உள்ளதால், தங்கமலை எனவும் அழைக்கப்படுகிறது. இது மோதகம் என்ற குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கருங்கற்களால் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு விநாயகர், ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன. மலைக் குன்றை குடைந்து அரங்கநாதனுக்கு குடவரைக் கோயிலும், மலைமேல் கோபால்சாமிக்கும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
அனுமன் கும்பிடுவது போன்று இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கையின் துணைக்கொண்டு காற்றோற்றம் கிடைக்கும் வகை யில் 600 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஜன்னலும் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தைச் சுற்றி தசாவதார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு, பரத்வாஜ ரிஷி தங்கி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோபால்சாமி மலையில் கிணறு ஒன்றும் உள்ளது.
வெங்கட்ராம நாயக்கரும், அவரது மனைவியும் கிணறு தோண்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கிணற்றில் கங்கை நீர் ஊற்றாக கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நீரை புனிதநீராக பக்தர்கள் கருதுகிறார்கள். சொர்ணகிரி என்று அழைக்கப்படும் இக்கோயிலின் தங்கமலையானுக்கு சித்ரா பவுர்ணமி, வைகாசி பவுர்ணமி, புரட்டாசி 5 வார கருட சேவை, நவராத்திரி, திருக்கார்த்திகை ஏகாதசி போன்ற நாட்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். விருதுநகரிலிருந்து அழகாபுரி செல்லும் சாலையில் எரிச்சநத்தம் அருகே சுமார் 20 கி.மீ. தொலைவில் இக்குடவரைக் கோயில் அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT