Published : 27 Dec 2024 04:57 PM
Last Updated : 27 Dec 2024 04:57 PM

ஆண்டுக்கு ஒருமுறை அருள்பாலிக்கும் கோபிநாத சுவாமி!

கோபிநாதசுவாமி மலைக்கோயில். படங்கள்: நா.தங்கரத்தினம்

ரெட்டியார்சத்திரம் அருகே மலைமேல் குடிகொண்டிருக்கும் கோபிநாத சுவாமி, ஆண்டுக்கு ஒருமுறை மலை யிலிருந்து கீழே இறங்கிவந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு இந்த கோயிலின் சிறப்பம்சாகும்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் அமைந்துள்ளது கோபிநாதசுவாமி கோயில். இந்த கோயில் 1834-ம் ஆண்டு கட்டப்பட்டது. 450 அடி உயரத்தில் மலைக்குன்றின் மேல் உள்ள இக்கோயிலுக்குச் செல்ல 619 படிக்கட்டுகள் உள்ளன.

மலையடிவாரத்தில் பக்தர்கள் முடிகாணிக்கை செய்யும் வசதி, பொங்க லிட்டு வழிபட தனியாக மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கு முன் அடித்தள மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார் சந்நிதிகளில் வழிபட்டுச் செல்கின்றனர்.

மலை மீதுள்ள கோயில் கருவறையில், கண்ணபிரான் எனும் கோபிநாதன் தம் கைகளால் புல்லாங்குழல் பிடித்து ஊதுகின்ற தோரணையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அடுத்ததாக, உற்சவமூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகளை வைத்து காட்சியளிக்கிறார்.

கோபிநாதசுவாமி

கருவறையில் இடதுபுறம் தாயார் கோப்பம்மாள் எழுந்தருளியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை கிருஷ்ண ஜெயந்தி விழா நாட்களில் மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்துக்கு இறங்கி வந்து கிராமப்புறங்களில் திருஉலா சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் உபகோயிலான கொத்தப் புள்ளி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் தங்கி, பின்னர் மலைக்கோயிலுக்கு புறப் பட்டுச் செல்லும் நிகழ்வு நடைபெறும். கொத்தப்புள்ளி கோயிலில் கோபிநாதசுவாமி தங்கியிருக்கும் நாளில் உறியடித் திருவிழா நடைபெறுகிறது. விவசாயம் செழிக்கவும், தாம் வளர்க்கும் கால்நடைகள் நோய் நொடியின்றி நலமுடன் இருக்கவும், கோபிநாதசுவாமியை மக்கள் வழிபடுகின்றனர்.

இக்கோயில் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் பழநி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

கோபிநாதசுவாமி மலைக்கோயில் நுழைவு பகுதி.

கோயில் பூஜை நேரம்

தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை கோயில் திறந்திருக்கும். காலை 8 மணிக்கு காலை சந்தி அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்ஷை பூஜை ஆகியவை நடைபெறுகின்றன.

விழாக் காலங்களில் புரட்டாசி சனிக்கிழமை, மார்கழி மாதம், மாட்டுப் பொங்கல் நாட்களில் அதிகாலை 5 முதல் மாலை 6 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x