Published : 27 Dec 2024 04:43 PM
Last Updated : 27 Dec 2024 04:43 PM
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தின் இளவரசியாகிய வீரமாகாளியம்மன், வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருவதால், அப்பகுதி மக்கள் காளியம்மனை சிரத்தையோடு வழிபட்டு வருகின்றனர்.
பாண்டிய நாட்டின் சிறந்த பகுதியாய் விளங்கும் மதுரையம்பதியின் தென்மேற்கு திசையின் புறநகராக இருந்த ஜெய்ஹிந்துபுரத்தின் வயல்வெளிப் பகுதியில் சிறிய குத்துக்கல் வடிவில் மந்திர எழுத்துடன் அம்மன் காட்சி அளித்துள்ளார். அவ்வாறு கண்டு எடுக்கப்பட்ட அம்மனை, கிராமப் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுகூடி 22.3.1952-ம் ஆண்டு பங்குனி மாதம் வெள்ளிக்கிழமையன்று வீரமாகாளியம்மன் என்று திருப்பெயர் சூட்டினர். பின்னர், ஜெய்ஹிந்துபுரம் 2-வது முக்கிய வீதியின் வடக்குப் பகுதியில் கிழக்கு நோக்கி வீரமாகாளியம்மனை பிரதிஷ்டை செய்தனர்.
அடுத்தடுத்த காலங்களில், அம்மன் புன்னகைக்கும் முகத்துடன் மண் வேலைப்பாடுடன் உருவம் அமைத்தும், அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கோபுரமும் அமைத்தும் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் பங்குனி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின்போது பக்தர்கள் பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
திருவிழாவின் முதல் நாளான பால்குடத்தன்று 15 ஆயிரம் பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாகச் செல்கின்றனர். வேல் குத்துதல் மற்றும் பலவண்ண பறவைக் காவடிகளில் பக்தர்கள் வருவது மெய்சிலிர்க்க வைக்கும். பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெறும். இரண்டாம் நாள் அன்று அக்னிச்சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் அருள் பெற்றுச் செல்கின்றனர். மேலும், குழந்தை வரம் கேட்டு கொடுத்த அம்மனுக்கு கரும்பால் தொட்டில் கட்டி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT