Published : 26 Dec 2024 05:41 PM
Last Updated : 26 Dec 2024 05:41 PM

குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில்: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்றவாறு, மதுரையிலிருந்து காரைக்குடிக்கு செல்லும் சாலையில் குன்றக்குடியில் ஒரு சிறிய குன்றில் சண்முகநாதப் பெருமானாக முருகன் அருளாட்சி செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்துக்குட்பட்ட குன்றக்குடி கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. குன்றக்குடியில் மயில் போன்றிருக்கும் மலையின் மேல் தென்முகம் நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக கோயில் காட்சி தருகிறது. மலைக்கோயிலின் மூலவர் சண்முகநாதப் பெருமான்.

மயில் வடிவான திருத்தலத்தில் கண்ணன், நான்முகன், இந்திரன், வசிஷ்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் ஆகியோர் வழிபட்டு பேறடைந்த தலமாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், அகத்தியர், பாண்டவர்கள், கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வழிபட்டு வயிற்றுவலி நீங்கப் பெற்றதும் இத்தலத்தின் சிறப்பாகக் கருதப்படுகிறது.

இத்திருத்தலத்தின் பெருமைகளை அருணகிரிநாதர் உள்ளிட்ட எண்ணற்ற புலவர்கள் தங்களது பாடலில் பாடியுள்ளனர். இக்கோயிலில் சரவணப் பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாண்டவர் தீர்த்தம், சண்முகநதி முதலிய தீர்த்தங்கள் உள்ளன.

புராண வரலாறு: கயிலை மலையில் இருந்த முருகப்பெருமானை வழிபடுவதற்காக நான்முகன் முதலிய தேவர்கள் வந்தபோது, வாசலில் நின்ற மயிலைக் கண்டு முருகனது ஊர்தியாகும் பேறு அடைவதற்காகச் சூரனும், அவரது சகோதரர்களான பதுமன், சிங்கன், தாரகன் ஆகியோர் காஞ்சிபுரத்தில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர் என அந்த மயிலிடம் கூறினர். இதனைக் கேட்ட மயில் மனம் வருந்தி, முருகப்பெருமானை எண்ணி தியானம் செய்தது. முருகப்பெருமான் மயிலின் தியானத்துக்கு இரங்கித் தவத்திலிருந்த சூரன் முதலிய நால்வரையும் பூத கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.

அதன்பின், மற்றொரு நாள் நான்முகன், திருமால் மற்றும் தேவர்கள் முருகப்பெருமானை வழிபட கயிலை மலைக்கு வந்தனர். அப்போது, கணங்களாக இருந்த சூரனும், அவனது சகோதரர்களும் மயிலிடம் சென்று நான்முகனின் வாகனமாகிய அன்னமும், திருமாலின் வாகனமாகிய கருடனும் வேகமாகப் பரந்து செல்வதில் தங்களைக் காட்டிலும் மயிலுக்கு திறனில்லை என்று குறைத்து பேசியதாக பொய்யுரைத்தனர்.

இதைக்கேட்டு சினமடைந்த மயில், அன்னத்தையும், கருடனையும் விழுங்கிவிட்டது. முருகனை வழிபட்டு திரும்பிய நான்முகனும், திருமாலும் தங்களது வாகனங்களை காணாது முருகனிடம் முறையிட்டனர். நடந்ததை அறிந்த முருகன், மயிலிடம் சென்று அன்னத்தையும், கருடனையும் விடுவிக்குமாறு கேட்டார். இதையடுத்து, அன்னமும், கருடனும் விடுவிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, இடையூறு ஏற்படுத்திய குற்றத்துக்காக மயிலை மலையாக போகும்படி முருகன் சாபமிட்டார். இதற்கு காரணமாக இருந்த சூரன் முதலானோர்களை அசுரர்களாகவும் சாபமிட்டார். தவறை உணர்ந்த மயில் சாபவிமோசனம் கோரியது. அதற்கு முருகப் பெருமான், பாண்டிய நாட்டில் திருப்பத்தூருக்கு கிழக்கே உள்ள அரசவனத்துக்குச் (குன்றக்குடிக்கு) சென்று மலையாக இருக்குமாறும், அங்கு வந்து விமோசனம் அளிப்பதாகவும் அருளினார்.

மயில் அரசவனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமான் எழுந்தருளிய கயிலை மலையை நோக்கி வடப்புறம் முகமும், தென்புறம் தோகையுமாக நின்று மலை வடிவமானது. அதன்பின், அசுரர்கள் தேவர்களை துன்புறுத்தினர். சிவபெருமான் திருவுள்ளப்படி அவர்களை அழிக்க முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் எழுந்தருளி, சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழித்தார். பின்னர், முருகப்பெருமான் குன்றக்குடிக்கு எழுந்தருளி மயிலுக்கு சாப விமோசனம் வழங்கினார். மயிலின் வேண்டுகோளுக்கிணங்க குன்றக்குடி மலையில் சண்முகநாதப் பெருமானாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

இங்கு, ஆறுமுகமும், பன்னிரெண்டு திருக்கரங்களும் கொண்ட சண்முகநாதப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். மயிலை கந்தன், செட்டி முருகன், குன்றை முருகன் என பல திருநாமங்களுடன் திகழ்கிறார். கிரி என்றால் மலை, மயூரி என்றால் மயில், இந்த குன்றக்குடிக்கு மயூரகிரி என்றும் திருநாமமும் உண்டு.

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் சுவாமி எழுந்தருளல், தேரோட்டம் நடைபெறுகின்றன.

இவை தவிர, சித்திரை முதல் நாளில் பால்பெருக்கு விழா, ஆடியில் திருப்படி பூஜை விழா, ஆவணியில் பிட்டுக்கு மண் சுமந்த விழா, புரட்டாசியில் விஜயதசமி விழா, மார்கழியில் திருவாதிரை திருநாள் விழா, மாசியில் மகாசிவராத்திரி விழாக்களின்போது சுவாமி புறப்பாடு நடைபெறும். மருதிருவரில் பெரியமருது ராஜபிளவை நோயால் அவதிப்பட்டார். குன்றக்குடி முருகனிடம் வேண்டியதில் அந்நோய் நீங்கி குணமடைந்தார்.

அதற்காக, இத்திருக்கோயிலுக்கு முன்மண்டபங்கள் அமைத்து வழிபட்டனர். இதனால், திருக்கோயிலில் உற்சவ மூர்த்திக்கு எதிரே உள்ள மண்டபங்களில் மருதிருவர் சிலை உள்ளது. செட்டிநாட்டு நகரத்தார்கள் ஊர்கள் அனைத்தும், குன்றக்குடி கோயிலை மையமாக வைத்துத்தான் பிரிக்கப்பட்டுள்ளன.

நோய் நொடியில்லா வாழ்வு, திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், கல்வி, செல்வம் பெற வேண்டியும் பக்தர்கள் பால்குடம், காவடிகள், அலகு குத்துதல், அக்னிக் காவடியுடன் பூக்குழி இறங்கி நேர்த்தி செய்கின்றனர். குழந்தைகளை முருகப்பெருமானுக்கு தத்துக்கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இந்த மாவட்டத்தின் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், பழநி பாதயாத்திரைக்கு செல்லும்போது, குன்றக்குடி முருகன் கோயில் வாசலில் நின்று வேண்டி, சிதறுகாய் உடைத்து பிரார்த்தனை செய்து யாத்திரை மேற்கொள்கின்றனர்.

அதேபோல், பழநி பாதயாத்திரை முடிந்து திரும்பும் வழியில் குன்றக்குடியில் இறங்கி, முருகப்பெருமானை தரிசித்து செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 46-வது குருமகா சந்நிதானம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்து பல்வேறு திருப்பணிகளையும், அறப்பணிகளையும் செய்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x