Last Updated : 17 Dec, 2024 11:17 AM

 

Published : 17 Dec 2024 11:17 AM
Last Updated : 17 Dec 2024 11:17 AM

பெரியாழ்வார் சொல்லும் நான்கு குலங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 2

உலகியல் வாழ்க்கையின் மீது பற்று வைத்திருக்கும் ஐஸ்வர்யார்த்திகளுக்கு, உலகளந்த தெய்வமாகிய பெருமாளின் மீது பற்று வர வேண்டும் என்பது தான் பெரியாழ்வாரின் விருப்பம். இதை 'குலம்' என்னும் வார்த்தையை வைத்து விளையாடியே அவர் சாதித்துக் காட்டுகிறார்.

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை

இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு

தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே

"இருடீகேசன் என்னும் சிறப்புப் பெயருடைய திருமால் எல்லாப் பிரபஞ்சங்களுக்கும் தலைவன். அசுரர்களையும் ராட்சதர்களையும் கூண்டோடு அழித்தவனும் அவனே. அத்தகைய சிறப்பு மிகுந்த திருமாலின் அடியவர்களாய் இருக்கக்கூடிய ஐஸ்வர்யார்த்திகளே, உங்கள் பழைய தவறுகளை இனி செய்யாமல் திருமாலின் தாள் பணிந்து அவனது ஆயிரம் நாமங்களைச் சொல்லி பல்லாண்டு பாடுங்கள்" என்பது தான் இந்த பாசுரத்தின் திரண்ட கருத்து.

இந்தக் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய, குலம் என்னும் சொல்லை, பெரியாழ்வார் நான்கு முறை பயன்படுத்துகிறார். இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உலகங்கள் எண்ணற்றவை. அதனால் தான் அண்டக் குலம் என்கிறார் பெரியாழ்வார். இங்கே குலம் என்றால் அளவற்ற என்று பொருள். உலகங்களைக் குறிக்காமல் எண்ணற்ற பிரபஞ்சங்களை ( Multiverse) குறிக்கும் சொல்லாகவும் 'குலத்தை' பார்க்கலாம்.

அடுத்து இண்டைக் குலத்தை என்கிறார் பெரியாழ்வார். இண்டை இங்கே அசுரர்களையும் இராக்கதர்களையும் குறிக்கும். அவர்கள் பல்கிப் பெருகியிருப்பவர்கள். அதனால் தான் இண்டை என்று சொல்லுக்கடுத்து குலம் என்னும் சொல் வருகிறது. இங்கே குலம் என்றால் கூட்டம். ஐஸ்வர்யார்த்திகள் வேறு யாருமல்லர்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டிருப்போர் தான். இவர்களில், அபூர்வ ஐஸ்வர்யார்த்தி, பிரஷ்ட ஐஸ்வர்யார்த்தி என இரண்டு வகை உண்டு. இதுவரை கிடைக்காததால் பணம் மற்றும் பதவி மீது புதிதாக ஆசைப்படுவோர், அபூர்வ ஐஸ்வர்யார்த்திகள். இழந்த செல்வம் மற்றும் பதவியை மீண்டும் அடைய விரும்புவோர் பிரஷ்ட ஐஸ்வர்யார்த்திகள். இவர்களைத் தாம் தொண்டர் குலத்திலுள்ளீர் என்று பெரியாழ்வார் விளிக்கிறார். இங்கே குலம் என்பது வகை என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அற்ப உலகியல் இன்பங்களில் பற்று கொண்டிருக்கும் உங்கள் பழைய குணத்தை விட்டொழித்து விடுங்கள் என்பது தான் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து என்னும் சொற்றொடரின் பொருள். இதில் குலம் என்பது குணம் என்னும் பொருளில் கையாளப்பட்டிருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நான்கு 'குலங்களை' எல்லோரையும் ஒன்றிணைக்கக் கூட பயன்படுத்த முடியும் என்பதை இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் நிரூபணம் செய்திருக்கிறார். லெளகிக வாழ்வில் விழுந்து உழல்பவர்கள் தானே என்று பாகுபாடு பார்க்காமல், ஐஸ்வர்யார்த்திகளையும் ஆன்மிக பாதையில் ஆற்றுப்படுத்தும் பெரியாழ்வாரின் பேருள்ளம் கடவுளைக் காட்டிலும் பெரிது.

- நிரஞ்சன் பாரதி, தொடர்புக்கு: niranjanbharathi@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x