Published : 13 Dec 2024 03:43 PM
Last Updated : 13 Dec 2024 03:43 PM

கிரிவலப் பாதையில் உள்ள தீர்த்தங்களின் மகிமை | தி.மலை தீபத் திருவிழா சிறப்பு

மனிதர்கள் மக்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டியும் சாபங்கள் நேரிட்டபோதும், திசைக்காவல் தெய்வங்களுக்கு அவர்கள் அண்ணாமலையில் கோயிலும், குளங்களும் அமைத்து அண்ணாமலையாரை நோக்கி தவம் செய்து வந்தனர். அவ்வாறு தோன்றிய தீர்த்தங்கள் 320 ஆகும். காலப்போக்கில் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இன்றி பெரும்பாலான தீர்த்தங்கள் மறைந்து போனது. இருந்தாலும் தற்போது நல்ல நிலையில் உள்ள தீர்த்தங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

குற்றங்கள் நீக்கும் இந்திர தீர்த்தம்: திருவண்ணாமலையில், இந்திரலிங்கமும் இந்திர தீர்த்தமும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்குகின்றன. இவை, தேவர்கள் மந்திரங்களாலேயே துதி செய்யப்பட்ட அண்ணாமலைக்கு கிழக்கு திசையில் உள்ளன. தேவர்கள் அதில் தினசரி மூழ்குவதால், சந்தனக் குழம்பின் வாசனையும், கற்பக மலர்களால் ஆன மலையின் மணமும் கமழும். இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துதான் தான் செய்த குற்றங்கள் நீங்கப்பெற்றான். மேலும், இந்திர பதவியில் நீடிக்க உரிமை பெற்றான். இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவறம் பூண்டார். இந்த தீர்த்தம் இன்று ஐயங்குளம் என அழைக்கப்படுகிறது.

பாவத்தை நீக்கும் அக்னி தீர்த்தம்: அருணாச்சலேஸ்வரருக்கு தென்கிழக்கில் அக்னி லிங்கமும், அக்னி தீர்த்தமும் உள்ளது. இந்த தீர்த்தத்தில் தான் அக்னி தேவன் நீராடித்தான் பாவத்தை நீக்கிக் கொண்டான். பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் செம்மையான கயல்மீன் போன்ற கண்களையும், சிவப்பாகிய பவளம் போன்ற வாயையும், திருத்தமாகச் செய்யப்பட்ட அணிகலன்களையும் உடைய மாதர்களால் வந்து பொருந்திய பாவம் தீரும். தருமம், தவமும் சேரும்.

உடலை பொன் வடிவமாக்கும் எமன் தீர்த்தம்: மலையின் தெற்கு திசையில் எமன் தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் உடல் பொன் வடிவம் ஆகும். உடலில் உள்ள அனைத்து நோய்களும் ஒழிந்து போகும். எமன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை இந்த தீர்த்தத்தில் நீராடித்தான் தீர்த்துக்கொண்டார். இந்த எமன் தீர்த்தத்துக்கு தெற்கு திசையில் அகத்திய முனிவரால் ஏற்படுத்தப்பட்ட அகத்திய தீர்த்தமும் உள்ளது. இந்த தீர்த்தத்தில் புரட்டாசி மாதத்தில் மூழ்கி, தண்ணீரை உட்கொண்டால் நம்முடைய முகத்தை பார்ப்பவர்களும் தமிழ்கவி, கலை மகளும் அவரிடத்தில் வந்து தங்கியிருப்பார்கள்.

பகைகளை தீர்க்கும் நிருதி தீர்த்தம்: நீங்குவதற்கு அரியதாகிய நிருதி தீர்த்தம் நிருதி மூலையில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட அரிய பகைகள் எல்லாம் நீங்கும். இந்த தீர்த்தத்தில் நீராடியதின் பயனாக நிருதியானவன் சிவந்த நெருப்பு நிறம் போன்ற கண்களையும், பிளவுபட்ட வாயையும் உடைய ஒரு பேயைத் தன்வசம் ஆக்கிக்கொண்டான்.

வருண தீர்த்தம்: குற்றமற்ற அருணகிரிக்கு மேற்கு திசையில் வருண தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த வருண தீர்த்தத்தில் நீராடினால் 9 கிரகங்களும் நன்மையைக் கொடுக்கும். ஏனென்றால் அந்த 9 கிரகங்களும் இந்த தீர்த்தத்தில் தான் நீராடி தனக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொண்டன. இந்த தீர்த்தத்துக்கு வாயுதிசையில் வாயு தீர்த்தம் உள்ளது. அதில் மூழ்கினால் எல்லா துன்பமும் தீரும்.

வறுமையை போக்கும் குபேர தீர்த்தம்: அண்ணாமலையின் வடக்கு திசையில் குபேரலிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் வறுமை எல்லாம் நீங்கி, சிவபிரான் திருவடியை அடையலாம். இந்த குபேர தீர்த்தத்துக்கு அருகே வசிட்ட முனிவரால் அமைக்கப்பட்ட வசிட்ட தீர்த்தம் உள்ளது. இதில் வசிட்டர், ஐப்பசி மாதத்தில் மூழ்கி முனிவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப்பெற்றார். அப்படிப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு வேதத்துக்கு அங்கமாய் இருக்கின்ற சாத்திரங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கேனி போல விளங்கும். அவர்கள் பாவங்களும் கடப்பார்கள். அண்ணாமலையின் ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

திருவிளையாடல்களை செய்யும் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கள் உண்டாகும். அதே உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள். இந்த சிவகங்கை தீர்த்தத்துக்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. திருமால் வராக அவதாரம் எடுத்த போது இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார். எனவே இந்த தீர்த்தம் பெரும் சிறப்பாக விளங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x