Published : 12 Dec 2024 06:10 AM
Last Updated : 12 Dec 2024 06:10 AM
திருநெல்வேலி மாவட்டம் இடைகால் தியாகராஜர் கோயில் தென் திருவாரூர் தலம் என்று போற்றப்படுகிறது. இத்தலத்தில் ஈசனின் மணக்கோலத்தை இன்முகத்துடன் நந்திதேவர் கண்டுகளிக்கிறார் என்பது தனிச்சிறப்பு. ஒரு சமயம் கைலாய மலையில் பரம்பொருளான பரமேஸ்வரனுக்கும் உமா மகேஸ்வரிக்கும் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ திருமண வைபவம் நடைபெற இருந்தது.
அது சமயம் பூமியின் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்ததைக் கண்டு அனைவரும் மனம் பதைத்தனர். அந்த வேளையில் இந்த இடரை சரிசெய்யவும், தென்பகுதி பூமியை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வரவும் அகத்திய முனிவரை உடனடியாக தென்பகுதி சென்று சேர ஈசன் கட்டளையிட்டார். இதனால் மனம் வருந்திய அகத்திய முனிவர், தான் தென்பகுதி சென்றாலும், ஈசனின் மணக்கோலக் காட்சியை அவ்விடத்தில் தரிசிக்கும் பேற்றை அருள வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் வைத்தார். ஈசனும் அவ்வாறே வரமளித்தார்.
அதன்படி தென் பொதிகை மலைக்கு வந்து தங்கியிருந்த வேளையில் அகத்தியருக்கு, மகேஸ்வரன் தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளினார். இந்த தரிசனம், அகத்திய முனிவருக்கு மட்டுமல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் இருக்கும் தென் திருவாரூர் என்று அழைக்கப்படும் இடைகால் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் நந்திதேவருக்கும் கிடைத்தது.
இடைகால் திருத்தலத்தின் வெளிச்சுற்றில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தி மண்டபத்தில் உள்ள நந்திதேவர் தனது இடத்தில் இருந்தபடி தலையை மேற்குப் பக்கமாகத் திருப்பி இத்திருமணக் கோலத்தை இன்முகத்துடன் கண்டு தரிசிக்கும் காட்சியை இத்தலத்துக்கு வரும் பக்தர்களால் காணமுடிகிறது.
கிபி 16-ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சியாளர்களால் இடைகாலில் கற்றளியாக சிவன்கோயில் எழுப்பப்பட்டது. அவ்வேளையில் சுவாமியின் பெயர் திருவாம்பிகை ஈஸ்வரமுடையார் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருள வெளிச்சுற்றில் கொடிமரம் நிறுவி, தேர் ஒன்றையும் உருவாக்கித் தந்தான் பெருமானாயன் காளிங்கன் என்பவன். மேலும் கிருஷ்ணப்ப நாயக்கர், அச்சுததேவராயர், சதாசிவதேவராயர், கண்டியத் தேவன், இராமராஜவிட்டல ஈஸ்வர மகாராஜா, சின்ன பசவப்ப நாயக்கர், அஞ்செழுத்து உடையார் என பல மன்னர்கள் இக்கோயில் திருப்பணி, நித்ய பூஜை மற்றும் விழா செலவினங்களுக்கு ஏராளமான தானங்களை செய்துள்ளனர்.
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் முள்ளிநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் இவ்வூர் அடங்கியிருந்தது. இப்பகுதியில் இடைகால், தென்திருப்புவனம், அத்தாள நல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடைமருதூர், என்ற பஞ்சபூதத் தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் இடைகால், நிலத்தைக் குறிக்கும் தலமாகும்.
பிரதான வாசலில் 3 நிலை கோபுரம் உள்ளது. இதையடுத்து பிரம்மாண்ட சிற்பங்கள் உள்ள 16 தூண்கள் தாங்கி நிற்கும் வசந்த மண்டபம் உள்ளது. கோபுரஉள்பக்க விதானத்தில் நாயக்கர் கால மூலிகை வண்ண ஓவியங்கள் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கற்றளி கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்பாள் சிவகாமி உடனுறை தியாகராஜப் பெருமான் கருவறை மூலவராக எழுந்தருளியுள்ளார். திருவாரூருக்கு நிகரான தலமாக கருதப்பட்டு வணங்கியதால் தென் திருவாரூர் என பக்தர்களால் அழைக்கப்பட்டது. கோஷ்டத்தில் அருள்பாலிக்கும் குருபகவான் இத்தலத்தில் வித்தியாசமாக இடது காலை மடக்கியும், வலது காலை தொங்கவிட்டபடியும் காட்சி அருள்கிறார். காலடியில் சர்ப்பம் உள்ளது.
இத்தலத்தில் நவகிரக சந்நிதி இல்லை. நாகர் சந்நிதியில் ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார பூஜை நடத்தப்படுகிறது. ஆவணி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. மாதாந்திர பௌர்ணமி நாளில் திருவாதவூரார் அருளிச் செய்த திருவாசக முற்றோதல் நடைபெறும்.
சித்ரா பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி, மாசி மகம் ஆகிய 3 நாட்களில் அன்னாபிஷேக விழா கொண்டாடப்படுகிறது. தேய்பிறை பஞ்சமியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கந்தசஷ்டி, ஆடிப்பூரத்தையொட்டி அம்பாளுக்கு வளைகாப்பு, மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, நவராத்திரிகொலு உற்சவம், தில்லைக் கூத்தருக்கு ஆண்டுக்கு ஆறு கால பூஜைகள் மற்றும் தினமும் இருவேளை நித்ய பூஜைகள் நடைபெறுகின்றன. உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் மண்டப கட்டுமானமாக அமைந்துள்ளது.
உள்சுற்றில் சப்தகன்னிமார், சுரதேவர், கன்னி மூலை கணபதி, கரியமாணிக்கப் பெருமாள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் சந்நிதிகள், கனகசபை, அதிகாரநந்தி ஆகியவை உள்ளன. விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலமான கிபி 16-ம் நூற்றாண்டில் இவ்வூரில் ஏராளமான படைவீரர்கள் தங்கியிருந்தனர்.
அவர்கள் போர் பயிற்சி செய்த கருவிகள், தடயங்கள் போன்றவற்றை பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றைக்கும் நம்மால் காண முடிகிறது. பிரதான வாசலான கிழக்குப்பக்க நுழைவாயிலில் பிரம்மாண்டமான கட்டமைப்பில் ராஜகோபுரம் ஒன்றின் கட்டுமான திருப்பணி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பின்னர் ஏதோ அறிய முடியாத காரணங்களால் அக்கோபுரத் திருப்பணி அரைகுறையாக நின்றுபோய் விட்டது. தற்போது அடியார் பெருமக்களின் தீவிர முயற்சியால் மகா கும்பாபிஷேக திருப்பணி தொடர்பான விஷயங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆண்டுதோறும் புரட்டாசி 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை காலை சூரிய உதயக் கதிர்கள் மூலவர் தியாகராஜப் பெருமான் மீது தங்கமயமாக படர்வது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
அமைவிடம்: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் - கடையம் செல்லும் நெடுஞ்சாலையில் 30 கிமீ தூரத்தில் இடைகால் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் கோயில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT